மாறாத மாற்றம்!




பூமியில் உள்ள தண்ணீரின் அளவு எப்போதும் மாறுவதில்லை என்கிறான் என் நண்பன். அது எப்படி?
 எஸ்.வெங்கட், 9ம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை.

பூமி கிரகத்தில் எக்கச்சக்கமான அளவு தண்ணீர் இருக்கிறது இல்லையா? உண்மையில் அதன் மொத்த அளவு ஒருபோதும் மாறுவதில்லை. வடிவங்கள் மட்டுமே மாறிக்கொண்டே இருக்கின்றன.

தண்ணீர் தண்ணீராகத்தானே இருக்கும்? அதற்கு ஏன் வெவ்வேறு கெட்அப் தேவை என்கிறீர்களா? மாற்றம் என்பதைத் தவிர மற்ற எல்லாமே மாறிக்கொண்டே இருக்கும் என்ற விதி தண்ணீருக்கும் பொருந்தும். ஆறு, ஏரி, குளம், குட்டை, கண்மாய் மற்றும் கடலில் தண்ணீராக இருக்கிறது. ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருக்கும் ஐஸ் கட்டி கூட தண்ணீரின் இன்னொரு உருவம்தானே? மேகம், பனி, மழை, ஊற்று  இப்படி தண்ணீரின் அவதாரங்கள் பல!

ஆபரணக் கற்கள் எப்படி உருவாகின்றன?
 அ.கலா, 9ம் வகுப்பு, எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி, சென்னை.

ரூபி, சபையர் கற்கள் ஆழமான வீழ்படிவுப் பாறை அடுக்குகளில் உருமாற்றம் காரணமாக உருவாகின்றன. மேக்மா குழம்பு குளிரும்போது உருவாகும் ஒரு பாறையில் தாதுக்கள் சேர்வதால் டோபஸ், அக்வாமரைன் மற்றும் சில கற்கள் தோன்றுகின்றன.

டர்க்காய்ஸ் என்ற ஆகாய நீல ரத்தினக்கல், ஓபல் என்ற பல நிறம் காட்டும் ரத்தினக்கல், அமெத்திஸ்ட் என்ற செவ்வந்திக் கல், வைடூரியக் கல் ஆகியவை பூமித் தரைக்கு அருகிலேயே கிடைக்கின்றன. சிலிகா கலந்த நீர் போன்ற தாது வளம் கொண்ட திரவங்கள் ஆவியாவதால் இவை தோன்றுகின்றன.

ஜெம் படிகங்கள் வளர்ச்சியடையும் போது,  மாசு கலப்பதால் அவற்றின் வண்ணம், மதிப்பில் வேறுபாடு ஏற்படும். உதாரணத்துக்கு... அலுமினியம் ஆக்சைடால் உருவாகும் ''கரண்டம்'' என்ற நிறமற்ற தாதுப்பொருளில் குரோமியம் அணுக்கள் அடைபடுமானால், அது ‘ரூபி’ என்ற சிவப்புக் கல்லாக மாறிவிடும்.

 அதே போல சுத்தமான வைரத்துக்கு நிறமே கிடையாது. மதிப்பு வாய்ந்த நீல வைரங்கள் உருவாவது எப்படித் தெரியுமா? கார்பன் லேட்டிஸ் படிகங்களில் போரான் அணுக்கள் சேரும்போது வைரம் நீலமாக பிரகாசிக்கிறது!