நவீன மருத்துவத்தின் முன்னோடி



இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவிசென்னா, ‘நவீன மருத்துவத்துறையின் தந்தை’ என கொண்டாடப்படுகிறார். கி.பி.980ம் ஆண்டில் பாரசீக நாட்டில் ‘பல்க்’ என்ற இடத்தில் பிறந்தார்.

இவர் தனது 18வது வயது எட்டும் முன்னரே மருத்துவப் பணியை மேற்கொண்டார். நோய்களைக் கண்டறிவதிலும், சிகிச்சை தருவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். இவரது மருத்துவ அறிவு கண்டு மூத்த மருத்துவர்கள் வியந்தார்கள். சில சமயம் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைக் கூட அவிசென்னாவிடம் கேட்டு தெளிந்தார்கள்.

ஒரு சமயம் புகாரா மன்னருக்குக் கடுமையான நோய் ஏற்பட்டது. எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியவில்லை. அவிசென்னாவின் மருத்துவத் திறனைக் கேள்விப்பட்ட மன்னர், அவரை அழைத்து வர உத்தரவிட்டார். அவர் வந்து சிகிச்சை தந்த சில நாட்களிலேயே மன்னரின் நோய் குணமானது. அவிசென்னாவை தன் அரசவையில் அமைச்சராக்கி அழகு பார்த்தார் மன்னர்.

இதன்பின் அவர் புகழ் பல நாடுகளில் பரவியது. அவரை தங்களது அரசவையில் வைத்துக்கொள்ள பல மன்னர்கள் போட்டி போட்டனர். குவாரிஸம் நாட்டு மன்னரின் விருப்பத்தின் பேரில் அவிசென்னா அந்த நாட்டு அமைச்சரவையில் மருத்துவராக பணியில் சேர்ந்தார். இதே போன்று மஹ்மூது கஸ்னவி எனும் மன்னரும் அவிசென்னா தன்னிடம் இருக்க வேண்டும் என்று விரும்பினார். மன்னர்களின் கூண்டுக் கிளியாக வாழ விரும்பாத அவிசென்னா, யாருக்கும் தெரியாமல் அரண்மனையை விட்டு அகன்றார்.

தன் வாழ்விடத்தைத் தன் விருப்பப்படி மாற்றிக் கொண்டே இருந்தார். அந்த காலகட்டத்தில் மருத்துவத்துறையின் பல்வேறு நுட்பங்களைப் பற்றி ஆய்வு செய்து கண்டறிந்தார். அவற்றை விளக்கி மருத்துவ நூல்களை உருவாக்கினார். இவர் சுமார் 450 நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் 240 நூல்களே இப்போது கிடைத்துள்ளன. அதில் 40 நூல்கள் மருத்துவ நூல்கள். இவையே இன்றைய மருத்துவத்துக்கு அடிப்படை நூல்களாக அமைந்துள்ளன.

 திரவப் பொருட்களைக் காய்ச்சி ஆவியாக்கித் தூய்மைப் படுத்தும் முறையை முதன்முதலில் கண்டறிந்தவர் இவரே. கந்தக திராவகம், ஆல்கஹால் போன்றவற்றைத் தயாரிக்கும் வழிமுறைகளை அவிசென்னா கண்டறிந்தார். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை மென்மைப் பொருளாக்கி மருந்துடன் கலந்து தந்து நோய் தீர்க்கும் புதிய மருத்துவ முறையை அறிந்து கூறியவரும் இவர்தான். ஊசி மூலம் உடலுக்குள் மருந்தைச் செலுத்தி நோய் போக்கும் ‘இன்ஜெக்ஷன்’ முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டவர் இவர்.

குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் கருப்பையிலிருந்து வெளியே எடுக்கும் மருத்துவ முயற்சியில் முதலில் வெற்றி கண்டவர் இவர்தான். இஸ்பஹான் மன்னருடன் செல்லும்போது அவிசென்னா நோய்வாய்ப்பட்டார். அவரது உதவியாளர்கள் செய்த குளறுபடிகளால் கி.பி.1037ல் காலமானார். இவரது மறைவு மருத்துவத் துறைக்குப் பேரிழப்பு என்றால் மிகையல்ல!

சி.பரத்