மழைத்துளி... மழைத்துளி... ஜில் தகவல்கள்



தமிழ்நாட்டில் அக்டோபர் கடைசியில் ஆரம்பித்து, டிசம்பர் மாத மையம் வரை எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும். ஆனால் எப்போது ஆரம்பிக்கும் எப்போது முடியும் என்பதை துல்லியமாகச் சொல்லமுடியாது.

இந்தியாவில் மழையின் தாக்கம் கேரளாவில் துவங்கி, பிறகு இந்தியா முழுவதும் நகருகிறது. ஆகவே வானிலை ஆராய்ச்சி மையம், வருடா வருடம் கேரளாவில் மழை எப்போது துவங்கும் என்பதை முன்கூட்டியே அறிவித்துவிடும். ஆனால் அது முன் பின்னாக இருக்கும்.

2007, 2008, 2010 மற்றும் 2012ம் ஆண்டுகளில் மழை 24 நாட்கள் முன்னதாகவே துவங்கிவிட்டது! அதேசமயம் 2005, 2006, 2009, 2011 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தாமதமாகவே துவங்கியது. இவற்றில் 2009ம் ஆண்டு பஞ்ச ஆண்டாக அறிவிக்கப்பட்டது. சராசரி மழையை விட குறைவாக மழை இருக்குமானால் அது வறட்சி ஆண்டாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்!

உதாரணமாக கடந்த 50 ஆண்டுகளில் சராசரி மழை பொழிவு 89 செ.மீட்டர். 1901  2013 ஆண்டுகளிடையே 20 ஆண்டுகள் போதுமான மழை பெய்யாத வறட்சி ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டன. இந்த 20 வருடங்களில் 13 வருடங்கள் ‘எல்நினோ’வினால் மழை குறைவானது என உணரப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆண்டும் எல்நினோவின் பாதிப்பு உணரப்படும். அதன் மூலம் குறைந்தது 5 சதவீதம் குறைந்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் 60 சதவீத விளைநிலங்கள் மழையை நம்பித்தான் உள்ளன. இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு விவசாயம்தான் வாழ்க்கை. ஆகவே, மழை மிகமிக அவசியமான ஒன்று.

மழை பொய்த்தால் என்ன ஆகும்? விவசாயம் பாதிக்கப்படும். விவசாய மக்கள் வேலை தேடி நகரங்களுக்கு வருவார்கள். விலைவாசி உயரும். பணவீக்கம் கூடும். இதெல்லாம் வளர்ந்து வரும் ஒரு நாட்டுக்கு நல்லதல்ல! மொத்த ஜனத்தொகையில் பாதி விவசாயிகள் என்ற நிலையில் இதனால் தற்கொலைகள் கூடும்! இதெல்லாம் இல்லாமல் இருக்க வேண்டுமானால், மழை தாராளமாகப் பெய்ய வேண்டும். அதற்கு மரம் நட வேண்டும். அல்லது இருக்கும் மரங்களையாவது வெட்டாமல் தடுக்க வேண்டும்.

 ராஜிராதா, பெங்களூரு.