இனி காசநோய் கட்டுக்குள் இருக்கும்!



வந்தாச்சு புது மருந்து

மேற்கு ஆப்ரிக்காவில் பரவிக்கொண்டிருக்கிற எபோலா நோய் எங்கே இந்தியாவுக்கும் வந்துவிடுமோ என்று பயப்படுகிறோம். பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று உலகில் எங்காவது ஒரு தொற்றுநோய் பரவத் தொடங்கினால், உடனே நாம் மிரண்டு விடுகிறோம். அதேவேளையில் இந்தியாவில் சத்தம் இல்லாமல் 3 நிமிடத்துக்கு 2 பேர் என்று காசநோயால் இறந்துகொண்டிருக்கிறார்கள். இது குறித்து அவ்வளவாக விழிப்புணர்வு நம்மிடம் இல்லை என்பதுதான் சோகம்.

உலக காசநோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர். இங்கு வருடத்துக்கு சுமார் 22 லட்சம் பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இறக்கிறார்கள். ஒரு காசநோயாளி ஆண்டுதோறும் 10 முதல் 15 பேருக்கு இந்த நோயைப் பரப்புகிறார்.

 தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோய் குழந்தை முதல் முதியோர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஹெச்.ஐ.வி. மற்றும் நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு இது வரும் அபாயம் அதிகம்.

காற்றின் வழியாகப் பரவக்கூடிய இந்த நோய் ‘மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’ என்கிற பாக்டீரியாவால் உண்டாகிறது. இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர் இருமல், மாலை அல்லது இரவு நேரத்தில் காய்ச்சல், உடல் எடை குறைதல், சளியில் ரத்தம், பசிக்குறைவு, சோர்வு போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள். இது பெரும்பாலும் நுரையீரலைத் தாக்கினாலும் எலும்பு, முதுகுத் தண்டுவடம், மூளை, குடல், சிறுநீரகம், தோல் என பல உறுப்புகளைப் பாதிக்கக்கூடியது.

இந்தியாவில் 1993ல் உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன், ‘திருத்தப்பட்ட தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, ‘டாட்ஸ்’ (DOTS) என்று அழைக்கப்படும் ‘கூட்டு மருந்துச் சிகிச்சை’ அளிக்கப்படுகிறது.

இந்தச் சிகிச்சையை 6 மாதங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், காசநோய் முற்றிலும் குணமாகிவிடும். இந்த சிகிச்சை அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாகவே கிடைக்கிறது. என்றாலும், இன்றைக்கும் காசநோய் ஒரு விஷ விருட்சமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.

காரணம் என்ன?

காசநோய்க்கு மருந்து சாப்பிடாதது எவ்வளவு ஆபத்தானதோ, அதற்கு நிகரான ஆபத்தை உடையது மருந்தைப் பாதியில் நிறுத்திவிடுவது. இந்தியாவில் காசநோயை இன்னமும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதற்கு முக்கியக் காரணம் இதுதான்.

காசநோய் முற்றிலும் குணமாகக் குறைந்தது 6 மாதங்களுக்கு இடைவிடாமல் மருந்து சாப்பிட வேண்டும். ஆனால், மாத்திரைகள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள் நோயின் அறிகுறிகள் மறைந்துவிடுவதால், குணமாகிவிட்டது என்று நினைத்து பலரும் மருந்து சாப்பிடுவதைப் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள்.

அடுத்து, தனக்குக் காசநோய் இருப்பது அடுத்தவருக்குத் தெரிந்தால் சமூகத்தில் மரியாதை குறைந்துவிடும்; மற்றவர்கள் நம்மை ஒதுக்கி விடுவார்கள் என்று பயந்தே பலர் சிகிச்சை எடுத்துக்கொள்ள முன்வருவதில்லை. காசநோயாளிகளில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் பேர்  வரை தனியார் மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெறுகிறார்கள்.

இவர்களில் பலருக்குத் தொடர்ந்து மாத்திரை வாங்குவதற்குப் பண வசதி இல்லாததாலும், அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணம் செய்வது, வேளைப்பளு, வேலையின்மை போன்ற காரணங்களாலும் மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளத் தவறிவிடுகின்றனர். இவை அனைத்துமே காசநோயை ஒழிப்பதற்குத் தடையாக நிற்கின்றன.

ஆரம்ப சிகிச்சையில் அறிகுறிகள் மறைந்து, நோயின் தீவிரம் குறைந்தது போலத் தெரிந்தாலும், நோய்க்கிருமிகள் உடலில் செயலிழப்பதில்லை. மருந்துகளை விட்டு விட்டு எடுத்துக் கொள்ளும்போதும், பாதியில் நிறுத்தும்போதும், நோய்க்கிருமிகள் அந்த மருந்து களையே எதிர்த்துப் போராடுவதற்குத் திறனைப் பெற்றுவிடும்.

அதன்பிறகு ஏற்கனவே கொடுத்துவந்த மாத்திரைகளால் இந்தக் கிருமிகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியாது. இதன்விளைவாக, நோயின் தன்மை அதிகரித்து மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக (Multi Drug Resistance TB  MDR TB) அது உருமாறிவிடும். இதற்கு 2 வருடங்களுக்கு மேல் சிகிச்சை எடுக்க வேண்டும்.

மேலும், இவர்களால் பரவுகின்ற காசநோயும் மருந்துக்குக் கட்டுப்படாத நோயாகவே பரவுகிறது. தமிழகத்தில் மட்டும் வருடத்துக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நோயாளிகள் இந்த நிலைமையில் கண்டறியப்படுகிறார்கள். இவர்கள் இந்த நிலைமையிலும் சிகிச்சையை சரியாகப் பெறாவிட்டால், இன்னும் தீவிர நிலைக் காசநோயாக (Extensively Drug Resistance TB  XDR TB) மாறிவிடும். இது உயிருக்கு ஆபத்தைத் தருகின்ற மிக மோசமான நிலை. தமிழகத்தில் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது என்கிறது புள்ளிவிவரம்.

இந்தச் சூழலில் ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது அமெரிக்காவிலிருந்து. டெல்லி பல்கலைக்கழகமும் அமெரிக்காவில் உள்ள ஓரிகான் மாநில பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் 24 டெஸ்மெதில் ரிஃபாம்பிசின் (24 desmethylrifampicin) எனும் பெயரில் காசநோய்க்குப் புதிய மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தை மரபுசார் பொறியியல் தொழில்நுட்பத்தில் (Genetic engineering) தயாரித்துள்ளனர்.

ஏற்கனவே வழக்கத்தில் உள்ள காசநோய் மருந்துகளைவிட நன்றாகச் செயல்படுவது, இதன் கூடுதல் நன்மை. காசநோய்க்கு இப்போது பயன்பாட்டில் உள்ள ரிஃபாம்பிசின் எனும் மருந்து அமிக்கோலெடாப்சிஸ் மெடிட்டெரேனி (Amycolatopsis mediterranei S699) எனும் பாக்டீரியாவின் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்துக்கு காசநோய்க் கிருமிகள் எதிர்ப்பு உணர்வைப் பெற்றுவிட்டதால், புதிய மருந்தைக் கண்டுபிடிக்க அவசியம் ஏற்பட்டது.

எனவே, அமிக்கோலெடாப்சிஸ் மெடிட்டெரேனி பாக்டீரியாவின் மரபணுவை டி.என்.ஏ. பொறியியல் முறைப்படி (DNA recombinent technology)  மாற்றி அமைத்து, ஈஸ்ட் செல்களில் வளர்த்தபோது, இந்தப் புதிய மருந்து உருவானது. இதை பரிசோதனை முறையில் MDR TB மற்றும் XDR TB யால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குக் கொடுத்துப் பார்த்தபோது, நோய் முன்பைவிட நன்றாக கட்டுப்படுவது உறுதியானது. சபாஷ்!

(இன்னும் இருக்கு)

டாக்டர் கு.கணேசன்