நட்சத்திர நாயகன்!



தமது ‘விண்ணியல்’ ஆய்வு மூலம் உலகப் புகழ்பெற்று, இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர் தமிழக விஞ்ஞான மாமேதை சுப்பிரமணிமெடிக்கல் மிராக்கிள்யன் சந்திரசேகர். விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கு 1983ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவர் 1910ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் லாகூரில் (தற்போது பாகிஸ்தானில்) பிறந்தார். இவர் சர். சி.வி.ராமனுடைய உறவினர் என்பது கூடுதல் தகவல். சந்திரசேகரின் ஆரம்ப காலம் லாகூரிலும் லக்னோவிலும் கழிந்தது. அடுத்து குடும்பம் சென்னைக்கு வந்ததால், திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் மாநிலக் கல்லூரியில் மேல்நிலைக் கல்வியைத் தொடர்ந்து, அதே கல்லூரியில் இயற்பியல் துறையில் பி.ஏ. முடித்தார்.

1928ம் ஆண்டு புகழ்பெற்ற இயற்பியல் பேராசிரியர் அர்னால்ட் சம்மர்ஃபெல்ட், சந்திரசேகர் படித்த கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினார். அவரிடம் சந்திரசேகர் இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துக் கொண்டார். மேலும் அவை பற்றிய புத்தகங்களைப் படித்து தமது அறிவை வளர்த்துக்கொண்டார். வேதியியல், இயற்பியல், கணிதம், வானவியல் பற்றிய பாடங்களில் அதிக ஆர்வம் ஏற்பட்டு, அவை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார்.

1930ல் லண்டன் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரி யில் சேர்ந்தார். அங்கு அவருக்கு விண்மீன்களைப் பற்றி ஆய்வு செய்யும் ஆர்வம் ஏற்பட்டது. நட்சத்திரங்களின் பருமன்... அவற்றிலுள்ள வாயுக்கள், அவற்றின் செயல்பாடுகள் பற்றி ஆராய்ச்சிகள் செய்தார். பி.எச்.டி பட்டம் பெற்றார். அங்குதான் அவர் ‘அஸ்ட்ரோ பிசிக்ஸில்’ ஆய்வு நடத்தி புகழ் பெற்றார்.

நட்சத்திரங்களானது சூரியனைப் போன்று பல மடங்கு பருமன் உடைய பொருள் கற்றையை (Critical Mass) தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது. அது ஓர் எல்லையில் மெல்ல குறையும். இந்த நிலையை அவர் கண்டுபிடித்ததால் அது ‘சந்திரசேகர் எல்லை’ என்று அழைக்கப்படுகிறது. 1953ல் அவர் அமெரிக்கக் குடிமகனாக மாறினார்.

 நட்சத்திரங்களின் சுற்றுப்புறச் சூழல்களைப் பற்றி புதிய கோணத்தில் ஆய்வு மேற்கொண்டார். விண்ணில் கோள்கள் பார்க்க குடுவை போல காணப்பட்டாலும், திரவ வடிவிலும் சில கோள்கள் சுழல்வதை நிரூபித்தார்.

வெள்ளையான சிறிய நட்சத்திரத்தைப் பற்றி ஆய்ந்து, ‘சிறிய நட்சத்திரம் என்றாலும் அதிக எடை கொண்டது. அதோடு அதன் உட்கரு அணுகுண்டு போல வெடித்து... பிரகாசமாய் சூப்பர் நோவா என்ற நட்சத்திரங்களை உருவாக்கும்’ எனக் கண்டறிந்தார். சுப்பிரமணியன் சந்திரசேகர் 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி இதய பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகாகோவில் மறைந்தார்.

- சி.பரத்