மின்மினி...மின்மினி...



பூச்சிப் பூக்கள் 41

ஒளிர்தலும் நிறம் மாறுதலும் மேம்பட்ட உயிரினங்களான பாலூட்டி வகைகளுக்கு எப்போதுமே சிம்ம சொப்பனம்தான். இதில் ஒவ்வாத தட்பவெப்ப மாற்றங்களைச் சமாளிக்க சில விலங்குகள் ரோமச் சாயத்தைப் பிரிதொரு சாயலுக்கு அப்டேட் ஆக்குவது விதிவிலக்கு.

கீழ்நிலை உயிரினங்களில் சில தரை வாழ் இனங்களும் பல கடல் வாழ் இனங்களும் இத்தகைய ஒளிர்தலிலும், உடல் நிறம் மாறுதலிலும் கெட்டிக்காரத்தனத்தைக் கணக்கில்லாமல் கொண்டுள்ளன. ஒளிர் வித்தை!

இத்தகைய உயிரினப் படைப்புகளில், இயற்கையின் அற்புத சிருஷ்டி லாவண்யத்தோடு ஜொலிக்கும் ஜீவராசிகளில், மின்மினிப் பூச்சிக்கு ஏகப்பட்ட மார்க் இன்றைக்கும் இருக்கிறது. நாணயத்தின் இரு பக்கம் போல் வெளிச்சமும் வெப்பமும் இணைந்திருப்பது இயல்பு. இதில் ஒன்றின்றி மற்றொன்று அரிது. ஆனால் இந்த மின்மினிப் பூச்சிகள் பளிச்சென்று ஒளிர்ந்தாலும் கொஞ்சமும் சுடுவதில்லை. குளிர் வெளிச்சம்!

ஆரம்பப் பாடசாலைப் பருவத்திலிருந்தே நமக்கு நன்றாகப் பரிச்சயப்பட்ட இந்த மின்மினிப் பூச்சிகளை, நம்மில் யாரும் இன்றைக்கும் மறந்திருக்க மாட்டோம். மழைக்கால ராத்திரிகளில், முன்னிருட்டு வேளையில் இப்பூச்சிகள் விட்டு விட்டு ஒளிர்வதை வெகு நேரம் ரசித்ததும், அதில் சிலவற்றைப் பிடித்து தீப்பெட்டியில் அடைத்து, வீட்டுக்குக் கொண்டு வந்ததும் சற்றும் பிசகாமல் அப்படியே ஆழ் மனதில் மிச்சமிருக்கும். பாலகக் கல்வெட்டு!

நமது கிராமப் புறங்களில் இவற்றின் வெளிச்ச விளையாட்டினை சொற்பமாகவே நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கில் இப்பூச்சிகள் ஒன்று சேர்ந்து கொண்டு கும்மாளமாக ஒளிர்வதை நம் நாட்டில் பார்க்க முடியாது. இதைப் பார்க்க அமெரிக்காவுக்குத்தான் செல்ல வேண்டும். அங்கே உள்ள கிரேட் ஸ்மோக்கி மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள தேசியப் பூங்காவில்தான் இப்பூச்சிகள் ஆண்டுதோறும் வெளிச்ச விழாக்களை நடத்துகின்றன. உடலொளிப் பிரவாகம்!

ஆதி நாளில் இரவில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்த வேறு வேலையற்ற ஒருவன், எதேச்சையாய் கண்டு பிரமித்த மின்மினிப் பூச்சிகளின் ஒளி ஒப்பனையைச் சொன்னபோது, எவரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னால் அதைப் புரிந்துகொண்டு, அப்புறம்தான் இந்த அழகிய நிகழ்வை அனைவருக்கும் காட்சிப்படுத்த முற்பட்டார்கள். இப்போது இந்தப் பூங்காவிற்கு ஏகப்பட்ட பிரசித்தி!

இப்பூங்காவில் நிகழும் இந்த ஒளித் திருவிழா, ஆண்டு தோறும் தவறாமல் ஜூன் மாதத்தில் துவங்கி இரண்டு வார காலத்திற்கு அரங்கேற்றப்படுகிறது. அதுவும் குறிப்பாக, தினசரி ‘டஸ்க்’ எனப்படும் மாலை நேர மயக்கம் ஓய்ந்த பிறகு, 9:30 மணிக்கு மிகச்சரியாகத் தொடங்கி பல மணி நேரத்திற்குக் காட்சிப்படுத்தப்படுகிறது. எப்படி இப்பூச்சிகள் இத்தனை சரியாகக் காலப் பரிமாணத்தைக் கண்டறிகின்றன என்பது, நாளது தேதி வரை கண்டறியப்படாத ஒரு மூச்சு முட்டும் ஆச்சரியம்.

பொதுவாக இந்த மின்மினிப் பூச்சிகள் கோடைக் கால இரவுகளில் பெருமளவில் கூட்டமாக ஒன்றாய் இணைவதில்லை. இதனால் இவற்றின் வெளிச்சக் கீற்றுக்கள், ஓரிடத்தில் குவியாமல் வெகு பரவலாகப் போய் விடுகிறது. ஆனால் அடுத்து வரும் பருவத்தில், உலகத்துச் சுற்றுலாப் பயணிகள் ஒருவரையும் விடாமல் எல்லோரையும் ஈர்க்கின்ற வகையில், ஒருசேரக் கூடி, ஒரு மாபெரும் ஒளித் திருவிழாவையே நடத்துகின்றன. மத்தாப்பு நிகழ்ச்சி!

இந்த மின்மினிப் பூச்சிகளின் மினுக்கொளி நட்சத்திரம் போல் பளிச்சென்று இருக்கும். இந்தப் பளீரிடல் மூன்று வினாடி நிலைத்திருந்துவிட்டு ஒரு சேர, பவர்கட் மாதிரி அணைந்து ஆறு வினாடிகளுக்கு இருள் மௌனிக்கும். அப்புறம் மறுபடி. உயர மரங்களில் ஒளிரும் இக்காட்சியை ஒரு மைல் தூரத்தில் இருந்துகூட பார்க்க முடியும். ஒளி நீட்சி!

இந்தக் கண்காட்சியைக் காண வருகின்ற  உலகச் சுற்றுலாவாசிகளுக்கு, டிசம்பர் மாதத்தில் செய்யப்படும் கிறிஸ்துமஸ் அலங்காரம் நினைவுக்கு வரும். இப்பூங்காவிற்குள் இருக்கும் பலதரப்பட்ட மரம், செடி, மற்றும் கொடிகளின் மீது இந்த மின்மினிப் பூச்சிகள் அமர்ந்து கொண்டு, விட்டு விட்டு வண்ணமயமாக ஒளிர்வது, ஏதோ சீரியல் பல்புகளைக் கொண்டு மரங்களை அலங்கரித்தது போன்ற தோற்றமாகத் தெரியும். வசீகர ஒளிக்கலவை!

மின்மினிப் பூச்சிகள் எப்படி ஒளிர்கின்றன என்பது வியப்பூட்டும் ஒரு வேதியியல் விந்தைதான். ஆயினும் இதற்கான உடல் தகவுகளை இவை இயற்கையிலேயே பெற்றுள்ளன. இவற்றின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் தசைகள் இரு அடுக்குகளாக அமைந்துள்ளன.

இதன் செல்களில் லூசிஃபெரின் என்னும் ஒரு ரசாயனப் பொருளும் லூசிஃபெரேஸ் என்னும் ஒரு நொதியும் இருக்கிறது. தசைகளின் மேற் புறத்தில் மெல்லிய ஒளிரக்கூடிய பளபள தோல் போர்த்தியிருக்கும். இத்தோலுக்கு அடியில், நரம்பு நெட்வொர்க்குகளும் காற்றுக் குழாய்களும் நிறைந்திருக்கும்.

மினுமினுப்பதற்கான எரிபொருள் காற்றில் உள்ள ஆக்ஸிஜன்தான். இதை விரும்பும்போது காற்றுக் குழாய்களை இயக்கித் திறந்து பெற்றுக் கொள்கிறது. ஆக்ஸிஜன் உள்வாங்கப்பட்டவுடன் வேதியியல் மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கிறது. லூசிஃபெரினால் நிகழ்த்தப்படும் இவ் வினையை, கிரியா ஊக்கியாக செயல்பட்டு லூசிஃபெரேஸ் வேகப்படுத்துகிறது.

முதலில் லூசிஃபெரின் மாற்றமடைந்து இரு வேறு சங்கதிகளாக மாறி லூசிஃபெரேஸ் நொதியில் மிதக்கிறது. இந்த முக்கூட்டு வஸ்து ஆக்ஸிஜனுடன் கை கோர்த்துக் கொண்டு ஆக்ஸிலூசிஃபெரின் போன்ற ஒளி மூலக்கூறுகளாக மாறுகின்றன. காற்றிலிருந்து போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைத்தவுடன், இந்த மூலக்கூறுகள் நொதியிலிருந்து ரிலீசாகி ஆக்ஸிஜனுடன் சங்கமிக்க... மறுகணம் பளிச் பளிச்!

இப்பூச்சிகள் தாம் உருவாக்கும் மினுக்கொளிகளை இரவில் இரை தேடித் திரிகையில் டார்ச் லைட் போல் உபயோகிக்கின்றன. மேலும் சகாக்களுக்கு தம் இருப்பிடத்தை அறிவிக்கவும் சமிக்ஞைகளாகப் பயன்படுத்துகின்றன.

 இந்த ஒளிப் பாய்ச்சலை இவை பல வழிகளில் கட்டுப்படுத்த முடியும். அதாவது எனர்ஜியை வீணடித்துப் பகல் நேரத்தில் ஒளிர்வதில்லை. மேலும் இரண்டு மினுக்குகளுக்கு இடைப்பட்ட கால அளவை மாற்றியமைக்கத் தெரிந்திருப்பதோடு, வெளிச்சத்தை டிம்-பிரைட்டாக்கும் சாதுரியத்தையும் கொண்டிருக்கின்றன. சாகசப் பூச்சி!

(ஒளிரும்)

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்