நான் வெஜிடேரியன் ஆடு!



மர்கூர் என்றழைக்கப்படும் ஆடு, பாகிஸ்தான் நாட்டின் தேசிய விலங்கு. ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதிகள், வடக்கு பாகிஸ்தான், பலுசிஸ்தான் மற்றும் நம் காஷ்மீரின் சில இடங்களில் காணப்படுகிறது.

600 மீட்டர் முதல் 3600 மீட்டர் உயரம் வரை உள்ள மலைப்பகுதிகளில் காணப்படும் மர்கூர் ஆடு, 32 கிலோவிலிருந்து 110 கிலோ வரை எடை உடையதாக இருக்கும். இவை 9 ஆடுகள் வரை சேர்ந்து கூட்டமாக இருப்பினும், வயது முதிர்ந்தவை பெரும்பாலும் தனித்தே இருக்கின்றன.

சிந்து சமவெளி நாகரிக நகரான ஹரப்பாவில் உள்ள தொல்பொருள் அடையாளங்களில் மர்கூர் ஆடுகளின் ஓவியங்கள் காணப்படுகின்றன. இதில் ஆண் ஆடுகளின் உடல் முழுவதும் உரோமம் உண்டு; கழுத்துப் பகுதியில் மிக அடர்த்தியாக நீண்டு வளர்ந்திருக்கும். நீளமாக சுருண்டு வளைந்த கொம்புகள் ஆண் ஆடுகளுக்கு உண்டு. பெண் ஆடுகளுக்கு நேர் வடிவிலான இரு சிறிய கொம்புகள் உள்ளன.

பனிக்காலங்களில் மலைப் பிரதேசங்களில் தாவரங்கள் கிடைப்பது கடினம். அப்போது இவை பூச்சிகளையும் வண்டுகளையும் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளும். வசந்த காலத்தில் இவை பசுமையான மலையடிவாரங்களை நோக்கி வருகின்றன. அப்போது புல், இலை, தழைகளைச் சாப்பிடும். குளிர்காலத்தில் அடர்ந்த பனிமலைகளை நோக்கிச் செல்கின்றன. இதற்கான காரணம் ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் தெரியவில்லையாம்.

- பா.ராஜேஷ்