கருவில் வளரும் சிசுவுக்கு ஹார்ட் ஆப்பரேஷன்



இந்தியாவிலேயே முதன்முறையாக கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் சிசுவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளனர், நம் பக்கத்து மாநிலமான ஐதராபாத் மருத்துவர்கள்.

ரங்கா ரெட்டி மாவட்டம், இஞ்சாபூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவரது மனைவி சிரிஷா. வயது 25. இவர் ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியை. இவர் தற்போது 6 மாத கர்ப்பிணி. ஐதராபாத்தில் உள்ள ‘கேர்’ மருத்துவமனைக்கு வழக்கமான கர்ப்பகால ‘செக்அப்’களைச் செய்துகொள்ள சென்ற மாதம் வந்தார்.

அங்கு குழந்தையின் வளர்ச்சியை அறிந்துகொள்ள ஸ்கேனிங் செய்யப்பட்டது. குழந்தையின் இதயத்தில் ‘அயோடிக் வால்வு’ பாதிக்கப்பட்டு ரத்த ஓட்டம் தடைபட்டதால், உடலுக்கு ரத்தம் சரியாகச் செல்லவில்லை என்பது அப்போது தெரிந்தது. இந்த நிலைமை நீடித்தால் சிசுவின் இதயம் மொத்தமும் பழுதடைந்து அதன் உயிருக்கு ஆபத்து வந்து சேரும்.

இது குறித்து அருணுக்கும் சிரிஷாவுக்கும் தெரியப்படுத்திய மருத்துவர்கள், தற்போது இதற்கு ஒரு அரிய அறுவை சிகிச்சை உள்ளது என்றும், அதை உடனே செய்தால் தாய், சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்றும் தெரிவித்தனர். சிரிஷா ஓர் அறிவியல் ஆசிரியை என்பதால், இந்தப் பிரச்னையைப் புரிந்துகொண்டு, அறுவை சிகிச்சைக்குச் சம்மதித்தார்.

இந்த அரிய சிகிச்சையைப் பற்றி பின்னால் பார்க்கலாம். அதற்கு முன்னால் அயோட்டிக் வால்வின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்...

மனித இதயத்தில் மொத்தம் நான்கு வால்வுகள் உள்ளன. அவற்றில் ‘அயோடிக் வால்வு’ (Aortic Valve) மிக முக்கியமானது. இதயத்திலிருந்து ஆக்ஸிஜன் மிகுந்த சுத்த ரத்தத்தை உடலுக்கு எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்க்கு மகாதமனி (Aorta) என்று பெயர். இது இடது பக்க இதயத்தின் கீழறை (Ventricle)யிலிருந்து கிளம்புகிறது. அந்த இடத்தில் அமைந்துள்ளது, அயோடிக் வால்வு.

வழக்கமாக, இதயம் துடிக்கும்போது, இதய அறைகள் சுருங்குவதும் விரிவதுமாக இருக்கும்; இதய வால்வுகள் நிலைக்கதவுபோல் திறப்பதும் மூடுவதுமாக இருக்கும். இதன்மூலம் இதயத்திலிருந்து ரத்தம் உடலுக்குள் செல்வதும், உடலிலிருந்து இதயத்துக்கு வருவதுமாக இருக்கும். இது ஒரு சுழற்சிபோல் நிகழும்.

இந்தச் சுழற்சியின் ஒரு பகுதியாக, இடது கீழறை சுருங்கும். அப்போது அதிலிருந்து மகாதமனிக்குள் ரத்தம் செல்வதற்கு அயோடிக் வால்வு மேல்நோக்கித் திறந்து வழிவிடும். பிறகு, இடது கீழறை விரியும். அப்போது அயோடிக் வால்வு கீழ்நோக்கி இறங்கி மகாதமனியை மூடிக்கொள்ளும்.

இவ்வாறு மகாதமனிக்குள் செலுத்தப்பட்ட ரத்தம் மீண்டும் இதயத்தின் கீழறைக்கே திரும்பி விடாமல் தடுப்பது இந்த வால்வு செய்யும் முக்கியப் பணி. இது சரியாக வேலை செய்தால்தான் உடலுக்குத் தேவையான ரத்தம் முறையாகக் கிடைக்கும். இல்லையென்றால், ரத்தம் இதயத்திலேயே தேங்கிவிடும். அப்போது இதயத்தின் இடது கீழறை வீங்கிவிடும். இதன் விளைவால், இதயம் தொடர்ந்து  இயங்க முடியாமல் செயலிழந்து விடும். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

பொதுவாக, குழந்தைப் பருவத்தில் ஏற்படுகின்ற ருமாட்டிக் காய்ச்சல் இதய வால்வுகளைத் தாக்கும்போது இந்த மாதிரியான வால்வுக் கோளாறு வருவதுண்டு. இது குழந்தை பிறந்த பிறகு வரும் கோளாறு. சிலருக்குப் பிறவியிலேயே இந்த வால்வின் அமைப்பில் குறைபாடு உண்டாகலாம்.

 இப்போது நாம் பேசுகின்ற சிரிஷாவின் சிசுவுக்கு பிறவிக் கோளாறால் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.குழந்தை பிறந்த பிறகு இந்தக் கோளாறு இருப்பது தெரியவந்தால், ‘வால்வு மாற்று அறுவை  சிகிச்சை’ செய்யப்படுவது நடைமுறையில் உள்ளது. அதாவது, பழுதாகிவிட்ட வால்வை அகற்றிவிட்டு, செயற்கை வால்வு ஒன்றை அந்த இடத்தில் பொருத்திவிடுவது இதன் செயல்முறை.

ஆனால், சிரிஷாவின் சிசு அடுத்த 3 மாதங்களுக்கு வளர்ந்து பிரசவம் ஆகிறவரைக்கும் அதன் உடல்நிலை தாங்காது என்ற நிலைமை. ஆகவே, மிக அவசரமாக அறுவை சிகிச்சை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. சிரிஷாவுக்கு ‘கேர்’ மருத்துவமனையில் டாக்டர் நாகேஷ்வர ராவ் தலைமையில்  15 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் இந்த அறுவை சிகிச்சையைச் செய்தனர்.டாக்டர் நாகேஷ்வர ராவ் இந்த சிகிச்சை குறித்துப் பெருமைப்பட்ட விஷயங்கள்...

‘‘இந்தியாவில் இப்போதுதான் முதன்முறையாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்குத் தேவையான கருவிகள் இந்தியாவில் இல்லை. எனவே, வட அமெரிக்காவிலிருந்து இதற்கென்றே தயாரிக்கச் சொல்லி வரவழைத்தோம். சிசுவின் இதயத்தை ஃபீட்டல் எக்கோகார்டியோகிராபி (Foetal echocardiography) என்ற சிறப்புப் பரிசோதனை செய்து வால்வுப் பிரச்னையைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு அறுவை சிகிச்சை செய்தோம்.

முதலில் தாய்க்கும், பிறகு சிசுவுக்கும் மயக்க மருந்து செலுத்தினோம். சிறிய கதீட்டர் மற்றும் பலூன் இணைந்த ஒரு ஊசியை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் உதவியுடன் தாயின் அடிவயிற்றில் செலுத்தி, கருப்பைக்குக் கொண்டு சென்றோம். அங்கிருந்து குழந்தையின் தொடையில் உள்ள ரத்தக் குழாய்க்குள் அந்த ஊசியைச் செலுத்தி, அங்கிருந்து அதன் இதயத்துக்குக் கொண்டு சென்றோம். இந்தச் செயல்முறையின் ஒவ்வொரு படியையும் கம்ப்யூட்டர் திரையில் பார்த்துக்கொண்டே செய்வதால் ஊசிமுனையை மிகத் துல்லியமாக சிசுவின் இதயத்துக்குக் கொண்டு செல்லமுடிந்தது.

அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊசிமுனையை நகர்த்தி அயோடிக் வால்வுக்குக் கொண்டுவந்தோம். பிறகு, அந்த ஊசிமுனையில் இருக்கிற பலூனை வெளியில் இருக்கும் கதீட்டரின் இன்னொரு முனை மூலம் விரிக்கச் செய்தோம். இப்போது பலூனும் அதோடு இணைந்துள்ள ஸ்டென்டும் விரிய, வால்வு அடைப்பு நீக்கப்பட்டது.

(‘ஸ்டென்ட்’ என்பது விரியும் தன்மை கொண்ட உலோகத்தாலான மிகச் சிறிய ஸ்பிரிங் கம்பி). ரத்தம் மகாதமனிக்குள் இப்போது சரியாகச் செல்லத்தொடங்கியது. உடலுக்குத் தேவையான ரத்தம் பாயத்தொடங்கிவிட்டது. இனிமேல் சிசுவுக்கு ஆபத்து இல்லை என்று தெரிந்ததும் பலூன் கதீட்டரைச் சுருக்கி வெளியில் எடுத்துவிட்டோம். இப்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். தாயின் வயிற்றிலேயே மறுபிறவி எடுத்துள்ளது இந்தக் குழந்தை!’’ என்றார் சந்தோஷமாக!

 (இன்னும் இருக்கு...)