கொட்டும் குளவி!



பூச்சிப் பூக்கள் 60
சுரீர் கதை

பெரிய பெரிய பாலூட்டி விலங்குகளை விடவும் குட்டியூண்டு பூச்சிகளுக்கு நுணுக்கமான சாதுரியங்கள் இருப்பது நம்மை வியப்பூட்டுகிறது. அதிலும் இந்தக் குளவிகள் கட்டும் குழந்தைக் கூடுகள் ஒரு புவியியல் விந்தை. இதில் யூமெனஸ் வகைக் குளவிகள் வெகு தைரியமாய் நாம் வாழும் வீட்டிற்குள் வந்து பாதுகாப்பான ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கின்றன.

அது அனேகமாக உத்திர மூலை, ஷெல்ஃபுகளின் அடி விளிம்பு, சுவரோரம் வைக்கப்பட்டிருக்கும் மர பீரோவின் பின் பகுதி அல்லது தொங்கும் திரைச் சீலையின் உட்புறம் போன்ற இடங்களில் கூட்டை நிர்மாணிக்கிறது.

செம கட்டுறுதி!நம்மைப் போல் அல்லாது எவ்விதமான வசதியோ அல்லது உபகரணங்களோ எதுவும் இல்லாமல், அவை வாழும் சூழலுக்கு ஏற்ப, கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, மிகுந்த மதி நுட்பத்தோடு கூடுகளைக் கட்டுவது ஒரு ஆச்சரியம்தான். மேலும் இதில் நமக்கும் மீறிய ஞானத்தோடு யாருடைய உதவியும் இல்லாமல் தனித்தே தம் வீட்டை இவை அமைப்பதில் பளிச்சிடும், அதன் கட்டுமான நேர்த்தி!

நமக்கும், நாம் உண்ணும் உணவுப் பொருட்களுக்கும் கேடு விளைவிக்கும் பல தரப்பட்ட பூச்சிகளை தினசரி கணக்கில்லாமல் உட்கொள்கிறது குளவி. இப்படி மானிட சமூகத்திற்கு ஏராள நன்மை பயக்கும் இந்தக் குளவியைப் பார்த்தவுடன் நாம் துரத்தி விரட்டவே விரும்புகிறோம். இது ஒரு துரதிர்ஷ்டமான சங்கதிதான். சமயத்தில் இவற்றின் கூட்டைப் பார்த்து விட்டால் உடனே நாம் அதை அழித்துவிட முற்படுகிறோம்.

இப்படியொரு உறுதியான அழகிய கூட்டை ஒற்றையாய் எப்படி இக்குளவி கட்டியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் யாருக்கும் அக்கூட்டை அழிக்க மனசு வராது. இப்படிக் குளவிகள் தம் இனவிருத்திக் காலத்தில் கூடு கட்டுவதற்கு ஏற்ற இடத்தைத் தேர்வு செய்தவுடன் அதை நன்றாக சுத்தம் செய்து தயார் பண்ணுகிறது.

பிறகு கட்டுமானத்திற்குத் தேவையான களிமண்ணை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கொண்டு வருகிறது. இக்களிமண்ணில் ஈரப் பதம் குறைவாக இருக்குமானால் தன் எச்சிலைக் கலந்து பதமாக்குகிறது. இதுபோக சிறுசிறு மரத் துண்டுகள், உலர்ந்த இலைகள், நார்கள் போன்ற பலதரப்பட்ட பொருட்களை சேகரித்து வைத்துக் கொண்டு கட்டுமானத்தைத் துவங்குகிறது.

மிக அழகிய குடம் வடிவில் கூட்டை ஒரு ஜியோமெட்ரிக்கல் பர்ஃபெக்ஷனில் உருவாக்குகின்றது. இந்தக் கூட்டின் சுவர்ப் பகுதி எளிதில் எதிரிகளால் உடைக்க முடியாத வகையில் உறுதியாக இருக்கும்.

இதற்குள் ஒரு நூலிழை மூலம் முட்டைகளைத் தொங்க விடுகிறது. இம் முட்டைகள் பொரிந்து வெளிப்படும் எதிர் காலப் புழுக்களுக்கு வேண்டிய இரையை நிறைய வேட்டையாடிக் கொண்டு வந்து உள்ளே வைக்கிறது. இறுதியில் காற்றோட்ட வசதிக்காக ஒரு ஊசி நுழையும் அளவிற்கு ஒரு சிறு துவாரத்தை மட்டும் விட்டு, நுழைவாயிலைக் களிமண்ணால் மூடி சீல் வைத்து விடுகிறது.

இதேபோல் காகிதக் குளவி என்றொரு வகையும் தம் கூட்டை விநோதமான முறையிலேயே அமைக்கின்றன. இந்தக் குளவி மனிதனின் காகிதம் தயாரிக்கும் டெக்னாலஜியைப் பயன்படுத்தி, காகிதத்தைத் தயாரித்துத் தம் கூட்டினை அமைப்பது ஒரு ஆச்சரியம். இதற்காக இக்குளவிகள் மக்கிப்போன மரத்துகள்கள், தண்டுகள் மற்றும் நார்களை சேமித்துக் கொள்கின்றன.

பிறகு ஜாலியாக அமர்ந்து கொண்டு, இப்பொருட்களை வாயில் போட்டு நன்றாக மென்று அரைக்கின்றன. போதிய அளவு உமிழ்நீரைச் சுரந்து கூழ் போல கரைக்கின்றன. தேவையான அளவு கூழ் தேறாவிட்டால், மனிதர்கள் செய்த காகிதம், அட்டை போன்ற கழிவுப் பொருட்களை சேகரித்துக் கொண்டு வந்து இதனோடு சேர்த்துக் கூழாக்குகின்றன.

பார்ப்பதற்கு பழுப்பு நிறத்தில் இருக்கும் இக்கூழில் தயாரிக்கப்படும் காகிதத்தை அவ்வளவு சுலபத்தில் கிழித்து விட முடியாது. எனவே இதையே கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தி இவை தம் கூட்டினைக் கட்டுகின்றன. அதுவும் உயரமான மரக் கிளையில் கீழ் நோக்கி, தலைகீழாகத் தொங்குகிற வகையில் கட்டுகின்றன.

இந்தக் கூட்டிற்குள் காகிதத் தடுப்புகளால் பல அறைகள் அமைக்கப்பட்டிருக்கும். எல்லா அறைகளின் நுழைவுகளும் கீழ்நோக்கியே திறந்திருக்கும். இந்த அறைகளுக்குள் முட்டைகளை இட்டு, தேவையான இரைப் பொருட்களையும் வைத்து, அட்டைத் தடுப்புகளால் வாயில்களை மூடி விடுகின்றன. உள்ளே பாதுகாப்பாய் வாரிசுகள் வளரும்.

ஆம்புலன்ஸ் வாகனம் மாதிரி அலாரம் அடித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழையும் குளவிகளை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இவற்றுள் கருங் குளவியும், செங்குளவியும் நம்மை அச்சுறுத்தும் வகையில் ரெய்டு நடத்துவது வழக்கம். இதிலும் செங்குளவியின் சுளீர் கடிக்கு நிறையப் பேர் திக்குமுக்காடிப் போனதுண்டு. அப்கிரிட்டா என்னும் துணை வகைப்பாட்டின் கீழ் வரும் இந்தக் குளவிகளில் கணக்கற்ற குடும்பங்களும், இனங்களும் உள்ளன. இதில் நமக்குப் பரிச்சயமான குளவிகள் எல்லாம் வெஸ்பிடே (Vespidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவைதான். பாப்புலர் ரகங்கள்!

இந்தக் குளவிகள் அதன் வாழ்வியல் அடிப்படையைக் கொண்டு இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எறும்பு, தேனீ போன்று ஆயிரக்கணக்கில் ஒன்றாய் கூட்டு வாழ்க்கை நடத்தும் வகைகள் வனப் பிரதேசங்களில் ஜீவிக்கின்றன. இக்கூட்டுக் குடும்பங்களில் ராணிக் குளவி சில ஆண் குளவிகளோடு இணைந்து இனவிருத்தி செய்கிறது. கூட்டிலுள்ள மற்றெல்லா குளவிகளும் மலடுகளே. தனித்து ஸோலோவாக வாழ்க்கை நடத்தும் குளவி வகைகளில் மட்டும் எல்லாமே இனவிருத்தி செய்கின்றன. ஸாலிட்டரி ரகம்!

(தொடரும்)

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்