1000 அடி பருமன் ஆறு!



பனிக்கட்டியாறு மலைப் பகுதிகளில் மட்டும்தான் இருக்குமா? நிலப்பகுதியிலும் ஓடுமா?
- ஆர்.மாலதி, 9ம் வகுப்பு, ஜவஹர் பள்ளி, நெய்வேலி.

பள்ளத்தாக்கிலிருந்து நழுவி, சமவெளியில் பாயக்கூடிய பனிக்கட்டியாறுகள் மிக அரிதானவை. அப்படிப்பட்ட சாதனைக்கார ஆறுகளுக்கு ‘பிட்மோண்ட் கிளேசியர்’ என்று பெயர். அலாஸ்காவிலுள்ள மலாஸ்பினா கிளேசியர் இதற்கு நல்ல உதாரணம். மலைகளிலிருந்து நகர்ந்து வரும் பல பனிக்கட்டியாறுகள் சங்கமமாகி, இந்த கிளேசியர் தோன்றுகிறது. 4 ஆயிரத்து 200 சதுர கிலோமீட்டர் தூரத்தை ‘கவர்’ செய்கிறது. இதன் பருமன் மட்டுமே ஆயிரம் அடி!

புத்தகங்களுக்கு முன் எப்படி அறிவுப் பரிமாற்றம் நிகழ்ந்தது?
- அ.உமா, 10ம் வகுப்பு, கே.வி.எஸ். பள்ளி, விருதுநகர்.

புத்தகங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் தகவல்கள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வாய் வழியாகத்தான் சென்றது. இது மிகவும் தாமதமான வழி. உங்களுக்கு ஏதோ ஒரு தகவல் தேவைப்படுகிறது. அந்தத் தகவலை அறிந்தவர் வேறொரு இடத்தில் இருப்பார். அவரைத் தேடி நீங்கள் சென்று வர நேரமாகும்.

அடுத்து அவர் சொன்ன தகவல்களை மறக்காமல், நீங்கள் குறித்துக்கொள்ள வேண்டும். அல்லது நினைவில் நிறுத்த வேண்டும். இவ்வளவு பிரச்னை இருக்கிறதல்லவா? ஆனால், புத்தகங்கள் இருந்தால் சட்டென புரட்டிப் பார்த்து தகவலை தெரிந்து கொள்ளலாம். தொலைபேசி, இன்டர்நெட் எல்லாம் கண்டுபிடித்த பிறகு, இந்த விஷயங்கள் இன்னும் சுலபமாகி விட்டன.

புத்தகங்கள் அதிகமாக அதிகமாக மக்கள் தகவல்களைத் தங்கள் விரல்நுனியில் வைத்திருப்பதும் அதிகரித்து விட்டது. இதனால் அறிவியல், மருத்துவம், இயற்கை, புவியியல் எல்லாவற்றிலுமே மக்களுக்குத் தகவல்கள் முன்பை விட நிறையவே தெரிகிறது.

புத்தகங்கள் இதர கண்டுபிடிப்புகளுக்கான கதவைத் திறந்து விட்டன என்றே சொல்லலாம். நவீன மொபைல் போன்களின் வருகைக்குப் பிறகு மின் புத்தகங்கள், மின் பத்திரிகைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. எனினும் புத்தகங்களின் தேவை என்றும் தொடரும் என்பதே நிபுணர்களின் கணிப்பு.