பேய் தாவரம்!



மேகாலயா மாநிலத்தின் காசி மலையில் நெப்பந்திஸ் காசியானா (Nepenthes khasiana)  எனும்  பூச்சி உண்ணும்  தாவரம்  காணப்படுகிறது. காசி மலையில் அதிகம் காணப்படுவதால், ‘காசியானா’ என்பது இதன் தாவரவியல் பெயராக வைக்கப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 1,000 அடி முதல் 10 ஆயிரம் அடி உயரம் வரை உள்ள பகுதிகளில் வளரக் கூடியது. ஈரம்மிக்க காடுகள்,  சதுப்பு நிலங்கள்,  குட்டை ஓரங்களில் நெப்பந்திஸ் 100 ஆண்டுகள் வரை  வாழ்கிறது.

ஒரு அடி உயரம் முதல் 70 அடி உயரம் வரை கொடியாக மரங்களில் தொற்றி,  காற்றில் சுற்றித் திரியும் மின்மினிப்பூச்சி  முதல் குளவிகள் வரையிலான பூச்சிகளை  பூ ஜாடி போன்ற தனது  பூக்களில் சிக்க வைத்து,  இது  சாப்பிடுகிறது. வண்டு, நத்தை, குளவி என பூச்சிகளை மட்டுமல்லாமல், குட்டி எலியைக்கூட இந்த வகை தாவரங்கள் சாப்பிடுமாம். பூக்களின் உயரம் 10 செ.மீ. முதல் 30 செ.மீ. வரை. பூவின் கழுத்துப் பகுதியில் மூடிபோன்ற இலை, குடுவையை மூடியிருக்கும். பூக்குடுவையில் மூன்றில் ஒரு பங்கு பெப்சின் என்ற ஜீரண திரவமும்,  கழுத்து  விளிம்பில் நெக்டார் என்ற சுவையான தேனும் இருக்கும்.



தேன் வாசமும்,  பூவின் நிறமும் பட்டாம்  பூச்சிகள், வண்டினங்களைக் கவர்ந்து இழுக்கும். ஆபத்தை உணராத பூச்சியினங்கள்,  பூவின் விளிம்பில் அமர்ந்து  தேனைக் குடிக்கும் நொடியில், சரசரவென வழுக்கிக்கொண்டு தடுமாறி பூவுக்குள் பெப்சின் திரவத்தில் விழும்.
ஜாடிக்குள்ளிருந்து பூச்சிகள் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக மெல்லிய இழை போன்ற சிறு முடிகள் உட்புறம் நோக்கி சிலிர்த்தெழுந்து நிற்கும். இந்த முடிகள், பூச்சிகள் மேலே எழுந்து வராமல் தடுக்கும்.

பெப்சின் திரவம் பூச்சியை ஜீரணிக்கக்கூடிய சக்தியைக் கொண்டிருப்பதால், மேலே எழுந்து வருவதற்கான பூச்சிகளின் முயற்சி தோல்வியில் முடியும். கொஞ்சம் கொஞ்சமாய் திரவத்தில் கரைந்துபோகும். அடைமழை பெய்தாலும் ஒரு சொட்டு  நீர் கூட  ஜாடிக்குள் விழுந்து பெப்சின் திரவம் நீர்த்துப் போகாமல் இருக்க, ஜாடி விளிம்பில் உள்ள இலை, மூடிபோலச் செயல்படும்.  இவை பூச்சிகளை உண்பதால், இவற்றை ‘பேய்’ தாவரம் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

 - சூர்யா சரவணன்