ஃபோலிக் அமிலம்



பிறவிக் கோளாறைத் தடுக்கும் மருந்து!
டாக்டர் கு.கணேசன்

இப்படி ஒரு வைட்டமினைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

வைட்டமின் வரிசையில் இது ஒன்பதாவது. இது தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின் என்பதால், உடலில் அவ்வளவாகத் தங்குவதில்லை. இந்த வைட்டமின் உள்ள உணவை, மாத்திரையை அல்லது மருந்தைச் சாப்பிட்ட எட்டு மணி நேரத்தில் சிறுநீரில் வெளியேறிவிடும். எனவே, உடலின் தேவைக்கு இந்த வைட்டமின் உள்ள உணவுகளை நாம் தினமும் சாப்பிட வேண்டியது அவசியம். அரிசி, கம்பு, முழுக்கோதுமை, மக்காச்சோளம், ஓட்ஸ், முளைகட்டியப் பயறுகள், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, சோயா, நிலக்கடலை, கொண்டைக்கடலை, காராமணி, பச்சைப் பட்டாணி, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, எள், பச்சைநிறக் காய்கறி ஆகியவற்றில் இது மிகுந்துள்ளது. ‘உலர் ஈஸ்ட்’ இந்த வைட்டமினை நிறையப் பெற்றுள்ளது. பசலைக்கீரை, அவரைக்காய், தக்காளி, வாழைப்பழம், ஸ்ட்ராபெரி, புரோக்கோலி, பீட்ரூட், காளான், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், வெண்டைக்காய், கொத்தவரங்காய், ஆட்டிறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றிலும் இது அதிகம்.

உடலில் மூளை, தண்டு வடம், நரம்பு மண்டலம், தசைகள் போன்றவை வயதுக்கு ஏற்ப வளர்ச்சி பெறுவதற்கு இந்த வைட்டமின் உதவுகிறது. இது எல்லா வயதினருக்கும் தேவைப்படுகிற வைட்டமின்தான் என்றாலும், கர்ப்பிணிகளுக்குக் கட்டாயம் தேவைப்படுகிறது. பொதுவாக, கர்ப்பிணிக்கு முதல் மூன்று மாதங்களில் சிசுவின் உடல் பகுதிகள் வளரத் தொடங்கிவிடும். அக்காலகட்டத்தில் குழந்தையின் உடல் வளர்ச்சி சரியாக அமைவதற்கு இது பெரிதும் உதவுகிறது. எலும்பு மஜ்ஜையில் ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தியாவதற்கு இந்த வைட்டமின் மிகவும் அவசியம். சிவப்பணுக்களில் ஹீமோகுளோபினை நிலை நிறுத்த இது உதவுகிறது. இதன் மூலம் ரத்தசோகை வருவதைத் தடுக்கிறது. பியூரின், பிரமிடின், நியூக்ளியோ புரதம் போன்றவற்றின் உற்பத்திப் பெருக்கத்திலும் இது பங்குகொள்கிறது. டைரோசின், குளுட்டமிக் அமிலம், பினைல் அலனின் ஆகிய அமினோ அமிலங்களின் உற்பத்திக்கு இது தேவை. இதன் மூலம் உடலில் புரதச்சத்து உற்பத்திக்கும் இது உதவுகிறது.

உடலில் இந்த வைட்டமின் பற்றாக்குறை ஏற்படுமானால் வயதுக்கு ஏற்ப உடல் எடை இருக்காது. நரம்புகள் வளர்ச்சியும் தடைபட்டு நரம்புத் தளர்ச்சி வரும். எலும்பு மஜ்ஜையில் சிவப்பணுக்கள் உற்பத்தியாவது குறைந்து ரத்தசோகை ஏற்படும். இவ்வகை ரத்தசோகையில் சிவப்பணுக்களின் அளவு பெரிது பெரிதாக இருக்கும் என்பதால், இதற்கு ‘மேக்ரோசைட்டிக் அனீமியா’ (Macrocytic anaemia) என்று தனிப்பெயரே உண்டு. கர்ப்பிணிகளுக்கு இந்த வைட்டமின் பற்றாக்குறை ஏற்படுமானால், அவர்களுக்கு இயல்பாக ஏற்படுகிற கர்ப்பகால வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற தொல்லைகள் வழக்கத்தைவிட அதிகரிக்கும். கருவில் வளரும் குழந்தைக்குப் பிறவியிலேயே ஊனம் ஏற்படும். குறிப்பாக,  உதடு, அண்ணம் ஆகியவற்றில் பிளவு ஏற்படும் (Cleft lip and cleft palate). அடுத்து, வளர்ச்சி குறைந்த கை, கால்களுடன் குழந்தை பிறப்பதற்கும், முதுகுத்தண்டின் அடிப்பாகத்தில் முதுகெலும்பு பிளவுபடுவதற்கும்  ( Spina bifida ) இந்த வைட்டமின் அளவு குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.



அதே வேளையில் கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலம் உள்ள உணவுச்சத்துகளை அல்லது மாத்திரை, மருந்துகளைச் சரியான அளவில் சாப்பிட்டுவந்த கர்ப்பிணிகளுக்குச் சுகப்பிரசவம் ஆகிறது என்பதும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு இந்த மாதிரியான பிறவி ஊனங்கள் ஏற்படவில்லை என்பதும் பல  ஆராய்ச்சிகளில் உறுதிசெய்யப்பட்டன. இதனால்தான் கர்ப்பிணிகள் இரும்புச்சத்து மாத்திரையையும் ஃபோலிக் அமில மாத்திரையையும் அவசியம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். கர்ப்பிணிகளுக்கு வரப்பிரசாதம்போல் அமைந்திருக்கும் இந்த ஃபோலிக் அமில மருந்தைக் கண்டறிய இந்தியாதான் களம் அமைத்துக் கொடுத்தது என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

எப்படி?

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், உலக அளவில், பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் மட்டும் ஒரு வகைப் பிரத்யேகமான ரத்தசோகை வந்து, பெரிய அளவில் பாதித்துக் கொண்டிருந்தது. இந்தியாவையும் இது விட்டுவைக்கவில்லை. 1920களில் அப்போதைய பம்பாயில் துணி தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்ட ஏழை கர்ப்பிணிகள் காரணம் தெரியாத சோகையிலும் அதனால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கிலும் ஆயிரக்கணக்கில் மரணம் அடைந்து கொண்டிருந்தனர். இது குறித்து ஆராய்ச்சி செய்ய 1928ல் டாட்டா அறக்கட்டளையின் அழைப்பின் பேரில் டாக்டர் லூசி வில்ஸ் என்ற இங்கிலாந்து பெண் மருத்துவர் இந்தியா வந்தார். அவரது ஆராய்ச்சியின் முடிவில், இங்குள்ள ஏழைப் பெண்களுக்கு ‘மேக்ரோசைட்டிக்’ ரத்தசோகை உள்ளது என்றும் இது ஒருவித ஊட்டச்சத்து குறைவதால் ஏற்படுகிறது என்றும் கண்டறிந்தார். அதற்கு ‘வில்ஸ் ஃபேக்டர்’ என்று பெயரிடப்பட்டது. ஆனால் அது எந்த ஊட்டச்சத்து என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனவே அவர் எலிகளை வைத்துத் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். சோகை ஏற்பட்ட எலிகளுக்கு ஈஸ்ட் உணவைக் கொடுத்தபோது சோகை சரியானது. ஆகவே, ஈஸ்ட்டில் அந்த ஊட்டச்சத்து உள்ளது என்று 1930ஆம் ஆண்டில் உறுதி செய்தார்.

இவருடைய பரிந்துரையின் பேரில் இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் கர்ப்பிணிகளுக்கு ஈஸ்ட் உணவு தரப்படுவது பின்பற்றப்பட்டது. இவர்களுக்கு சோகைநோய் வரவில்லை என்பதில் உலகமே மகிழ்ந்தது. இவரைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்த ‘மிச்செல்’ என்பவர் 1941ல் பசலைக் கீரையிலிருந்து இந்த ஊட்டச்சத்தைப் பிரித்தெடுத்து சாதனை புரிந்தார். இதற்கு ‘ஃபோலிக் அமிலம்’ என்று பெயருமிட்டார். லத்தீன் மொழியில் ‘ஃபோலியம்’ என்றால் தாவர இலை என்று பொருள். இந்த வைட்டமின் பச்சைநிறக் காய்களில் அதிகமாக உள்ள காரணத்தால் இந்தப் பெயரைப் பெற்றது. 1945ல் ஆங்கையர் என்பவர் இதை செயற்கை முறையில் தயாரிக்கவும் வழிவகுத்தார். இந்த மருந்துதான் இன்றைக்கும் உலகில் லட்சக்கணக்கான கர்ப்பிணிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறவி ஊனம் ஏற்படாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது.

(தொடரும்)