அழும் உலோகம்



அழும் உலோகம்

கேட்மியம் என்று ஒரு உலோகம். இதனைக் கம்பியாக வடிவமைத்து, அந்தக் கம்பியை வளைத்தால், ஒரு ஓசை உண்டாகும். அந்த ஓசை மனித அழுகுரலை ஒத்திருக்கும்!

ஆணாகிப் பெண்ணாகி நின்ற இனம்

நத்தை இனத்தில் ஆண், பெண் என்று இரு பிரிவுகள் கிடையாது. ஒரு நத்தை தானே ஆணாகவும், பெண்ணாகவும் இயங்கக்கூடியது; இனவிருத்தி செய்துகொள்ளக்கூடியது. இதேபோலதான் மண்புழுவும்.
 
எடை மிகுந்த எரிநட்சத்திரக் கல்

விண்ணிலிருந்து பூமியில் விழுந்த எரிநட்சத்திரக் கற்களிலேயே எடை மிகுந்தது ஹோபா எனப்படுகிறது. தென்மேற்கு ஆப்பிரிக்காவில் விழுந்த இந்தக் கல்தான் அதற்கு முன்னும் தற்போதுவரைக்கும் மிகுந்த எடை கொண்டது என்று கருதப்படுகிறது - 60 டன்! நாற்பது ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு விழுந்த இந்தக் கல் துருப்பிடித்தே நாற்பது டன் எடை குறைந்துவிட்டதாம்.

பின்பார்வை

ஒட்டகச்சிவிங்கிக்கு ஒரு வசதி உள்ளது. தன் கழுத்தைத் திருப்பாமலேயே, விழிகளை மட்டும் பின்னால் செலுத்தி, தனக்குப் பின்னால் இருப்பவற்றை அதனால் பார்க்க முடியும். ஒரு குறையும் உள்ளது - அதற்குக் குரல் கிடையாது. அதனால் அது கத்தாது!



சேவல் திசை

எல்லா பறவை இனங்களுமே ஓய்வெடுத்துக்கொள்ளும்போது காற்று வரும் திசை நோக்கியே அவற்றின் முகம் இருக்கும். அதாவது வடக்கிலிருந்து காற்று வீசுகிறதென்றால், பறவைகளின் முகம் வடக்கு நோக்கியே இருக்கும். இது எதிரிகள் வருவதை இனம் கண்டுகொள்வதற்காக இயற்கை அவற்றுக்கு அளித்திருக்கும் வரம். திசைகாட்டும் கருவியிலுள்ள சேவல் எப்போதும் காற்று வீசும் திசை நோக்கியே அமைக்கப்பட்டிருப்பது இந்த அடிப்படையில்தான். இப்படி கருவியில் இடம்பெற்றிருக்கும் சேவலை ‘லிவிங் வெதர் காக்’ என்றழைக்கிறார்கள்.

பத்தாம்பசலி தெரியுமா?

‘சரியான பத்தாம்பசலி’ என்று பழைய சம்பிரதாயங்களை விடாத, புதிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதவர்களைக் கேலியாகக் குறிப்பிடுவார்கள். இந்த பசலி என்பது ஒரு கணக்கு. அதாவது பத்து வருடங்கள் கொண்ட காலகட்டத்தை பசலி என்று கணக்கிட்டார்கள். ஆங்கிலத்தில் ஒரு ‘பத்தாண்டு’ காலகட்டத்தைச் சொல்வதுபோல. இந்த முறையை அறிமுகப்படுத்தியவர் முகலாய மன்னர் அக்பர்.
 
‘E’ பெருமை

ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துகள் உள்ளன. (கேபிடல் லெட்டர், ஸ்மால் லெட்டர் இரண்டையும் கணக்கெடுத்துக்கொண்டால் மொத்தம் 52 எழுத்துகள் என்றும், மொத்தம் நாலுவகை எழுத்துரு கொண்டிருப்பதால் 104 எழுத்துகள் என்றும் சிலர் காமெடியாக பதில் சொல்வார்கள்!) இந்த 26 எழுத்துகளில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் எழுத்து ‘E’தான்!

கடலில் கலக்காதது

பாற்கடலை அமிர்தம் வேண்டிக் கடைந்தபோது அந்த முயற்சியில் வெளிப்பட்ட விஷத்தை சிவபெருமான் அருந்த நேர்ந்ததால், அதனால் கோபமுற்ற, சொக்கநாதர் கோலோச்சும் மதுரையில் பாயும் வைகை நதி, கடலில் போய் கலப்பதில்லை என்று நயமாக வர்ணிப்பதுண்டு. வடநாட்டிலும் இப்படி ஒரு நதி இருக்கிறது. கடலில் கலக்காத இந்த நதி, யமுனை.

- வித்யுத்