சிரிக்கும் சிலைக்குள் உளவு டெக்னாலஜி!



செல்ஃபி வித் சயின்ஸ்
டாக்டர் ஆதலையூர் சூரியகுமார்

ஏ.டி.எம்.மெஷின் தொடங்கி என்ஜினியரிங் காலேஜ் வரை இன்று எங்கு பார்த்தாலும் சிசிடிவி கேமிரா மூலம் நம்மை கண்காணிக்கிறார்கள். நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், கம்ப்யூட்டர் சென்டர்கள், கால் சென்டர்கள், சிக்னல்கள் என்று நாம் எல்லோரும் ஏதோ ஒரு இடத்தில் கண்காணிப்பு கேமராவின் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டி ருக்கிறோம். கொஞ்சம் அசந்தால் நம் நடவடிக்கையை டவுன்லோடு செய்து வாட்ஸப்பில் உலகம் முழுவதும் வலம் வரச்செய்து விடுவார்கள்.

‘எவ்ளோ டெக்னாலஜி வளர்ந்துடிச்சி’ என்று வாயைப் பிளக்கிறோம். ஆனால், இதெல்லாமே வெரி ஓல்டு டெக்னாலஜிதான். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே மன்னர்கள் தங்கள் கோட்டைகளிலும் கோயில்களிலும் கருவூலங்களிலும் சிசிடிவி போன்றே சிசி ரேடியோக்களைக் கண்டுபிடித்துப் பொருத்தியிருந்தார்கள். மின்சாரம், கம்ப்யூட்டர், கம்பித் தொடர்புகள் எதுவுமே இல்லாமல் இதை சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் நம் தாத்தாக்களின் தாத்தாக்கள். சிசிரேடியோ மூலம் கோட்டைக்கு வெளியே மக்கள் பேசிக் கொண்டிருப்பதையும் ஒற்றர்கள் பேசிக் கொண்டிருப்பதையும் தன் அரியணையில் தலை சாய்த்தபடியே ராஜாக்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

எதிரிநாட்டு வீரர்கள் கோட்டையை சூழ்ந்து கொண்டிருக்கும்போது அவர்கள் போடும் சதித்திட்டம் எல்லாவற்றையும் மன்னர் கோட்டைக்குள் உட்கார்ந்துகொண்டே கேட்டுவிடுவார். எதிரிகளின் அனைத்து ரகசிய பேச்சுக்களையும் திட்டங்களையும் தெரிந்துகொண்டு மன்னர் அடுத்தகட்ட ஆக்‌ஷனில் இறங்கிவிடுவார். இந்த சிசி ரேடியோ தொழில்நுட்பங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. சிசி ரேடியோ தொழில்நுட்பம் என்பது ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று வாய்விட்டு சிரிக்கும் அளவிற்கு வெரி சிம்பிள்தான். ஆனால் அதனை சரியாகப் பயன்படுத்திய நம் முன்னோர்களின் அறிவுக்கு நாம் நிச்சயம் ஆயிரம் ‘லைக்’ போடலாம்.

அப்படி என்ன தொழில் நுட்பம் அது?

உயரமான சுவர்கள், கட்டிடங்கள், அடர்த்தியான காடுகள், பெரிய மலைகள், இவை எல்லாமே எதிரொலியை உண்டாக்குபவை. எதிரொலியை (எக்கோ) உண்டாக்குகின்ற எல்லாப் பொருட்களும் ஒரு வகையில் ஒலி ஆடிதான். சாதாரண தட்டையான ஆடி, ஒளியைப் பிரதிபலிக்கச் செய்கிறது. அது போலவே மலை, காடுகள், கட்டிடங்களும் ஒலியைப் பிரதிபலிக்கச்செய்கின்றன. ஒளி (light) அலைகளை குவியப்படுத்தும் குழி ஆடிகளைப் போலவே ஒலி (sound) அலைகளை குவியப்படுத்தும் குழி ஒலி ஆடிகளும் இருக்கின்றன.



ஆடிகளை விடுங்கள், உங்கள் வீட்டில் இருக்கிற இரண்டு குழிவான பீங்கான் தட்டுகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய (அலாரம்) கடிகாரத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பீங்கான் தட்டினை, மேஜை மீது சாப்பிடுகிற பொசிஷனில் வைத்துக்கொள்ளவும். மேஜை அருகே நீங்கள் நின்றுகொண்டு இன்னொரு பீங்கான் தட்டினை உங்கள் காதருகே பிடித்துக்கொள்ளவும். பீங்கான் தட்டின் குழிவான பகுதி உங்கள் காது பக்கம் இருக்க வேண்டும். மேஜை மீது இருக்கும் பீங்கான் தட்டிற்கு மேலே சில சென்டி மீட்டர்கள் உயரத்தில் அலாரம் கடிகாரத்தைப் பிடித்துக்கொள்ளவும். இப்போது அந்த ஆச்சர்யம் நிகழ்வதை உங்களால் உணரமுடியும்.

அலாரத்தில் இருந்து வருகிற டிக்... டிக்... டிக்... ஒலி மேஜை மீது இருக்கிற பீங்கான் தட்டில் இருந்தே கேட்க வேண்டும். ஆனால் அது உங்கள் காதருகே இருக்கிற பீங்கான் தட்டிலிருந்து கேட்கும். மேஜை மீது இருக்கிற அலாரத்தில் இருந்து வருகிற டிக்.... டிக்... டிக்... ஒலி உங்கள் காதருகே இருக்கிற குழிவான பீங்கான் தட்டினால் குவிக்கப்பட்டு உங்கள் காதில் கேட்கிறது. கண்களை மூடிக்கொண்டு ரசித்தால், காதருகே அலாரம் கடிகாரம் இருப்பதுபோல் தோன்றும். ஒலியைக் குவித்து ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்பக்கூடிய சக்தி குழி ஒலி ஆடிகளுக்கு உண்டு என்பதுதான் நாம் பெயர் வைத்த சிசிரேடியோவின் ஒன் லைன் தொழில்நுட்பம். பழைய ராஜாக்கள் இதனை எப்படி பயன்படுத்தினார்கள் என்று சொல்ல வேண்டுமே! கோட்டைகளின் வெளிப் பிரகாரத்தில் வட்ட வடிவத்திலும் அரைவட்ட வடிவத்திலும் உள் கட்டமைப்பை ஏற்படுத்தினார்கள். இங்கு குழிவான ஆடிகளை ரகசியமாக மறைத்து வைத்து அரைவட்ட வடிவ அமைப்பில் தொடர்ச்சியாக நீண்டகுழாயை வைத்துப் பொருத்தினார்கள்.

இந்தக் குழாய் மன்னனின் சிம்மாசனம் இருக்கும்  இடத்தில் வெறுமனே குழாய்கள் நீட்டிக்கொண்டிருக்காது. இங்கு நம்  முன்னோர்கள் (மன்னர்கள்) இன்னொரு புதுமையான சிலைகளைச் செய்து வைத்துவிட்டார்கள். வெளிப்புறம் இருந்து பேசும் அனைத்து ஒலிகளும் சிலைகள் பேசுவது போன்று உட்புறம் கேட்டுக்கொண்டிருக்கும். அதாவது சிலைகள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும். இதனை சக்தி வாய்ந்த கொல்லிவாய்ப் பேய் சிலைகள் என்றும், பாதுகாப்பிற்காக மாந்திரீகம் செய்யப்பட்ட சிலைகள் என்றும் சொல்லி மற்றவர்களை மன்னர்கள் பயமுறுத்தி வைத்தார்கள்.

இவற்றை சிரிக்கும் சிலைகள் என்றும்  சிலிர்க்கும் சிலைகள் என்றும் சொல்லி வைத்தார்கள். (பதினாறாம் நூற்றாண்டில், சிரிக்கும் சிலைகளுடன் கட்டப்பட்டிருந்த கோட்டையின் கோட்டோவியத்தை கவனிக்கவும்) இந்தச் சிரிக்கும் சிலைகள் மூலமாக கோட்டைக்கு வெளியே ஆட்கள் நடமாட்டம், ஒற்றர்கள் நடமாட்டம், பணியாளர்களின் உரையாடல்கள் ஆகியவற்றை அரியணையில் இருந்தபடியே அரசனால் அறிந்து கொள்ள முடிந்தது. இப்போது சொல்லுங்கள், இது சிரிப்பாக இருக்கிறதா? சிலிர்ப்பாக இருக்கிறதா?

(அடுத்து என்ன?)