அமராவதி... ஒரு ஜீவ நகரம்!



சமீபத்தில் ஆந்திராவின் புதிய தலைநகராக நவீன அமராவதி நகரை உருவாக்க பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில் அமராவதி நகரைக் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே...

சீமாந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையோரம் உள்ளது அமராவதி நகரம். குண்டூரிலிருந்து வடக்கே 32 கி.மீ. தொலைவிலும் விஜயவாடாவிலிருந்து மேற்கே 39 கி.மீ. தொலைவிலும் இது அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 8,000 ஏக்கர். கி.பி. 2ம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 1800 வரை அமராவதி ஆந்திராவின் கலாசாரத் தலைநகராகத் திகழ்ந்தது. அமராவதி என்றால் தெலுங்கில் ‘எப்போதும் வாழ்ந்திடும் நகரம்’ என்று பொருளாகும். அசோகப் பேரரசால் மதப் பிரசாரம் செய்ய அனுப்பப்பட்ட ஒரு புத்த பிட்சு, இங்கு வந்ததாக வரலாறு கூறுகிறது. கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிவரை இது ஆந்திரர்களின் தலைநகராக இருந்தது.  இந்நகரம் ஒரு காலத்தில் தன்யகட்டகா மற்றும் தரணிகொட்டா  ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டது. அமராவதியில் உள்ள  அமரேஸ்வரா கோயில்  உலகப்புகழ் பெற்றது.



அமராவதி நகரில்தான் புத்தர் ‘காலச்சக்ரா’ எனப்படும் போதனைகளை உபதேசம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இங்கு, புத்தரின் புனித எலும்பு ஒன்று புதைக்கப்பட்டு அதன்மேல் ஸ்தூபம் ஒன்று கட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள பெளத்த ஸ்தூபங்களிலேயே இதுதான் உயரமானது. இது அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாக கருதுகிறார்கள். இந்த ஸ்தூபத்தை சுற்றிலும் கி.பி.150லிருந்து 200ம் ஆண்டிற்குள்ளாக பெளத்த குருவான நாகார்ஜுன் சுற்றுச்சுவர்களை அமைத்தார். இந்த ஸ்தூபியில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் புத்தரின் வாழ்க்கையையும், அவருடைய போதனைகளையும் எடுத்துரைக்கின்றன. அமராவதி, இக்ஷவாக்கள், கிழக்கு சாளுக்கியர்கள், தெலுங்கு சோழர்கள், கோட்டா மன்னர்கள், பல்லவர்கள், காகதீயர்கள், விஜயநகர அரசர்கள் உள்பட பல மன்னர்களால் ஆளப்பட்டது. அமராவதி நகரம், சதவன்ஹனாஸ் மகாராஜாக்களின் ஆளுகைக்குள் வந்தபோது அமராவதி ஸ்தூபம் சுண்ணாம்புக்கற்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டதுடன், புத்தரின் முழு உருவச் சிலைகள் வடிக்கப்பட்டன. புத்த மதத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அமராவதி ஸ்தூபம் மண்ணுள் புதையுண்டது.

ராஜா வாசிரெட்டி, வெங்கடாத்திரி நாயுடு, 18ம் நூற்றாண்டில் அமராவதி என்ற பெயரை இதற்கு சூட்டியதாக வரலாறு கூறுகிறது. இவர்கள்தான் புகழ்பெற்ற அமரலிங்கேஸ்வரர் ஆலயத்தை அமராவதியில் கட்டினர். 18ம் நூற்றாண்டில் பல வெளிநாட்டு அறிஞர்கள் அமராவதிக்கு வந்தனர். அவர்களில் முக்கியமானவர்  ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி Colin Mackenzie. கி.பி 1796ம் ஆண்டு அமராவதி நகருக்கு வந்த இவர்தான் புதைந்து கிடந்த புத்த ஸ்தூபியைக் கண்டுபிடித்து தோண்டி எடுத்தார். அப்போது ஸ்தூபியுடன் முன்பு இணைந்திருந்த சிற்பங்களையும் கண்டுபிடித்து புதுப்பித்தார். 2006ம் ஆண்டு தலாய்லாமா, அமராவதியில் காலசக்கர நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். புத்தர் தியான நிலையில் அமர்ந்துள்ளதைப் போல் பிரம்மாண்ட சிலை இங்கு உள்ளது. அமராவதியில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தில் 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலைகள், தாமரை மற்றும் பூர்ணகும்பா உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் ஏராளமாக உள்ளன. அமராவதியின் நற்பேறு மற்றும் செல்வச் செழிப்பைக்  குறிக்கும் வகையிலான கலைப் படைப்புகள் ஏராளமாக உள்ளன.

 - க.ரவீந்திரன், ஈரோடு