வாலன்பெர்க் மீது கொலைமுயற்சி!



மர்மங்களின் மறுபக்கம் 40

ஐவர், ஆஸ்லன்  வாலன்பெர்க்கைத் தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணமே ஹங்கேரியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த அடால்ப் ஹெய்ச்மென்னை தடுக்கத்தான்.

அமெரிக்கா நிதி உதவி செய்ய, ஸ்வீடன் நாட்டு அரசாங்கப் பிரதிநிதி என்னும் போர்வையில் வாலன்பெர்க் புடாபெஸ்ட் வந்து சேர்ந்த நாள் ஜூலை 9ஆம் தேதி. தனது ஆடைகள் அடங்கிய பெட்டி, கையில் ஒரு பை. அதில் பெட்ஷீட்டுகள் மற்றும் ஒரு சிறு கைத்துப்பாக்கி இருந்தன. 

‘‘தற்காப்புக்காகவே துப்பாக்கி” என்று சந்தேகமாக கேட்டவர்களிடம் சொன்னார் வாலன்பெர்க். வாலன்பெர்க்கிற்கு தனது இந்தப் பயணம் மிகவும்  ஆபத்தானது என்று நன்கு தெரியும். அதே சமயத்தில் தான் அதிவேகமாகவே காரியத்தில் இறங்க வேண்டும் என்பதை அவர் மறக்கவில்லை.  

ஏனெனில் அடால்ப் ஹெய்ச்மென், யூதர்களை இரயிலில் ஏற்றி மரண முகாம் களுக்கு தொடர்ச்சியாக அனுப்பிக் கொண்டிருந்ததைத்  தடுத்து  அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது வாலன்பெர்க்கின் எண்ணம். அவருக்கிருந்த குறைந்த நேரத்தில் பிளான் செய்ய வேண்டியிருந்தது. ஏனெனில்  கிழக்குப் பகுதிகளில்  ரஷ்யப் படைகள் ஆக்ரோஷமாக முன்னேறிக் கொண்டிருந்தன.
 
அப்படை வருவதற்குள் ஹங்கேரியிலுள்ள  யூதர்களை தீர்த்துக்கட்டிவிடுவது  ஹெய்ச்மென்னின் விருப்பம். ஆனால் அக்டோபர் மாதம்  ஹங்கேரி, சோவியத் நாட்டுடன் சமாதான உடன்படிக்கைக்கு வருவதற்குள்  ஜெர்மனியின் ‘‘ஏரோகிராஸ் பார்ட்டி’’ ஹங்கேரியின் நிர்வாகத்தை பலவந்தமாக ஏற்றுக் கொண்டது.

முதலில் நாஜிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொளவது என்ற முறையில் வாலன்பெர்க்,  தளபதி ஹெய்ச்மென்னை தனது இருப்பிடத்திற்கு  விருந்திற்கு வரவழைத்தார். மிகவும் ஆபத்தான பிளான்தான். ஆனால் வேறுவழி? துணிந்துவிட்டார். சாப்பிடும்ேபாது ரஷ்யாவின் படையெடுப்பைப் பற்றிக் குறிப்பிட்ட வாலன்பெர்க், கிண்டலாக “இனி ஜெர்மனியின் கதி அதோ கதிதான்” என்றார். 

முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் ஹெய்ச்மென் கேட்டுக்கொண்டே சாப்பிட்டார். விடைபெற்று போகும்போது, “நீ நினைத்தபடி நாங்கள் உன் நண்பர்களே  அல்ல.  நீ  யூதர்களைக் காப்பாற்ற  என்னென்ன  நடவடிக்கை எடுக்கிறாய் என்பதை நான் அறிவேன்.

தூதரக  அதிகாரிகள் விபத்தில் இறப்பார்கள் இல்லையா? அதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்’’ என்று முகம் சிவக்க பேசியபடி அந்த நாஜி தளபதி
அங்கிருந்து வெளியேறினார். அந்த சிக்னலை வாலன்பெர்க் புரிந்துகொள்ளத்  தவறிவிட்டார்.

சில நாட்களில் ஒரு ஜெர்மன் டிரக் வாலன்பெர்க்கின் கார் மீது பயங்கரமாக மோதி நொறுக்கியது. ஆனால் காரில் வாலன்பெர்க் பயணிக்கவில்லை என்பதால் உயிர் பிழைத்தார்.  கிறிஸ்மஸுக்கு அடுத்த நாள் ரஷ்யப்படை புடாபெஸ்ட் நகரை சூழ்ந்து கொண்டது.

அங்கிருந்து ஹெய்ச்மென் மிகவும் தந்திரமாகத் தப்பிவிட்டார். தனது யூத  மீட்பு வேலைக்காக வாலன்பெர்க் தலைநகரிலேயே  தங்கிவிட்டார்.  1945ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி ரஷ்ய  வேவுப்படை, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் அடைக்கலம்  பெற்றுத் தங்கியிருநத வாலன்பெர்க்கை சந்தித்தது. 

அவர் உடனே ரஷ்ய ராணுவத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். யூதர்களைக் காப்பாற்றுவது தன் லட்சியம் என்று சொல்வதற்குள் வாலன் பெர்க் ஹங்கேரியை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் புடாபெஸ்ட் நகரின் எல்லையை, அவருடன் அவரது டிரைவரும் கடக்கும் முன்னே, பிணை கைதிகளாகி சோவியத் ரகசியப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.

மார்ஷல் மானினோவஸ்கி என்ப வ ரைச்  சந்திக்க   அழைத்துப்  போகிறோம்   என்று  கூறி  வாலன்பெர்க்கை மாஸ்கோ செல்லும் ரயிலில் ஏற்றிவிட்டார்கள். வாலன்பெர்க் பத்திரமாக காப்பாற்றப்படவே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சுவிஸ் தூதருக்கு  ரஷ்யாவின் அயல்நாட்டு அமைச்சர் இலாகா தகவல் தெரிவித்தது அட்சர சுத்தப் பொய். 
 
ஏனெனில் ராவுல் ரஷ்யாவின் பல சிறை களில் பந்தாடப்பட்டு அடைக்கப்பட்டதால், அவர் எங்கிருக்கிறார் என யாருக்குமே தெரியவில்லை. 1947ஆம் ஆண்டு மாஸ்கோ சிறை களில் இருந்தவர் பின்னர் சைபீரியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று ஒரு தகவல் கசிந்தது.  ஸ்டாக்ஹோமில் இருந்த ரஷ்ய தூதர் வாலன்பெர்க்கின் தாயைச் சந்தித்து, 

அவளது மகன் பத்திரமாக இருக்கிறார் என்றும், விரைவில் அவளிடமே திரும்பி வருவார் என்றும் நம்பிக்கையை ஊட்டிக் கொண்டிருந்தார். அத்துடன் சுவிஸ் நாட்டு அயல்நாட்டு விவகார அமைச்சர் காரணமில்லாமல் பொய்ப்பிரச்சாரம் ெசய்கிறார் என்றும் ரஷ்ய அதிகாரி, வாலன்பெர்க்கின் அம்மாவிடம் புகார் சொன்னார். உண்மை எது, பொய் எது என தடுமாறிப்போனாள்  வாலன்பெர்க்கின் அம்மா.

(வெளிச்சம் பாய்ச்சுவோம்)

ரா.வேங்கடசாமி