ஒரு மணி நேரத்துக்கு வாடகை ரூ.700



நம் கவலைகளை, பிரச்னைகளை யாரிடமாவது கொட்டித் தீர்க்க நினைப்போம். ஆனால், இந்த டிஜிட்டல் உலகில் நாம் சொல்வதைப் பொறுமையுடன் கேட்க ஆட்கள் இல்லை. இதை சரியாகப் புரிந்துகொண்ட ஜப்பானிய நிறுவனம் ஒன்று என்ன செய்தது தெரியுமா?

‘‘உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். மனம் திறந்து எல்லாவற்றையும் எங்களிடம் கொட்டிவிட்டு ரிலாக்ஸாக வீட்டுக்குச்  செல்லுங்கள்...’’ என்ற விளம்பரத்தை நாளிதழ் களில் கொடுத்ததுடன், மக்களின் கவலைகளைக் கேட்க நடுத்தர வயதுடைய ஆட்களையும் வேலைக்கு நியமித்தது.

போன் செய்தால் போதும் அந்த ஆட்கள் உங்களைத் தேடி வந்துவிடுவார்கள். அவர்களிடம் என்ன வேண்டுமானாலும் பேசலாம். எந்தவித இடையூறும் செய்யாமல் நீங்கள் சொல்லி முடிக்கும் வரை பொறுமையுடன் கேட்பார்கள்.

வேண்டுமெனில் ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசுவார்கள். நீங்கள் அவர்களை சினிமா, ஷாப்பிங் என்று எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம். ஆனால், அவர்கள் உங்களிடம் செலவழிக்கும் நேரத்தைப் பொறுத்து வாடகை கொடுக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு வாடகை ரூ.700.