ரோடியோ ரோபோ‘‘இந்தியா போன்ற வளரும் நாடுகளில் போக்குவரத்து நெருக்கடி என் பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வாகனங்கள் வாங்குவதற்கான கடன் வசதி சுலபமாகிவிட்டது. அதனால் இந்திய சாலைகளில் வாகன பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஆனால், வாகனங்கள் அதிகரித்த அளவிற்கு சாலைகள் விரிவுபடுத்தப்படவில்லை. போக்குவரத்து நெருக்கடி மட்டுமல்ல, விபத்துக்கும் இதுதான் முக்கிய காரணம்...’’ என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

குறிப்பாக மும்பை, புனே, பெங்களூரு, சென்னை போன்ற மாநகரங்களில் போக்கு வரத்து நெருக்கடி மிக அதிகம். போக்குவரத்து காவல்துறையினர் துரிதமாக வேலை செய்தாலும் டிராபிக் ஜாம் ஆவதை கட்டுப்படுத்த முடிவதில்லை. இந்நிலையில் போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டவும் ஒரு ரோபோ வந்துவிட்டது.

போக்குவரத்தை கட்டுப்படுத்த ரோபோவா? அமெரிக்கா இல்லை ஜப்பானில் இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதுதான் இல்லை.இந்த ரோபோவைக் கண்டுபிடித்தவர்கள் இந்தியாவைச் சேர்ந்த ஆறு பள்ளி மாணவர்கள். பதினைந்து வயதைக் கூட தாண்டாதவர்கள். ‘ரோடியோ ரோபோ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திர மனிதன் நீங்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் உங்களை நிறுத்தி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பக்குவமாக எடுத்துரைப்பான்.

அதுமட்டுமல்ல, சாலை விதிகளை மீறும்போது எச்சரிக்கை செய்வான். இந்த ரோபோவின் முன்புறத்தில் உள்ள 16 இன்ச் எல்.இ.டி. டிஸ்பிளேயில் போக்குவரத்து விதிகள் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கும். டிராபிக் போலீஸைப் போல கையில் சைகை காட்டி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் இந்த ரோபோவை புனேவின் சாலைகளில் இப்போது பார்க்க முடியும்.