ஆட்டோ தோட்டம்



வீட்டுக்கு வீடு வாசற்படி மாதிரி வீட்டுக்கு வீடு மாடித் தோட்டம் என்ற புதிய கலாச் சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்கிறவர்களை  நாம் பார்க்க முடியும்.
தவிர, மாடித் தோட்டம் அமைத்துத் தருவதே ஒரு தொழிலாகவும் மாறிவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிஜெய் பால் தன் ஆட்டோவின்  மேற்கூரையில்  தோட்டம் அமைத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க  வைத்துள்ளார். இவரது புதிய கண்டுபிடிப்புதான் கொல்கத்தாவில் ஹாட் டாக்.

கொல்கத்தாவில் வெயில் சுட்டெரிக்கிறது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். நிழல் தரும் மரங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் காட்சியளிக்கின்றன. ‘‘இந்த வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிப்ப தற்காகவே இந்த ஆட்டோ தோட்டத்தை உருவாக்கினேன்...’’ என்கிறார் பிஜெய்.

இந்த ஆட்டோ தோட்டத்தைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் ஆட்டோவைப் புகைப்படமெடுத்து டுவிட்டரில் தட்டிவிட, பிஜெய்யிற்கு பிரபலங்களின் வாழ்த்துகள் குவிகின்றன. ஆட்டோ தோட்டத்தை புற்கள், சின்னச் சின்ன செடிகள் அலங்கரிக்கின்றன. தனது ஆட்டோவையும் அவர் பச்சை வண்ணத்தில் மாற்றிவிட்டார்.

அத்துடன் ‘மரங் களைக் காப்போம், மனிதர்களைக் காப்போம்’ என்று ஆட்டோவில் பெங்காலி மொழியில் எழுதியுள்ளார். நாள் தவறாமல் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதோடு, தான் சம்பாதிக்கும் சொற்ப வருமானத்தில் ஒரு பகுதியை ஆட்டோ தோட்டத்துக்காகச் செலவிடுகிறார்.

ஏ.சி வசதியுடன் கூடிய கால் டாக்சியில் பயணிப்பவர்கள் கூட பிஜெய்யின் ஆட்டோவைத் தேடி வருகின்றனர். இயற்கையான குளிர்ச்சியில் பயணிப்பது பேரனுபவம் என்கின்றனர். இந்த உலகத்தை பசுமையாக்க ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த ஒரு செடியையாவது நட்டு வைக்க வேண்டும் என்று தன் செயலின் மூலம் கற்றுக்கொடுத்துள்ளார் பிஜெய் பால்.