மாதவிடாய் என்பது பாவமா?



செய்தி: கொச்சியில் இயங்கும் தனியார் நிறுவனத்தில் 45 பெண் களுக்கு மாதவிடாய் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

மாதவிடாய் என்பதை இயல்பான ஒரு நிகழ்வாக இங்கே யாருமே ஏன் பார்ப்பதில்லை? மாதவிடாய் நாட்களில் சமைக்கக் கூடாது. சாமி கும்பிடக் கூடாது. கோயிலுக்குப் போகக் கூடாது. எளிதில் கெட்டுப் போகக்கூடிய உணவுப் பொருட்களை தொடக் கூடாது... இப்படி ஏகப்பட்ட தவறான புரிதல்கள் நம்மிடம் இருந்து வருகின்றன.

மாதவிடாய் என்பது உடலில் ஏற்படும் சில நிகழ்வுகளைப் போல இயல்பான ஒரு நிகழ்வு தான். சிலருக்குத் தலைவலி, வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் இந்த நேரத்தில் தோன்றலாம். அவற்றைத் தவிர வேறு எந்தச் சிக்கலும் மாதவிடாய் நேரத்தில் கிடையாது. அதிலும் உதிரப்போக்கை உறிஞ்சக்கூடிய நாப்கின்கள் வந்துவிட்டதில் மாதவிடாயை எதிர்கொள்வது இன்னுமே பெண்களுக்கு எளிதான, வசதியான விஷயமாகிவிட்டது.

மாதவிடாய் இல்லாமல் கரு உருவாதலோ, குழந்தை பிறப்போ சாத்தியமா? கரு உருவாகும்போது கொடுக்கும் முக்கியத்துவத்தை மாதவிடாய்க்குக் கொடுப்பதில்லை. மாத விடாயை இயல்பாக ஏற்றுக்கொண்டு பெண்கள் வீடு, அலுவலகம் என்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், அவர்களை இயல்பாக இருக்க விடுகிறதா இந்தச் சமூகம்?கொச்சியில் ‘அஸ்மா ரப்பர்’ என்ற தனியார் நிறுவனத்தில் பெண்கள் கழிவறையில் நாப்கினால் அடைப்பு ஏற்பட்டுவிட்டது. கேள்விப்பட்ட சூப்பர்வைசர், ‘இது யார் செய்த காரியம்’ என்று விசாரித்திருக்கிறார்.

யாரும் பதில் அளிக்கவில்லை. அதனால் அத்தனைப் பெண்களையும் ஒரு பெண் தொழிலாளி மூலம் சோதனை செய்ய வைத்திருக்கிறார். 50 வயதுக்குள் இருந்த 45 பெண்களுக்கு இந்தச் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. விஷயம் வெளியில் தெரிந்து, சூப்பர் வைசர்கள், பரிசோதித்த பெண் ஆகியோரைத் தற்காலிக வேலை நீக்கம் செய்திருக்கிறது நிர்வாகம். வழக்கு நடைபெற்று வருகிறது.

பெண்கள் பணிபுரியும் இடங்களில் இருக்கும் கழிவறைகளில் குப்பைத்தொட்டியும் காகிதங்களும் இருக்குமானால், அவர்கள் ஏன் கழிவறையில்   நாப்கின்களை போடப் போகிறார்கள்? பெண்களுக்கு சில அத்தியாவசியத் தேவைகள் இருந்தால், அதைச் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு நிறுவனங்களுக்கு இருக்கிறதுதானே? ‘கழிவறை கட்டிக் கொடுப்பதோடு அவர்கள் கடமை முடிந்துவிட்டது. மற்றவற்றை எல்லாம் அவர்களே சமாளித்துக்கொள்ள வேண்டும்’ என்ற எண்ணம் எவ்வளவு மோசமானது? பணியிடங்களில் உரிய வசதி செய்து கொடுக்காமல் பெண்களை சோதனை செய்தது எத்தனை அநாகரிகம்? இது ஏதோ கேரளாவில் ஒரு நிறுவனத்தில்  மட்டுமே நடந்த விஷயமில்லை.

இங்கும் பெரும் பாலான நிறுவனங்கள் பெண் ஊழியர்களை மிகவும் மோசமாகவே நடத்துகின்றன. தனக்குக் கீழ் வேலை செய்யும் ஒரு பெண் அடிக்கடி கழிவறைக்குச் சென்றாலோ, சிறிது நேரம் அதிகமானாலோ, தங்கள் கடிகாரத்தைப் பார்ப்பதையும் ‘அடிக்கடி கழிவறை சென்று தூங்குகிறாயா’ என்று ஆண் அதிகாரி கேட்பதையும் சர்வசாதாரணமாகக் காணலாம். ஒரு பத்திரிகை நிறுவனம்... அங்கே உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் பெண்கள்... ஒரு முறை கழிவறையில் நாப்கின் அடைத்துக் கொண்ட போது, பெண் ஊழியர்களை அழைத்து விசாரணை நடத்தினார்கள். ‘இந்த அலுவலகம் கோயில் மாதிரி. கழிவறையில் குப்பைக் கூடைகள் வைக்க மாட்டோம்.

அதற்காக கழிவறையில் நாப்கினைப் போடக்கூடாது. ஒரு கவர் எடுத்துட்டு வந்து உபயோகம் செய்த நாப்கின்களைப் போட்டு, வீட்டுக்கு எடுத்துச் சென்று அப்புறப்படுத்துங்கள்’ என்றார் அந்தப் பெண் அதிகாரி. எவ்வளவு படித்திருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், பெண்களாகவே இருந்தாலும் கூட மாதவிடாய் குறித்த புரிதல்களும் இல்லை... சக மனிதர்களை மதிக்கும் நாகரிகமும் இங்கே இல்லை.நாம் பணிபுரியும் இடங்களில் இத்தகைய      வசதிகளைக் கேட்டுப் பெறுவதும், அநாகரிகமான செயல்களை தட்டிக் கேட்பதும் நம் ஒவ்வொரு வருடைய கடமையே. அதற்கு நாம் முதலில்
தெளிவடைய வேண்டும் தோழிகளே...

எவ்வளவு படித்திருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், பெண்களாகவே இருந்தாலும் கூட மாதவிடாய் குறித்த புரிதல்களும் இல்லை... சக மனிதர்களை மதிக்கும் நாகரிகமும் இங்கே இல்லை. தங்களுடைய எதிர்ப்பைக் காட்டும் வகையில், ஏராளமான பெண்கள் அந்த நிறுவனத்துக்கு நாப்கின்களை அனுப்பி வருகிறார்கள்.

விஜயா ஆனந்த்