விருதுக்காக ஒருநாளும் அலைஞ்சதில்லே!



சாய்னா நெஹ்வால்

பத்மபூஷண் விருதுக்கு பரிந்துரை செய்யப்படுவதில் ஏற்பட்ட சர்ச்சையால் சற்று விரக்தி அடைந்திருந்தாலும் லக்னோ - சையது மோடி சர்வதேச பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வழக்கமான உற்சாகத்துடன் பங்கேற்றார் சாய்னா.

‘‘பத்மபூஷண் விருது தொடர்பாக அவள் கூறிய கருத்துகள் மீடியாவில் தவறாக வெளியான போது மிகுந்த வருத்தம் அடைந்தாள். பேட்மின்டன் சங்கத்துக்கு எதிராகவோ, விளையாட்டு அமைச்சகத்தை விமர்சித்தோ அவள் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த சர்ச்சையில் சுஷில் குமார் பெயரையும் இழுத்தது அவளை ரொம்பவே அப்செட் செய்துவிட்டது’’ என்றார் அப்பா ஹர்வீர்.

பயிற்சி முடிந்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்த சாய்னா, பத்மபூஷண் விருது சர்ச்சை பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை கவனிக்கத் தவறவில்லை. டைனிங் சேரை இழுத்து அதில் உட்கார்ந்தவர், ‘‘ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்தில் எல்லாம் தப்புத் தப்பாகவே நடந்தது. விருதுக்கான வீரர், வீராங்கனைகளை மத்திய அரசு சுயமாகவே தேர்வு செய்வதாக இருந்தால் நாங்கள் ஏன் இதில் மூக்கை நுழைக்கப் போகிறோம். எவ்வளவு பெரிய சாதனை படைத்தாலும், சம்பந்தப்பட்ட விளையாட்டு அமைப்பு மூலமாக மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதை அவர்கள் பரிசீலித்து, குறிப்பிட்ட விருதுக்கு சிபாரிசு செய்து  உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்புவார்கள் என்று ஏகப்பட்ட ஃபார்மாலிட்டீஸ் இருக்கும்போது என்ன செய்ய முடியும்.

போன வருஷமே பத்மபூஷண் விருது கொடுக்க வேண்டும் என்று கோரி விண்ணப்பம் செய்திருந்தேன். அப்போது, பத்மஸ்ரீ விருது வாங்கி ஐந்து வருஷம் ஆன பிறகே இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்றார்கள். அந்த கண்டிஷனும் பூர்த்தியாகிவிட்டது. இந்த ஆண்டுக்கான பரிந்துரை பட்டியலில் எனது பெயர் இல்லை என்று தெரிந்தபோதுதான் ஏமாற்றமாக இருந்தது.

அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள விரும்பினேனே தவிர, ஒருபோதும் விளையாட்டு அமைச்சகத்தை விமர்சிக்கவே இல்லை. பத்மபூஷண் விருதை எனக்குத் தர வேண்டும் என்று வற்புறுத்தும் அளவுக்கு நான் அவ்வளவு பெரியவளா என்ன? இதில் தேவையில்லாமல் மல்யுத்த வீரர் சுஷில் குமார் பெயரையும் இழுத்துவிட்டார்கள். அவர் எனக்கு நல்ல நண்பர். இருவருமே அரியானாவை சேர்ந்தவர்கள்தானே... அவருக்கு விருது கிடைத்தால் நிச்சயமாக மிகுந்த சந்தோஷம் அடைவேன். எனது சங்கடத்தை புரிந்து கொண்டதாகவும், இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் போன் செய்து ஆறுதலாகப் பேசினார். விளையாட்டுத் துறை அமைச்சர் சோனோவால்ஜீக்கும் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

இந்த சர்ச்சையில், சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்து என்னை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டிருக்கிறார்’’ என்று சொல்லியபோது சாய்னாவின் கண்கள் உணர்ச்சிவசத்தில் லேசாகக் கலங்கின.‘டோண்ட் வொர்ரி பேபி... இந்தா டீ சாப்பிடு’ என்று அம்மா உஷா ஆறுதலாகப் பேசி சாய்னாவை உள்ளே அழைத்துச் சென்றார். ‘‘போன வருஷமே நாங்க அப்ளிகேஷன் அனுப்பிட்டோம். அப்போ 5 வருஷம் கேப் இருக்கணும்கிற ரூல்ஸ் சொல்லி ஸ்போர்ட்ஸ் மினிஸ்ட்ரில நிறுத்தி வச்சுட்டாங்க.

அதனால நாங்க மறுபடியும் அப்ளிகேஷன் அனுப்பல. ஆனா, ஃபைவ் இயர்ஸ் கம்ப்ளீட் ஆனதும் உள்துறை அமைச்சகத்துக்கு சிபாரிசு செய்யறது பத்தி அதிகாரிகள் மறந்துட்டாங்க. அதை மறைக்கறதுக்காக டியூ டேட் முடிஞ்சபிறகும் பேட்மின்டன் அசோசியேஷன்லேர்ந்து பரிந்துரை கடிதம் கிடைக்கலேன்னு சொல்லிட்டாங்க. நல்ல வேளையாக அமைச்சர் இதுல சரியான நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தார்’’ என்றார் ஹர்வீர். 

தொடர்ந்து பேசிய அவர், ‘‘இது மாதிரி விஷயங்கள்ல கவனம் திரும்பினா, எவ்வளவு பெரிய வீரர், வீராங்கனையா இருந்தாலும் அப்செட் ஆயிடுவாங்க. அடுத்த டோர்னமென்ட்ல ஆடும்போதும் அந்த பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். பொதுவா இதுல எல்லாம் சாய்னா எதுவுமே சொல்ல மாட்டா. தேவையில்லாம இப்போ கான்ட்ரவர்சி ஆகிடுச்சு. பத்மஸ்ரீ, கேல் ரத்னா விருது எல்லாம் அவளோட சாதனைகளுக்காக தானாகவே கிடைச்சதுதான். எதையும் கேட்டு வாங்கணும்கிற அவசியம் இல்ல. இங்க சில நடைமுறைகள் வித்தியாசமா இருக்கு. அதை நம்மால மாத்த முடியாது’’ என்றார்.

டீ குடித்துவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகியிருந்த சாய்னா, ராஷ்டிரபதி பவனில் பத்மஸ்ரீ அவார்டு வாங்கியபோது நடந்ததை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார். ‘விருது வாங்கப்போற வீரர், வீராங்கனைகளை எல்லாம் ஒரு பக்கமாகவும் அவங்களோட ரிலேட்டீவ்ஸ் எல்லாம் இன்னொரு பக்கமாகவும் உட்கார வச்சிருந்தாங்க. என்னோட பேர படிச்சதும் கொஞ்சம் பதற்றமாகவே போனேன். பிரசிடென்ட் பிரதீபா பாட்டீல்கிட்ட இருந்து விருத வாங்கிட்டு ஓடி வந்துடணும்னு நெனச்சேன். ஆனா, விருது கொடுத்து கை குலுக்கியவர், ‘நான் டேபிள் டென்னிஸ் விளையாடுவேன் தெரியுமா? ஒலிம்பிக் போட்டில, கடைசி ஆட்டத்துல நீ சரியா விளையாடல. லைவ் ரிலேல பார்த்தேன்.

அடுத்த முறை நல்லா விளையாடுவேன்னு நினைக்கிறேன்’ என்று சிரித்தபடியே சொல்ல, அப்படியே ஸ்டன் ஆயிட்டேன். 2010ல கேல் ரத்னா விருது வாங்கினத மறக்கவே முடியாது. ஒரு வருஷத்துல மிகச் சிறப்பாக விளையாடுற எல்லா விளையாட்டு வீரர், வீராங்கனைகளில் இருந்தும் ஒரே ஒருத்தர மட்டுமே தேர்வு செஞ்சு இந்த விருதை கொடுப்பாங்க. அப்புறம் பார்லிமென்ட்ல எல்லாரும் எழுந்து நின்னு கைத்தட்டி வாழ்த்து தெரிவிச்சதையும் மறக்கவே முடியாது. இதெல்லாம் எங்களுக்கு ஒரு டானிக் மாதிரி. இந்த மாதிரி விருதுகள் கிடைக்கும் போதுதான் இன்னும் சாதிக்கணும்கிற எண்ணம் ஏற்படும்...’’ என்றார் சாய்னா.

‘‘ஆண்டின் முதல் போட்டியான மலேசிய கிராண்ட் பிரீ கோல்டு தொடரில் விளையாட முடியாததில் அவளுக்கு கொஞ்சம் வருத்தம்தான். அந்தப் போட்டில பி.வி.சிந்துவும் அஜய் ஜெயராமும் செமி ஃபைனல் வரைக்கும் போனபோது சந்தோஷப்பட்டா. சையது மோடி சர்வதேச பேட்மின்டன் போட்டில, நடப்பு சாம்பியன் சாய்னாவுக்கு உலக சாம்பியன் கரோலினா மரின் பெரிய சவாலா இருப்பாங்க. பி.வி.சிந்துவும் இந்தத் தொடரில் களமிறங்குவதால் ரசிகர்களோட எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கு. இவங்க மோதுற ஆட்டம் ரசிகர்களுக்கு அருமையான ட்ரீட்டா அமையும்கிறதுல சந்தேகமே இல்ல. 2015 சீசன்ல அவளுக்கு முதல் போட்டிங்கிற தால கொஞ்சம் பதற்றமா இருந்தா.

இதுல பத்மபூஷண் விருது சர்ச்சையும் சேர்ந்துகிட்டதாலதான் எங்களுக்கே கஷ்டமா போச்சு. எவ்வளவோ பிரச்னைகளை கடந்துதான் இந்த அளவுக்கு வந்திருக்கோம். அதனால, எதப் பத்தியும் கவலைப்படாம ஆட்டத்துல மட்டும் கவனமா இருன்னு உஷா ஆறுதலா பேசின பிறகுதான் சமாதானம் ஆகியிருக்கா. இந்த வருஷம் கண்டிப்பா சிறப்பான வெற்றிகளை குவிப்பாங்கிற நம்பிக்கை இருக்கு’’ என்கிறார் ஹர்வீர். ரசிகர்கள் மற்றும் வாசகர்கள் சார்பா நாமும் வாழ்த்துகளை தெரிவிச்சுக்கலாம்!

‘‘பார்லிமென்ட்ல எல்லாரும் எழுந்து நின்னு கைத்தட்டி வாழ்த்து தெரிவிச்சதையும் மறக்கவே முடியாது. இதெல்லாம் எங்களுக்கு ஒரு டானிக் மாதிரி. இந்த மாதிரி விருதுகள் கிடைக்கும் போதுதான் இன்னும் சாதிக்கணும்கிற எண்ணம் ஏற்படும்...’’

‘‘எவ்வளவோ பிரச்னைகளை கடந்துதான் இந்த அளவுக்கு வந்திருக்கோம். அதனால, எதப் பத்தியும் கவலைப்படாம ஆட்டத்துல மட்டும் கவனமா இருன்னு உஷா ஆறுதலா பேசின பிறகுதான் சமாதானம் ஆகியிருக்கா...’’

(காத்திருப்போம்!)