தாடி டாடியின் உப்பிடாத கதை!



 ‘தாடி’ பாலாஜி

சூப்பர் ஸ்டாரை நேரில் பார்த்தாலே பிறவிப் பயன் அடைந்ததாக உணர்பவர்களில் பிரபல முகங்களும் அடக்கம். சூப்பர் ஸ்டாரின் ரசிகரான ஒருவருக்கு, அவருடனேயே, அவருக்குப் பக்கத்தில், அவரது நண்பராக திரையைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால்? ‘லிங்கா’ படத்தில் ரஜினியின் நண்பர்களில் ஒருவராக நடித்த வியப்பு விலகாமல் இன்னும் மிதந்து கொண்டிருக்கிறார் நகைச்சுவை நடிகர் ‘தாடி’ பாலாஜி.

நகைச்சுவையில் மட்டுமின்றி, அறுசுவையிலும் அசத்துபவர் பாலாஜி என்ற தகவல் கிடைத்தது. ‘அப்படியா’ என விசாரித்தால், அடுப்பங்கரையில் இருந்தபடியே ‘ஹலோ’ சொல்கிறார் பாலாஜி. ‘இப்பவே வாங்களேன்... என் பொண்ணுக்காக பிசிபேளாபாத்தும் கேரட்-பீன்ஸ் பொரியலும் பண்ணிட்டிருக்கேன். சமைச்சுக்கிட்டே பேசுவோம்...’ என்றவரின் அழைப்பை ஏற்று ஆஜரானோம். அரை நிஜாரில் அரக்கப் பரக்க கிச்சனில் சீன் போட்டுக் கொண்டிருந்தார் பாலாஜி!


‘‘நான் பிரமாதமா சமைப்பேன்னு சொன்னா, வழக்கம்போல யாருமே நம்ப மாட்டேங்கிறாங்க. அதான் உங்களுக்கு நேர்லயே நிரூபிச்சிடலாம்னு உடனே வரச் சொன்னேன்...’’ - பாவமாகச்சொல்பவர் பிரமாதமாக சமைப்பாராம்.

‘‘சின்ன வயசுலேருந்தே கிச்சன்தான் வீட்லயே என்னோட ஃபேவரைட் இடம். அம்மா சமைப்பாங்க. அப்பா அவங்களுக்கு காய்கறி நறுக்கிக் கொடுப்பார். சின்னச் சின்ன ஹெல்ப் எல்லாம் பண்ணுவார். அப்போ நானும் அம்மா, அப்பாவோட கிச்சன்லயே இருப்பேன். அம்மா சமைக்கிறதைப் பக்கத்துல இருந்து கவனிப்பேன். அப்பா பிஸியா இருக்கிற நேரம் நான்தான் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுவேன். எனக்கும் என் தங்கைக்கும் 12 வருஷவித்தியாசம். அதனால அவ வளர்ந்து அம்மாவுக்கு ஹெல்ப் பண்ண ஆரம்பிக்கிற வரைக்கும் நான்தான் எல்லாம் பண்ணியிருக்கேன்.

சினிமா ஆசையில வீட்டை விட்டு வெளியே வந்தேன். தனியா இருந்து சமைச்சு சாப்பிட வேண்டிய கட்டாயம். முதல் முதல்ல வெங்காயமும் கத்தரிக்காயும் போட்ட சாம்பார் வச்சேன். சாப்பிட்டுப் பார்த்தப்ப ‘அட... பரவால்லையே... நமக்குக்கூட நல்லாவே சமைக்க வருதே’னு என்னை நானே தட்டிக் கொடுத்துக்கிட்டேன். சமைக்கத் தெரிஞ்சதால என்னோட பேச்சிலர் வாழ்க்கையில பிரச்னைகள் இல்லாமப் போச்சு. அப்புறம் கல்யாணம்... நித்யாவும் நானும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்.

நித்யா பிரமாதமா நான்வெஜ் சமைப்பாங்க. எனக்கு சைவம்தான் தெரியும். அவங்களுக்கு நான் விதம் விதமா வெஜிடேரியன் சாப்பாடு செய்து கொடுக்க, அவங்க நான்வெஜ்ல கலக்க எங்க வீட்டு கிச்சன்ல எப்போதும் விருந்தே நடக்கும்...’’ என்கிற பாலாஜி, தன் மனைவியுடன் சேர்ந்து ஏகப்பட்ட சமையல் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை அள்ளியவர் என்பது குறிப்பிடத்தக்கது!

மகள் பிறந்த பிறகு தனது சமையல் ஆர்வம் இன்னும் அதிகரித்ததை மகிழ்ச்சியுடன் சொல்கிறார்.‘‘என் பொண்ணு போஷிகாவுக்கு அவங்கம்மாவைவிட நான் பண்ணிக் கொடுக்கிற சாப்பாடுதான் இஷ்டம். அவளுக்கு சமைக்கிறதுன்னா நானும் ரொம்பவே உற்சாகமாயிடுவேன். தினம் தினம் புதுசு புதுசா யோசிச்சு, சத்தானதாசமைச்சுக் கொடுப்பேன். கறிவேப்பிலையை ஒதுக்கி வைக்கிற குழந்தைகளுக்கு மத்தியில என் பொண்ணுக்கு கறிவேப்பிலைனா அவ்ளோ பிடிக்கும். அதை மொறுமொறுனு வறுத்து, அழகா அலங்காரமா வச்சுக் கொடுத்தனுப்புவேன். நான் சமைச்சுக் கொடுத்தனுப்பற அன்னிக்கெல்லாம் அவளோட டிபன் பாக்ஸ் கழுவித் துடைச்ச மாதிரி சுத்தமா வரும்...’’ - அன்பான அப்பாவாகப் பேசுபவர் மறுபடி அம்மா புராணத்துக்குள் நுழைகிறார்.

‘‘அம்மாகிட்ட நான் வெறும் சமையலை மட்டும் கத்துக்கலை. கிச்சனை எப்படி சுத்தமா வச்சுக்கணும்கிறதை அவங்கதான் எனக்குக் காட்டினாங்க. பெரிய விருந்தே சமைச்சிருப்பாங்க. அடுத்தஅஞ்சாவது நிமிஷம் கிச்சனுக்குள்ள போய் பார்த்தா சமையல் பண்ணின சுவடே தெரியாது. அவ்ளோ பளிச்சுனு இருக்கும். மளிகை சாமான்கள்லேருந்து, காய்கறி வரைக்கும் அது அது அந்தந்த இடத்துல கரெக்டா இருக்கும். புதுசா யாராவது வீட்டுக்கு வந்து சமைக்கணும்னு நினைச்சா கூட எது எங்கே இருக்குனு தேட வேண்டியிருக்காது.

அந்த பர்ஃபெக்ஷன் எங்கம்மா மீனாவுக்கு மட்டும்தான் வரும்...’’ - அம்மாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, மனைவி புராணத்தை ஆரம்பிக்கிறார் மனிதர். ‘‘சமைக்கிறபோதும் சரி, சமைச்ச பிறகும் சரி.. என் மனைவி நித்யா எதையுமே வேஸ்ட் பண்ண மாட்டாங்க. அளந்து வச்ச மாதிரி சமைக்கிறதுல அவங்களை அடிச்சுக்க ஆளே இல்லை. அதே மாதிரி சமையல்ல போடற உப்பு, புளி, காரமும் அளவா, அவ்ளோ கச்சிதமா இருக்கும். அப்படி பர்ஃபெக்டா சமைக்கிறவங்களுக்கு நான் முதல் முதல்ல பண்ணிக் கொடுத்த கோஸ் கூட்டு மறக்கவே மறக்காது. கல்யாணமான புதுசு...

பொண்டாட்டியை அட்ராக்ட் பண்ணணும்னு பிரமாதமா சமைக்கப் போயிட்டேன். ஒருவாட்டி எங்கம்மா மிக்ஸட் காய்கறி கூட்டு பண்ணினப்ப, அதை மரு மகளுக்குக் கொடுக்கணும்னு ஆசை ஆசையா கொண்டு வந்து கொடுத்தார் எங்கப்பா. அந்தச் சம்பவத்துலேருந்து மாமனார் மேல நித்யாவுக்கு செம மரியாதை... பாசம்...  ‘நானும் கூட்டு பண்ணி அசத்தறேன் பாரு’னு முட்டைக்கோஸ் கூட்டு செய்யத் தயாரானேன். பத்துவாட்டி ரெசிபியை செக் பண்ணி, தனியா, மிளகு, தேங்காய், உளுத்தம் பருப்புனு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து எடுத்து வச்சு சமைச்சு, காதல் மனைவிக்கு கொண்டு போய் கொடுத்தேன். ‘சூப்பரா’னு ஆரம்பிச்சதும் எனக்குத் தலைகால் புரியலை.

‘அவ்ளோ சூப்பரா இருக்கு போல’னு நினைச்சேன். ‘சூப்பரா இருந்திருக்கும் உப்பு மட்டும் போட்டிருந்தா’னு சொன்னதும் உப்புச்சப்பில்லாமப் போச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து சமைக்கிறபோது அது வீடோ, வெளியில போட்டியோ... ‘நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம். உப்பு மட்டும் போட்டா போதும்’னு சொல்லிடுவாங்க நித்யா!’’ - உப்பிடாத கதையை உருக்கமாகச் சொல்கிறார்.

‘‘வேலை விஷயமா அடிக்கடி நிறைய வெளிநாடுகளுக்குப் போகறேன். அப்பல்லாம் தனியா தங்கியிருக்கிற பேச்சிலர்ஸை பார்க்கிறப்ப பாவமா இருக்கும். ஊர்லேருந்து கிளம்பறப்ப கொண்டு வந்த பருப்புப் பொடியையும், இன்ஸ்டன்ட் மிக்ஸையும் வச்சு சாப்பிட்டு நாக்கு செத்துப் போயிருப்பாங்க. வெளியில சாப்பிடவும் கட்டுப்படியாகாது. அடப்பாவமே.... அவசரத்துக்கு சாதமும் ரசமும் வைக்கப் பழகியிருந்தா கூட சமாளிச்சிருக்கலாமேனு தோணும். சமைக்கக் கத்துக்கிறதுங்கிறது இன்னிக்கு பொண்ணுங்களைவிடவும் பசங்களுக்குத்தான் அவசியம் தெரிஞ்சிருக்க வேண்டிய விஷயம். இன்னிக்கும் என் தங்கச்சியைவிட நான் நல்லா சமைப்பேன்னு சொல்லிக்கிறதுல எனக்குப் பெருமைதான்.

அதுக்குக் காரணம் சின்ன வயசுலேருந்தே எனக்கு அடுப்பங்கரை அறிமுகமானதுதான்...’’ அம்மா, மனைவியைத் தொடர்ந்து தங்கையைப் பற்றித் தொடர்கிறார் பாசக்கார ப்ரதர். ‘‘என் தங்கச்சி இப்ப சூப்பரா சமைக்கக் கத்துக்கிட்டாங்க. ஆனா, நான் தான் அவங்க சாப்பாட்டை இன்னும் டேஸ்ட் பண்ணலை. ஒருநாள் பிசிபேளாபாத் பண்ணிட்டு, ‘உன்னை மாதிரியே வந்ததுடா’னு சொன்னா. யார் சொன்னதுனு கேட்டேன்.

‘பிசிபேளாபாத்தே சொல்லுச்சுடா’னு பல்பு கொடுத்தா. என்னதான் சொன்னாலும் நான் பண்ற பிசிபேளாபாத்துக்கு பக்கத்துல வர முடியுமா?’’ என்றபடி ஆவி பறக்கும் பிசிபேளாபாத்தையும் அதற்குத் தோதான கேரட்-பீன்ஸ் பொரியலையும் சமைத்து முடிக்கிறார் பாலாஜி.‘‘என் பொண்ணு ஸ்கூல்லேருந்து வர்ற நேரம்... வந்ததும் அவளுக்கு ஊட்டணும்...’’ பிசிபேளாபாசத்துடன் காத்திருக்கிறார் தாடி டாடி!

பிசிபேளாபாத்

என்னென்ன தேவை?

அரிசி - ஒரு கப்,
துவரம் பருப்பு - அரை கப்,
சின்ன வெங்காயம் - 15,
கறிவேப்பிலை - சிறிது,
தக்காளி - ஒன்று (சிறியது),
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
காய் கலவை - ஒரு பெரிய கப் (கத்தரிக்காய் - 2, பீன்ஸ் - 10, முருங்கைக்காய், கேரட், உருளைக்கிழங்கு - தலா ஒன்று).

வறுத்துப் பொடிக்க...

தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கடலைப் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு - அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
வெந்தயம் - கால் டீஸ்பூனுக்கும் குறைவு,
காய்ந்த மிளகாய் - 6,
கறிவேப்பிலை - சிறிது (விரும்பினால்),
பட்டை, லவங்கம் - சிறிது,
தனியா  - ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிப்பதற்கு...


கடுகு - கால் டீஸ்பூன்,
சீரகம் - கால்
டீஸ்பூன், உளுந்து, கடலைப் பருப்பு - அரை டீஸ்பூன்,
பெருங்காயம் - சிறிது.

எப்படிச் செய்வது?


முதலில் காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். அரிசி யையும் பருப்பையும் களைந்து 3 கப் நீர் ஊற்றி குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தேங்காய்த் துருவலை வறுத்து எடுக்கவும். பிறகு காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும். அதன் பிறகு தனியா (மல்லி விதை), உளுந்து மற்றும் கடலைப் பருப்பை வறுக்கவும். அதன் பிறகு மீதமுள்ள பட்டை, லவங்கம், மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து கடைசியாக கறிவேப்பிலையை வறுத்து எடுத்து அனைத்தையும் சேர்த்து ஆறவிடவும்.

வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாகவோ அல்லது விழுதாகவோ அரைத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து ஒரு முறை பிரட்டிவிட்டு காய் கலவையைச் சேர்க்கவும். (முருங்கைக்காயை இப்போது சேர்க்க வேண்டாம்). காய்க்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கி, காய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பிறகு துருவிய வெல்லம், புளிக்கரைசல், மஞ்சள் தூள் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து ஒரு கொதிவிடவும். கொதி வந்ததும் வேக வைத்து எடுத்த அரிசி, பருப்பு மற்றும் பொடித்த மசாலா தூள் சேர்க்கவும். மூன்று கப் நீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கலந்து குக்கரை மூடி பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

கேரட் - பீன்ஸ் பொரியல்


என்னென்ன தேவை?

நறுக்கிய பீன்ஸ்  - 1/2 கப்,
நறுக்கிய கேரட்  - 1/2 கப்,
நறுக்கிய வெங்காயம் - 1,
தேங்காய்த் துருவல் -  1/2 மூடி,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பச்சைமிளகாய் - 2,
உப்பு மற்றும் எண்ணெய்  -தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, நன்கு காய்கறிகள் வெந்து, தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். பின்னர் மற்றொரு அடுப்பில் வேறு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்பு கீறிய பச்சை மிளகாய், மெலிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள காய்கறிகளை போட்டு, 2 நிமிடம் வதக்கவும். தேங்காய்த் துருவல் சேர்த்து, பிரட்டி இறக்கவும்.

என் பொண்ணு போஷிகாவுக்கு அவங்கம்மாவைவிட நான் பண்ணிக் கொடுக்கிற சாப்பாடுதான் இஷ்டம். அவளுக்கு சமைக்கிறதுன்னா நானும் ரொம்பவே உற்சாகமாயிடுவேன். தினம் தினம் புதுசு புதுசா யோசிச்சு, சத்தானதா சமைச்சுக் கொடுப்பேன்...

- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்