தடைக்கற்களே வெற்றி உயரத்தின் படிக்கட்டுக்கள்



சுதிக்ஷ்னா வீரவள்ளி

‘‘ஆடும் போதும் பாடும் போதும் நான் அமைதியாகிறேன். எனக்குள்ள நம்பிக்கை பிறக்குது. புது எனர்ஜி கிடைக்குது. என்னையே நான் எனக்குள்ள கண்டுபிடிக்கிறேன். இது எல்லாத்தையும் மீறி, பாட்டும் பரதமும் எனக்கு விவரிக்க முடியாத ஒரு சந்தோஷத்தைக் கொடுக்குது...” என்கிறார் சுதிக்ஷ்னா  வீரவள்ளி. அமெரிக்காவை சேர்ந்த தமிழச்சியான சுதிக்ஷ்னா, வலது கையும் வலது காலும் இல்லாமல் பிறந்தவர். இப்படியொரு நிலையில் யாருக்குமே ஆடலையோ, பாடலையோ பற்றி யோசிக்கத் தோன்றியிருக்காது. சுதிக்ஷ்னாவுக்குத் தோன்றியிருக்கிறது. தன்னால் முடியும் என்கிற அவரது அந்த தன்னம்பிக்கையே இன்று முன்னணி இசை மற்றும் நடனக் கலைஞர்கள் வரிசையில் சுதிக்ஷ்னாவின் பெயரையும் சேர்த்திருக்கிறது!


‘‘அமெரிக்காவுல பிறந்து வளர்ந்தவள் நான். அம்மாவும், அப்பாவும் இசை, நடனம், தமிழ் கலாசார விஷயங்கள்ல ஈடுபாடு கொண்டவங்கன்றதால எனக்கும் சின்ன வயசுலயே அவை எல்லாம் அறிமுகமாச்சு. என்னோட 4 வயசுலயே ஒரு சின்ன டேப் ரெக்கார்டர்ல எம்.எஸ்.சுப்புலட்சுமியம்மாவோட நாம ராமாயணத்தைக் கேட்டுக் கேட்டு மனப்பாடம் பண்ணிப் பாடுவேன். நினைச்சபோதெல்லாம் பாவாடைச் சட்டையையும் நகைகளையும் மாட்டிக்கிட்டு டான்ஸ் ஆடத் தயாராயிடுவேன்...’’ - குழந்தையாக மாறிக் குதூகலிக்கிறவரின் முதல் குரு அவரது அம்மா!

‘‘எங்கம்மாவும் ஒரு டான்ஸர்தான். சிகாகோவுல அவங்க ஒரு டான்ஸ் ஸ்கூல் நடத்தறாங்க. என்னோட 5 வயசுலயே அம்மாகிட்ட டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சிட்டேன். முதல்ல பொழுதுபோக்காதான் கத்துக்கிட்டேன். காலேஜ் படிக்கிறபோதுதான், டான்ஸையே என் எதிர்காலமா எடுத்துக்கிட்டா என்னங்கிற எண்ணம் வந்தது. அதை நோக்கின என் முயற்சிகளும் பயிற்சிகளும்தான் இன்னிக்கு இந்த இடத்துல கூட்டிட்டு வந்து நிறுத்தியிருக்கு” என்கிற சுதிக்ஷ்னாவுக்கு கையும் காலும் இல்லாதது அவரது ஆர்வத்தை எந்த வகையிலும் தடுக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

‘‘பிறக்கும்போதே ஒரு கையும் காலும் இல்லை. செயற்கை காலோட நடக்கவும் மையோஎலெக்ட்ரிக் கையைப் பயன்படுத்தவும் ரொம்ப சின்ன வயசுலயே பழகிட்டேன். வீட்டுக்குள்ளேயே எனக்கு ரொம்பப் பக்கத்துலயே டான்ஸ் இருந்தது  வசதியாப் போச்சு. எனக்கு டான்ஸ் பிடிச்சது. அவ்வளவுதான். முடியுமா, முடியாதாங்கிற கேள்வியெல்லாம் வரலை. ஆனா, மத்தவங்களுக்கு அந்தக் கேள்வி இருந்தது. ‘மனசிருந்தா மார்க்கமுண்டு’னு நம்பறவ நான். என் நம்பிக்கையை சந்தேகப்பட்டாங்க பலரும்.

அப்போதும் அவங்க முகத்துல கரியைப் பூசற மாதிரி டான்ஸ் ஆடிக் காட்டணும்ங்கிற எண்ணம் எனக்கு வரலை. என்னோட தன்னம்பிக்கையை மத்தவங்களுக்குப் புரிய வைக்கிற ஒரு வழியாதான் என் நடனத்தைப் பார்த்தேன்...’’ - தன்னம்பிக்கை தளும்புகிறது சுதிக்ஷ்னாவின் பேச்சில்!

‘‘சந்தோஷம்கிறது ஒரு வகையான போதையில்லையா? அப்படியொரு போதை தரும் சந்தோஷத்தை நான் ஆடும்போதும் பாடும் போதும் ஃபீல் பண்றேன். நாட்டியம் எனக்குள்ள எந்தளவுக்கு ஊடுருவியிருக்குன்னா... வீட்டுக்குள்ள சும்மா நடந்துக்கிட்டே இருப்பேன். திடீர்னு என்னோட நடை, அடவா மாறி, என்னை நாட்டியத்துக்குள்ள இழுக்கும்...’’ - எண்ணம், செயல், சிந்தனை எல்லாவற்றிலும் ஆடலும் பாடலும் ஆக்கிரமிக்க அழகாகப் பேசுகிறார் சுதிக்ஷ்னா. கை அசைவுகளும் விரல் முத்திரைகளும் அவசியப்படுகிற பரத நாட்டியத்தில், சுதிக்ஷ்னா எப்படி சமாளிக்கிறார்?

‘‘நான் என் கையையோ, விரல்களையோ இழக்கலை. பிறக்கும்போதே அது ரெண்டும் இல்லை. அதனால அந்த ரெண்டும் இல்லாம எப்படி சமாளிக்கிறதுங்கிறது பிறந்த நிமிஷத்துலேருந்தே எனக்குப் பழக்கப்பட்ட விஷயங்கள். கோரியோகிராப் பண்ணும்போது அம்மாவும் நானும் சேர்ந்து எனக்கேத்த, அழகா பிரதிபலிக்கக்கூடிய ஸ்டெப்ஸா பார்த்து ட்ரை பண்ணுவோம். பல முறை முயற்சி பண்ணியும் குறிப்பிட்ட ஒரு ஸ்டெப் நாங்க எதிர்பார்த்தபடி வரலைன்னா, கொஞ்சம் மாத்துவோம். என்னை நான் இம்ப்ரூவ் பண்ணிக்க எவ்வளவு வேணாலும் மெனக்கெடத் தயாரா இருப்பேன்...’’ என்கிறவருக்கு  நடனம் ஒரு கண் என்றால் பாட்டு இன்னொரு கண்ணாம்! இரண்டையும் சமாளிக்கும் வித்தையை அறிந்திருக்கிறார் இவர்.

‘‘ரெண்டு விஷயங்களுக்கும் எப்படி டைம் ஒதுக்க முடியும்னு நிறைய பேர் கேட்கலாம். பிடிச்சதைச் செய்ய மனசுதான் முக்கியம்னு நம்பறேன் நான். என்னோட யுனிவர்சிட்டிக்கு பக்கத்துலயே ஒரு அபார்ட்மென்ட்ல தங்கியிருக்கேன். வாரம் ஒரு முறைதான் வீட்டுக்கு வர முடியும். யுனிவர்சிட்டியில பாடவோ, ஆடவோ ஏதுவான நேரம் கிடைக்காது. ஆனாலும், நான் அதிகாலையில எழுந்து என்னோட கிளாஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சாதகம் பண்ணுவேன். மிச்ச நேரம் டான்ஸ் பிராக்டீஸுக்கு. வாரக் கடைசியில வீட்டுக்கு வரும்போது பாட்டையும் நடனத்தையும் மாத்தி மாத்தி பிராக்டீஸ் பண்ணுவேன். மனசுக்குப் பிடிச்சதை செய்யணும்னா நேர நிர்வாகம் ஒரு விஷயமே இல்லை.”

அமெரிக்காவில் இருந்தாலும், டிசம்பரில் நடக்கும் மியூசிக் சீசனில் கலந்து கொள்ள தவறாமல் இந்தியா வருகிறார் சுதிக்ஷ்னா.‘‘ஒரு கலைஞரா பெர்ஃபார்ம் பண்ண மட்டுமில்லாம, ரசிகையாகவும் மியூசிக் அண்ட் டான்ஸ் நிகழ்ச்சிகளை ரசிக்கவும் இந்தியாவுக்கு வருவேன். சென்னையோட பிரதான சபாக்கள்ல புரோகிராம் பண்ற அந்தப் பெருமையும் ரசிகர்களோட கரகோஷ மும் அடுத்த வருஷ விசிட் வரைக்கும் எனர்ஜி குறையாமப் பார்த்துக்கும்...’’ - உற்சாகமாகச் சொல்கிறவர், இசைக் கலைஞர் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவிடமிருந்து ‘யுவகலா விபான்ச்சி விருது’ பெற்றிருக்கிறார்.

சிகாகோவின் இல்லினாயிஸ் பல்கலைக்கழகத்தில் நியூரோசயின்ஸ் மற்றும் ஆங்கிலத்தில் பட்டம் படிக்கிற சுதிக்ஷ்னா, இந்த வருடம் மே மாதம் இரட்டை பட்டதாரியாகப் போகிற மகிழ்ச்சியில் இருக்கிறார். ‘‘அடுத்து மாஸ்டர்ஸ் டிகிரி பண்ணப் போறேன். ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு வருஷம் பிரேக் எடுத்துட்டு, இந்தியா வரப்போறேன். பாட்டுலயும் டான்ஸ்லயும் முழு கவனம் செலுத்தப் போறேன். அது மட்டுமில்லாம என்னோட நியூரோசயின்ஸ் படிப்பை, பாட்டு, டான்ஸ்கூட இணைச்சு மத்தவங்களுக்கு உபயோகமா ஏதாவது செய்ய முடியுமாங்கிறதைப் பத்தியும் யோசிச்சிட்டிருக்கேன்...’’ - எனர்ஜி குறையாமல் பேசுகிறவர் எப்போதுமே இப்படித்தானா?

‘‘இல்லை... எனக்கும் எப்போதாவது மனசு அப்செட் ஆகும். அப்பல்லாம் பாடுவேன் இல்லைனா ஆடுவேன். சட்டுனு மனசு லேசாகிடும்...’’ - பளிச்சென சிரிப்பவருக்கு தான் ஒரு மாற்றுத் திறனாளியாக இருப்பது குறித்த வருத்தம் துளியும் இல்லாதது வரவேற்கத்தக்க வியப்பு.

‘‘என்னைப் பொறுத்த வரைக்கும் ஊனம்கிறது உடல் சார்ந்த விஷயமில்லை. ஒருத்தரை முன்னேற விடாமத் தடுக்கிற மனசும் சூழலும்தான் நிஜமான ஊனங்கள். ஒரு கையும் காலும் இல்லாம நான் டான்ஸ் பண்றதுங்கிறது பலரும் நினைக்கிற மாதிரி ஒரு மிராக்கிள் இல்லை. அது என்னோட ஈடுபாடும் ஆர்வமும் சம்பந்தப்பட்டது. என்னைச் சுத்தியிருந்த மக்கள் ரொம்ப ஆதரவா இருந்ததால என்னால சாதிக்க முடிஞ்சது. மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்ல...

எல்லாப் பெண்களுக்குமே நான் ஒரு விஷயத்தைச் சொல்ல ஆசைப்படறேன். உங்களைச் சுத்தியிருக்கிற மக்கள் உங்களை உற்சாகப்படுத்தற, ஊக்கப்படுத்தறவங்களா இருக்கிற மாதிரிப் பார்த்துக்கோங்க. இயல்பை ஏத்துக்கற மனப்பான்மை ரொம்பவே முக்கியம். அதுதான் தடைகளைத் தாண்டி முன்னேறும் லட்சியத்தையும் பொறுமையையும் கத்துக் கொடுக்கும். எனக்கேன் இப்படினு நினைக்க ஆரம்பிச்சிட்டா, அடுத்து ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. தடைக்கற்களை வெற்றிங்கிற உயரத்தை அடையற படிக்கட்டுகளா பார்க்கப் பழகிட்டா, வாழ்க்கை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாறிடும்...’’ - சூப்பர் தத்துவம் சொல்கிறார் சுதிக்ஷ்னா.

‘‘சந்தோஷம்கிறது ஒரு வகையான போதையில்லையா? அப்படியொரு போதை தரும் சந்தோஷத்தை நான் ஆடும்போதும் பாடும் போதும் ஃபீல் பண்றேன்!’’

‘‘உங்களைச் சுத்தியிருக்கிற மக்கள் உங்களை உற்சாகப்படுத்தற, ஊக்கப்படுத்தறவங்களா இருக்கிற மாதிரிப் பார்த்துக்கோங்க!’’