வாய்ப்பு வாசல்



மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை அமைப்புகள்

குறைகள் பல இருந்த போதும் ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ எனப் பாடும் மனத்துணிவு இவர்களுக்கு மட்டுமே இருக்கிறது. உடலிலுள்ள குறைகளை தன்னம்பிக்கையாலும் திறனாலும் வெல்பவர்கள் இவர்களே. அப்படிப்பட்டவர்கள் தங்களை மேலும் பலப்படுத்திக்கொள்ள உதவும் மையங்கள்தான் இவை. ஒவ்வொரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதின் பின்னணியிலும் ஏதோ ஒரு சோகம் இழையோடுவதை அறிய முடிகிறது. அந்த சோகத்தி லிருந்து மற்றவர்களை மீட்டிடவே இந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

சோல் ஃப்ரீ (திருவண்ணாமலை)


முதுகுத்தண்டுவடப் பாதிப்புக்கு (Spinal cord injury) ஆளானவர்களுக்குத் தேவையான வீல் சேர், உதவித்தொகை,வேலை வாய்ப்பு மற்றும் அவர் களின் மறுவாழ்வுக்குத் தேவையான உதவி களைச் செய்கிறது இந்த அமைப்பு. தனிப்பட்ட முறையில் இந்த பாதிப்பை உணர்ந்தவர் என்பதால், முதுகுத்தண்டுவடப் பாதிப்புக்குஆளானவர் களுக்கு - குறிப்பாக பெண்களுக்கு நம்பிக்கையூட்டி வாழ வழி செய்கிறார் ப்ரீத்தி சீனிவாசன் (9952656756).

ஆதவ் டிரஸ்ட் (சேலம்)


தங்களைப் போன்றே ‘மஸ்குலர் டிஸ்ட்ரோபி’ நோயால் பாதிக்கப்பட்டவர் களை பாதுகாத்துப் பராமரிக்க, வானவன் மாதேவி மற்றும் இயல் இசை
வல்லபி ஆகிய சகோதரிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு. தசைச் சிதைவு நோயாளிகளுக்குத் தேவையான வீல் சேர் போன்றவையும் பிசியோதெரபி மற்றும் அக்குபிரஷர் பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகின்றன (9976399403, 9976399409).

அமர் சேவா சங்கம் (திருநெல்வேலி)


போலியோ போன்ற பல காரணங்களால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கும் வசதி, டே கேர் வசதி, பள்ளி, தொழிற்கல்வி, உடற்கருவிகள் வழங்குதல் என பெரிய அளவில் இயங்குகிறது இந்த அமைப்பு. மொத்தத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மறு வாழ்வு மையமாக திகழ்கிறது.  (ராமகிருஷ்ணன்: 04633249170).

ஸ்ரீ அருணோதயம் (சென்னை)


ஆதரவற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உணவு, உடை, தங்குமிடம், கல்வி மற்றும் மருத்துவ உதவி என அனைத்துத் தேவைகளையும் அளிக்கிறது இந்த நிறுவனம் (ஐயப்பன் சுப்ரமணியன்: 9444915803/  98843 07815 / 044-26512880).

பாரடைஸ் ஹோம் (கோவளம்)


சிறப்புக் குழந்தைகள் அன்றாட வேலைகளை செய்து கொள்வதற்கு வழிகாட்டுவதோடு, மெழுகுவர்த்தி, கவர் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரிப்பு போன்ற வேலைவாய்ப்புப் பயிற்சிகளையும் அளிக்கிறது இந்த இல்லம். பிசியோதெரபி, யோகா போன்ற மருத்துவப் பயிற்சிகளும் முறையான பயிற்றுனர்களால் அளிக்கப்படுகிறது (மல்லிகா கோபால்: 9382161804).

பூர்ணோதயா (திருச்சி)


மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்கென காகிதப்பை தயாரிப்பு, நாப்கின் தயாரிப்பு, செயற்கை நகைகள் தயாரிப்பு போன்ற தொழிற்பயிற்சி கள் தரப்படுகிறது. மனநலம் குன்றிய மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளியும் நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அடையாள அட்டை, அரசின் நலத்திட்டங்கள், மருத்துவ முகாம், பிரத்யேக சுய உதவிக்குழு, வங்கிக் கடன், வேலை வாய்ப்பு குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன (கலையரசி: கொளக்குடி, லால்குடி அருகில், திருச்சி. 9443456521).

ஹோப் ரிஹாபிலேஷன் சென்டர் (சென்னை)


40 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் இந்த அமைப்பு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உணவு, தங்குமிடம், கல்வி மற்றும் மருத்துவ உதவி என அனைத்துத் தேவைகளையும் அளிக்கிறது. இங்கு கணினிப் பயிற்சி போன்ற தொழிற் கல்வியும் அளிக்கப்படுகிறது (எல்டன் வீஸ்னர், டோரதி வீஸ்னர்: 044-26261748).

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்