உடை என்பது உடை மட்டுமே



என் மகனாவது குறுகிய மனப்பான்மை இல்லாதவனாக இருக்கட்டும்!

நடிகை கனிகா

‘ஃபைவ் ஸ்டார்’, ‘வரலாறு’, ‘ஆட்டோகிராப்’ உள்பட தமிழ்ப் படங்களிலும், ‘பைசாசி ராஜா’, ‘பாக்யதேவதா’ போன்ற மலையாளப் படங்களிலும் நடித்தவர் கனிகா. ‘சச்சின்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’ படங்களின் நாயகிகளுக்கு குரல் கொடுத்தவரும் இவரே. சின்னத்திரை மற்றும் விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிற கனிகா, ஒரு பாடகியும் கூட! அண்மையில் சமூக வலைத்தளத்தில் தான் வெளியிட்ட தனது படத்தை  கண்டித்தவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் இந்த மதுரைப் பொண்ணு!

ஷார்ட்ஸ் அணிந்த படம் ஒன்றை அவர் வெளியிட, ‘நீங்கள் நல்ல பெண் என்று நினைத்திருந்தோம்’ என்று கமென்ட் கொடுத்திருக்கிறார்கள் பலர். ‘இப்படி போஸ் கொடுத்திருக்கிறாயே... உனக்கு வெட்கமில்லையா?’ என்று மெசேஜ் அனுப்பி இருக்கிறார் ஒரு பெண்மணி.  ‘நீங்கள் ஒரு தாய் என்பதை மறந்து விட்டீர்களா?’ என்று கேட்டிருக்கிறார் ஒரு ஆண். இவற்றைக் கொண்டுக் கொதித்துப்போன கனிகா தனது படத்தை கண்டித்தவர்களுக்கு அளித்த பதில் மிகுந்த முக்கியத்துவம்    பெறுகிறது.

“ஷார்ட்ஸ் அணிந்து நான் வெளியிட்டிருந்த எனது படத்துக்கு வந்திருந்த கமென்ட்டுகள், குறுந்தகவல்களை பார்த்த பின், என்னால் இதை எழுதாமல் இருக்க முடியவில்லை. சிலர் எழுதியிருக்கிறார்கள்... ‘உங்களை நல்ல பெண் என்று நினைத்திருந்தோம்’ என்று. அப்படி என்றால், இப்போது இந்தப் படத்தை பார்த்தபின் என்னை தவறான பெண்ணாக நினைக்கிறீர்களா?

ஒரு பெண், ‘உனக்கு உன் வயது என்னவென்று தெரியுமா? ஷார்ட்ஸ் அணிந்திருக்கிறாயே... உனக்கு வெட்கமாக இல்லையா?’ என்று கேட்கிறார். எனக்கு வசதியாக இருக்கும் வரை, தேவைப்படும் இடங்களில், நான் எனது 20, 30, 40, ஏன் 50 வயது தாண்டியும் கூட ஷார்ட்ஸ் அணிவேன்.  விடுமுறையை முன்னிட்டு நான் தாய்லாந்தில் உள்ள phi phi பீச்சுக்குப் போகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு நான் புடவை கட்டிக்கொண்டு திரிய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

ஒரு மனிதர் ‘உங்களுக்குத் தெரியுமா நீங்கள் ஒரு தாய்... வெரி பேட் ஆஃப் யூ’ என்று எழுதியிருக்கிறார். ஆமாம்...   நான் ஒரு தாய்தான். 4 வயதாகும் எனது ஆண் குழந்தைக்குத் தாயாக இருப்பதில் பெருமை அடைகிறேன். என் மகனாவது குறுகிய மனப்பான்மை இல்லாதவனாக இருக்கட்டும்.     அட்லீஸ்ட் அவனாவது பெண்களை அவர்களது உடைகளைக் கொண்டு அல்லாமல், செயல்களைக் கொண்டு மதிக்கட்டும்.

ஒரு தனிப்பட்ட சுதந்திரமான மனுஷியாக இருந்தாலும், எந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு எந்த மாதிரியான உடை அணிய வேண்டும் என்ற உண்மையை அறிந்தவள் நான். என்னை அறிந்த எனது உறவினர்களும் நண்பர்களும் என் மேல் நல்ல மதிப்பீடு வைத்திருக்கிறார்கள். என்னை அறிந்த ஃபேஸ்புக் நண்பர்கள் பலரும் கூட என் மீது நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள். உங்களைப் போல என் உடையை எடை போடும் சிலரைத் தவிர.

இனி மேலாவது உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுக்க நேரம் செலவழியுங்கள். பெண்களின் உடையை எடை போடுவதில் வேண்டாம். என்றாவது ஒரு நாள் நீங்கள் இந்த நல்லறிவைப் பெற வேண்டும் என்று நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இந்த நாள் இனிய நாளாகட்டும்!’’ இப்படி கனிகா எழுதியிருந்த பதில் பல பெண்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது.            

பெண்களை உடைகளைக் கொண்டு அல்லாமல், செயல்களைக் கொண்டு எப்போது மதிக்கப் போகிறீர்கள்?