என் அம்மா



தேங்க்ஸ்ம்மா...

நடிகை அபிநயா

அம்மாவுக்கும் மகளுக்கும் இடையில் அப்படியோர் ‘கெமிஸ்ட்ரி’ சாத்தியமா என வியப்பாகத்தான் இருக்கிறது. முத்தமிடுவதும், கட்டி அணைப்பதுமாக அம்மாவைப் பிரிய அடம் பிடிக்கிற மழலையாக இருக்கிறார் ‘நாடோடிகள்’ புகழ் அபிநயா. கேட்கும் திறனற்ற அபிநயா, திரை உலகுக்குக் கிடைத்திருக்கிற மாற்றுத்திறனாளி அல்ல... மகத்தான திறமைசாலி. அமிதாப் - தனுஷ் நடிக்கிற ‘ஷமிதாப்’ (இந்தி), ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு செல்கிற ‘லிட்டில் ஃபிங்கர்’ (ஆங்கிலம்), ‘தி ரிப்போர்ட்டர்’ (மலையாளம்), ‘சந்துருடு’ (தெலுங்கு) என அத்தனை மொழிகளிலும் அபிநயா பிஸி.

‘விழித்திரு’ படத்தில் ‘ரேடியோ ஜாக்கி’யாக நடிக்கிற அபிநயா, அம்மாவுடன் சென்னை வந்திருந்தார். லைட்... கேமரா... ஆக்ஷன் பரபரப்புகளுக்கு இடையிலும் நொடிக்கொரு முறை அம்மாவைத் தேடுகின்றன அவரது கண்கள். அம்மாவைப் பற்றிப் பேசச் சொன்னால் அபிநயாவுக்கு ‘ஐயையையோ... ஆனந்தமே!’அபிநயாவுக்குப் பேச வராது என யார் சொன்னது? ஆங்கிலத்தில் அசைகிற அவரது உதடுகள் ஆயிரம் கதைகள் பேசுகின்றன.

‘‘என்னோட நிஜம், நிழல் எல்லாமே அம்மா தான்.  எனக்கு என்ன பிரச்னைனு புரியாத வயசு அது. ஏதோ தப்புனு மட்டும் தெரியும். என்னாச்சு, எனக்கு மட்டும் ஏன் இப்படினு அம்மாவைக் கேட்டுக்கிட்டே இருப்பேன். பொறுமையா பதில் சொல்வாங்க. எல்லா மீடியாவுலயும் என்னை ஊமைனு எழுதறாங்க. நான் ஊமை இல்லை. என்னால பேச முடியும். என்னைப் புரிஞ்சுக்கிறவங்களுக்கு என் பேச்சும் புரியும். அம்மா - அப்பா நினைச்சிருந்தா நான் இப்ப வரைக்கும் ஊமையாவேதான் இருந்திருப்பேன். ஆனா, அவங்க எனக்கு சைகை பாஷை கத்துக் கொடுக்கலை.

ஸ்பெஷல் ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போய், அம்மா என்னை அவங்க மடியிலயே உட்கார வச்சுப் படிக்க வைப்பாங்க. வீட்டுக்கு வந்ததும் ஸ்கூல்ல கத்துக் கொடுத்ததை மறுபடி எனக்கு சொல்லித் தருவாங்க. பல பெற்றோரும் பிள்ளைங்களுக்கு காது கேட்கலை, பேச முடியலைன்னா சைகை பாஷையை கத்துக் கொடுக்கறதோட விட்டுடறாங்க. கொஞ்சம் மெனக்கெட்டா அந்தக் குழந்தைங்களுக்கு ஏதாவது ஒரு மொழியைக் கத்துக் கொடுக்கலாம், பேச வைக்கலாம்னு பலருக்கும் தெரியறதில்லை. தேங்க்ஸ்ம்மா...’’ - நன்றியுடன் அம்மாவை அணைக்கிறார் அபிநயா.

‘‘அம்மாவுக்கும் எனக்குமான பாசம் என்னோட 12 வயசுக்குப் பிறகுதான் அதிகமாச்சுனு சொல்லலாம். அப்பதான் எனக்கு காக்ளியர் இம்பிளான்ட்டேஷன் சர்ஜரி பண்றதா முடிவாச்சு. அந்த ஆபரேஷனை பண்ணினா, வெறும் ஆடியோ மட்டுமில்லாம பேச்சும் புரியும்னு கேள்விப்பட்டிருக்காங்க அம்மா, அப்பா. ரொம்ப ரிஸ்க்கியான ஆபரேஷன். பண்ணலாமா, வேணாமானு அம்மாவுக்குள்ள ஆயிரம் கேள்விகள்... எனக்கு ஆபரேஷன் பண்ணின டாக்டர் மோகன் காமேஸ்வரன்கிட்டயே, ‘உங்களுக்கு இப்படியொரு பொண்ணு இருந்தா, இந்த ஆபரேஷனை பண்ணுவீங்களா’னு கேட்டாங்க. ‘நிச்சயமா பண்ணுவேன்’னு அவர் சொன்ன பிறகுதான் அம்மா கன்வின்ஸ் ஆனாங்க.

இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா, மாட்டேனானு அவங்க தவிச்ச தவிப்பு இன்னும் என் கண் முன்னாடியே இருக்கு. ஆபரேஷனுக்காக ஹைதராபாத்லேருந்து சென்னை வந்தோம். ஆபரேஷன் முடிஞ்சு, 3 மாசம் ஹாஸ்பிட்டல் பக்கத்துலயே ஒரு ரூம் எடுத்துத் தங்கச் சொன்னார் டாக்டர். அந்த 3 மாசமும் சின்னதா ஒரு இன்ஃபெக்ஷன்கூட என்னைத் தாக்கிடாமப் பார்த்துக்கணும். சாப்பாடு, தூக்கமில்லாம அம்மா என் பக்கத்துலயே இருந்து கவனிச்சுக்கிட்டதைப் பார்த்தப்பதான் எனக்கு அம்மா மேல பாசமும் மரியாதையும் அதிகமாச்சு.  அந்த ஆபரேஷன் முடிஞ்சு 26 வாரம் கழிச்சு முதல் முதலா எனக்கு சவுண்டை அறிமுகப்படுத்துவாங்க. ஆபரேஷனை விடக் கொடுமையானது அது.

அத்தனை நாள் சத்தம்னாலே என்னனு தெரியாத எங்களைப் போன்ற ஆட்களுக்கு முதல் முறையா ஒரு சத்தத்தைக் கேட்கறது மரண வலியா இருக்கும். ‘கொஞ்சம் பொறுத்துக்கோம்மா... அப்பதான் லைஃப் முழுக்க உன்னால சவுண்டை என்ஜாய் பண்ண முடியும்’னு அப்பவும் எனக்கு வலி தெரியாம இருக்க ஆறுதல் சொன்னவங்க அம்மா தான். அதுக்கப்புறம் ஒரு வருஷம் எனக்கு ஆடியோவெர்பல் ட்ரெயினிங் கொடுத்தாங்க. என் பேர் அபிநயானு உணரவே எனக்கு 3 மாசமாச்சு.

அப்புறம் மெல்ல மெல்ல எனக்கு ஒவ்வொரு சவுண்டையும் பழக்கினாங்க. இன்னிக்கு எனக்கு டிராஃபிக் சவுண்ட், காலிங் பெல் சவுண்ட்னு எல்லாம் கேட்குதுனா காரணம் அம்மா... அவங்க எனக்காக பட்ட கஷ்டம்...’’ - மகளின் பேச்சை கண்ணீர் வழியக் கேட்கிறார் அம்மா. அதை தன் முத்தத்தால் துடைத்து பாசப் பகிர்வைத் தொடர்கிறார் அபி.

‘‘எனக்கு 3 வயசிருக்கும் போதே ஐஸ்வர்யா ராய் படத்தை எங்கே பார்த்தாலும் ‘அது நான்’னு சொல்வேனாம். எனக்கு ஐஸ்வர்யாவைப் பிடிக்குதுனு அம்மா எங்க வீட்ல எங்கப் பார்த்தாலும் என் பார்வை படற இடத்துல எல்லாம் ஐஸ்வர்யாவோட பெரிய பெரிய போஸ்டரை ஒட்டி வச்சிருந்தாங்க. அப்பதான் அவங்களுக்கு என்னை மாடலிங்ல கொண்டு வரணும்னு தோணியிருக்கு. எங்கப்பா ஆனந்த் வர்மா, ஏர் ஃபோர்ஸ்ல இருந்தவர். ‘பறவைகள் பலவிதம்’ உட்பட நிறைய படங்கள்ல நடிச்சிருக்கார். அப்பா ஷூட்டிங் போகும்போது என்னை யும் கூட்டிட்டுப் போவார். ஷாட் முடிஞ்சதும் கேமராவை பார்த்தபடி நின்னுக்கிட்டு நான் அதே மாதிரி நடிச்சுக் காட்டுவேன். எனக்காக அப்பா நிறைய பேர்கிட்ட சான்ஸ் கேட்பார். ‘நல்லா இருக்கிற பொண்ணுங்களுக்கே இந்தக் காலத்துல சினிமாவுல சான்ஸ் கிடைக்கிறது கஷ்டம்.

இதுல உன் பொண்ணுக்கு எப்படிப்பா வாய்ப்பு கிடைக்கும்’னு கேட்டு சிரிச்சாங்க பலரும். அப்படி போற போது என்னைப் பார்த்துட்டு, ஒரு படத்துல ஒரு பிரபல ஹீரோயினோட ஃப்ரெண்டா நடிக்க வாய்ப்பு வந்தது. ஹீரோயின் பக்கத்துல நான் நிக்கறதைப் பார்த்துட்டு, ஹீரோயினை விட அழகா, கலரா, பளிச்னு இருக்கே இந்தப் பொண்ணுனு என்னைப் பின்னாடி நிக்க வச்சாங்க. அது எனக்குப் பிடிக்கலை. ‘இனிமே நடிச்சா ஹீரோயினாதான் நடிப்பேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். அடுத்த 15 நாள்ல சமுத்திரக்கனி சார்கிட்டருந்து அழைப்பு. ஸ்லீபானு ஒரு விளம்பரப்பட இயக்குநர் மூலமா என் போட்டோஸ் பார்த்துட்டு, ‘நாடோடிகள்’ படத்துக்குக் கூப்பிட்டார் கனி சார்.

என்னைப் பார்த்ததுமே சாருக்கு பிடிச்சிருச்சு. காது கேட்காது, சரளமா பேச முடியாதுனு ஒதுக்கினவங்களுக்கு மத்தியில என்மேல நம்பிக்கை வச்சு முதல் வாய்ப்பையும் அது மூலமா எனக்கொரு வாழ்க்கையையும் கொடுத்தவர் அவர்தான். அப்போ அங்கே வந்திருந்த சசிகுமார் சாரும், தன்னோட அடுத்த படத்துக்கு என்னை ஹீரோயினா செலக்ட் பண்ணினார். ‘இவளுக்கெல்லாம் யார் சான்ஸ் கொடுப்பா‘னு கேட்டு சிரிச்சவங்க என்னைத் தேடி வந்து பாராட்டி, மன்னிப்பும் கேட்டாங்க. இன்னிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, இங்கிலீஷ்னு எல்லா லேங்வேஜ்லயும் படம் பண்ணிட்டிருக்கேன்... என்னோட இந்த சக்சஸ் எல்லாத்துக்கும் பின்னால நிக்கிறவங்க என் அம்மா...” என்றபடி மீண்டுமொரு முறை அவரை அணைத்துக் கொள்கிறார்.

நொடிக்கொரு முறை அம்மாவைக் கொஞ்சுகிற அபிநயா, அம்மாவுடன் சண்டையிடுகிற தருணங்களுக்கும் குறை வைப்பதில்லையாம். ‘‘நான் அநியாயத்துக்கு அம்மா செல்லம். அவங்களைப் பிரிஞ்சு ஒரு நிமிஷம்கூட இருக்க மாட்டேன். அம்மா என்கூடவே இருக்கணும்... என்கிட்ட மட்டுமே பேசணும்னு எதிர்பார்ப்பேன். அப்படி நடக்காதப்ப எனக்கு பயங்கரமா கோபம் வரும். ‘இனி உன்கிட்ட பேசவே மாட்டேன். எனக்கு கல்யாணமாகிப் போனாகூட உன்னைப் பார்க்க வர மாட்டேன்’னு சண்டை போடுவேன்.

ஆனா, அந்தக் கோபமெல்லாம் அஞ்சு நிமிஷம்கூட தாக்குப் பிடிக்காது. அம்மானு வந்து கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து, அவங்களை எனக்கு முத்தம் கொடுக்க வச்சு சரியாக்கிடுவேன். என்னால இன்னிக்கு இண்டிபெண்டென்ட்டா பல விஷயங்களைச் செய்ய முடியுதுன்னா அதுக்கும் அம்மாதான் காரணம். கார் ஓட்டறேன். கம்ப்யூட்டர்ல எனக்குத் தெரியாத விஷயங்களே இல்லை. தனியா ஷாப்பிங் போறேன். நிறைய படிக்கிறேன். நல்ல நல்ல படங்கள் பார்க்கறேன்... ‘எப்போதும் நான் உன் கூடவே இருக்க முடியாது. அப்படியே இருந்து பழகிட்டா, நான் இல்லைங்கிற ஒரு நிலைமைல உன்னால தனியா சமாளிக்க முடியாது. உன் கால்ல நிக்கற தைரியத்தை வளர்த்துக்கோ.

நாளைக்கு உனக்கும் கல்யாணமாகும். உனக்குனு கணவர், குழந்தைங்கனு ஒரு குடும்பம் உருவாகும். பொறுப்புகள் கூடும். அதுக்கெல்லாம் நீ தயாராகணும்’னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. மத்தவங்க எல்லாம், ‘உனக்கெதுக்கு இதெல்லாம்’னு கேட்டாலும், அம்மாதான் ஒவ்வொரு விஷயத்தையும் நான் முயற்சி பண்ண என்கரேஜ் பண்ணுவாங்க. அம்மாதான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்... ஐ லவ் யூமா...’’ என்கிற அபிநயாவின் உதட்டசைவில் உள்ளம் உருகுகிறார் அவரது அம்மா.

இது தனது முறை என்கிற மாதிரி பாசம் பொங்க மகளை இறுக்கி அணைத்து உம்மா கொடுக்கிறார் அம்மா. இந்த அம்மா, மகள் பாசத்தைக் காட்ட இன்னொரு ‘அபியும் நானும்’ படமே எடுக்கலாம்!

அழாத நாளே இல்லை

‘‘ரெண்டு ஆம்பிளைப் பசங்களுக்கு அப்புறம் பிறந்தவ அபிநயா.  அவ என் வயித்துல இருந்தப்பவே என் கனவுல கடவுள் வந்து ‘பெண் குழந்தைதான் பிறக்கும்’னு சொன்னார். அப்படியே அபி பிறந்தாள். அவ பிறந்ததுலேருந்தே பிரச்னை களை சந்திச்சவ. குழந்தையா இருந்தப்ப யூரின் போனா, அந்த இடம் ப்ளீச் ஆயிடும். அது அப்படியே தொடர்ந்தா, அவ ரொம்ப குட்டையாதான் இருப்பா, உயரமே இருக்காதுன்னாங்க. டாக்டரை பார்த்து அதை ஒருவழியா சரிபண்ணினோம். அப்புறம் 3 வயசு வரைக்கும் அவ தவழலை... நடக்கலை... காலால தேய்ச்சுக்கிட்டேதான் இன்னொரு இடத்துக்கு நகர்ந்து போவா. ஏற்கனவே கேட்கற திறமை இல்லை. பேச்சும் சரியா வரலை. இதுல இது வேறயானு நான் அழாத நாளே இல்லை.

அப்பதான் தெரிஞ்சவங்க மூலமா ஒரு வயசான ஐயரை பத்திக் கேள்விப்பட்டோம். அவர் அதிகாலையில எங்க வீட்டுக்கு வந்து பூஜை பண்ணிட்டு, ‘உன் பொண்ணை தாய் மூகாம்பிகைக்குக் கொடுத்துட்டு, திரும்ப தத்து எடுத்துக்கோ. எல்லாம் சரியாகும்’னு சொன்னார். அவர் சொன்னமாதிரியே, மூகாம்பிகை தாய்கிட்ட ‘என் பொண்ணை உன்கிட்ட ஒப்படைச்சிட்டேன். நீதான் அவளைப் பார்த்துக்கணும்’னு வேண்டிக்கிட்டேன். அந்தப் பெரியவரோட வாக்கு பலிச்சது. அபி எழுந்து நடக்க ஆரம்பிச்சா. புனர்ஜென்மம் எடுத்து வந்த மாதிரி இருந்தது.

‘நாடோடிகள்’ பட ரிலீஸ் அன்னிக்கு முதல் நாள் முதல் ஷோவுலயே படம் சூப்பர்னு தகவல் வந்தது. என்னையும் அவங்கப்பாவையும் நிக்க வச்சு, கால்ல விழுந்து நன்றி சொல்லி அழுதா. அந்தப் படத்துக்காக 14 அவார்ட் வாங்கினா. நாங்க அழுததுக்கெல்லாம் சேர்த்து இப்ப சந்தோஷங்களைக் கொடுத்திட்டிருக்கா. சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள்ல நடிகைகளோட பேட்டிகளைப் பார்க்கிறப்ப, ‘என் பொண்ணாலயும் பேச முடிஞ்சிருந்தா நல்லாருந்திருக்குமே’னு மனசுக்குள்ள அழுவேன். அவ இப்ப ஒரு இங்கிலீஷ் படம் பண்ணிட்டிருக்கா.

‘அவ நிச்சயம் ஒரு ஆஸ்கார் அவார்ட் வாங்குவா’னு அவங்கப்பா சொல்லிட்டே இருக்காரு. அப்படி நடந்தா சந்தோஷம். மத்தபடி அபிக்கு இதைக் கொடு, அதைச் செய்னு நான் கடவுள்கிட்ட கேட்கறதே இல்லை. அவ கடவுளோட குழந்தை. அவளுக்கு என்ன கொடுக்கணும் அவளை எப்படி வழிநடத்தணும்னு கடவுளுக்குத் தெரியும். நிச்சயம் அவர் அபியை கைதூக்கி பெரிய உயரத்  துல வைப்பார்னு நம்பறேன்...’’

என்னால இன்னிக்கு இண்டிபெண்டென்ட்டா பல விஷயங்களைச் செய்ய முடியுதுன்னா அதுக்கும் அம்மாதான் காரணம். கார் ஓட்டறேன். கம்ப்யூட்டர்ல எனக்குத் தெரியாத விஷயங்களே இல்லை. தனியா ஷாப்பிங் போறேன். நிறைய படிக்கிறேன். நல்ல நல்ல படங்கள் பார்க்கறேன்...

எனக்கு 3 வயசிருக்கும் போதே ஐஸ்வர்யா ராய் படத்தை எங்கே பார்த்தாலும் ‘அது நான்’னு சொல்வேனாம். எனக்கு ஐஸ்வர்யாவைப் பிடிக்குதுனு அம்மா எங்க வீட்ல எங்கப் பார்த்தாலும் என் பார்வை படற இடத்துல எல்லாம் ஐஸ்வர்யாவோட பெரிய பெரிய போஸ்டரை ஒட்டி வச்சிருந்தாங்க...

- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்