சமர் Updates



நேற்று...நைட் கிச்சனில் அரிசிமாவை தேடிட்டு இருக்கும் போது சேர்ல இருந்து விழுந்திட்டேன். சத்தம் கேட்டு அப்பாவும் பையனும் ஓடி வந்தாங்க. ‘எத்தனை தடவை சொல்லியிருக்கேன் இந்த சேரை கிச்சனுக்கு எடுத்திட்டு வராதேனு’னு திட்டினாங்க (என் புள்ளதான் ‘அம்மா ஆர் யூ ஓகே... ரொம்ப வலிக்குதா’னு கேட்டான்).

ஏற்கனவே கையில டிஸ் வாசிங் லிக்யூடோ, மாய்ஸ்ட்ரைசிங் லோஷனோ அலர்ஜி ஆகி ஸ்கின் உரிந்து இருந்துச்சு. அதனால சமர் அவன் அப்பாக்கிட்ட, ‘இன்றைக்கு அம்மாக்கு ரெஸ்ட் கொடுத்திட்டு நாம சப்பாத்தி போடலாம்’னு முடிவு பண்ணி. டைனிங் டேபிள் முழுவதும் கோதுமை மாவை போட்டு வச்சிருந்தாங்க. ‘என்னமோ பண்ணுங்க ஆனா, டேபிளை கிளீன் செஞ்சிடுங்க’னு சொல்லிட்டுப் போய்ட்டேன்.

கொஞ்ச நேரத்தில் சமர் வந்து, ‘இனிமேல் நீங்க சப்பாத்தி போடாதீங்கம்மா... அப்பாவே போடட்டும் ப்ளீஸ்’ என்றான்.  (அய்யய்யோ நெசமாவே இந்த மனுசன் நல்லா சப்பாத்தி போட்டு பேரு வாங்கிட்டாரோனு நினைச்சிக்கிட்டே...) ‘ஏன் சமர் அப்படிச் சொல்ற?’

’நீங்க சப்பாத்தி போட்டா வெறும் ரவுண்ட் ஷேப்தான் போடுவீங்க. இங்க பாருங்க அப்பாவை... ஆப்ரிக்கா மாதிரி, ஸ்ரீலங்கா மாதிரி, சிங்கம் முகம் மாதிரி ஏதோ ஒரு ஷேப், ஒட்டகம் மாதிரி, இந்தியா மாதிரி, சுமத்ரா தீவு மாதிரி, தமிழ்நாடுனு விதவிதமான ஷேப்ல போடுறாங்க. அதனாலதான் சொன்னேன்... இனிமேல் அப்பாவே சப்பாத்தி போடட்டும்னு. பார்க்கவே செம funnyஆ, காமெடியா இருக்கும்மா...’

செல்லம் சமர் ஸ்கூலில் நிறைய ஃப்ரீ டைம் இருக்குனு, ஏதேனும் ஒரு படம் என்னைச் சார்ந்து வரைந்து கொண்டு தருவான். ‘ஏன் தினமும் அம்மாவை வரைந்து கொண்டு வர செல்லம்’னு கேட்டேன். ’ஏன்னா, நான் உங்களைதான்மா நிறைய மிஸ் பண்றேன். நீங்க தனியா வீட்டில இருக்கீங்க... சாப்பிட்டீங்களா, என்ன பண்ணுவீங்கனு எனக்கு ஒரே உங்க நியாபகமா இருக்கும். ஐ லவ் யூ அம்மா, மிஸ் யூ டூ... அதான் உங்களை நினைச்சு வரைவேன்’னு சொல்லிட்டு சிரிக்கிறான்.என் வாழ்வின் ஒவ்வொரு நொடிக்குமான அர்த்தம் உன்னாலே கிடைக்கிறது செல்லம்... லவ் யூ டூ பேபி.


சமர் சேந்தன்: பெயர் காரணம்

‘தமிழ் பெயர்தான் வைக்க வேண்டும் நம் குழந்தைக்கு’ என்று தீர்மானமாக சமர் அப்பா சொல்லிட்டாங்க. ‘சிந்தனா’ன்னு பெயர் முடிவு செய்து இருந்தோம். 8வது மாதம் நடக்கும் போதுதான், ‘பையன் பிறந்தால்?’ என்ற கேள்வி வந்ததும், சமர் அப்பா சொன்ன பெயர் ‘சமரன்’. அதில் இருந்து ‘சமர்’ என்று முடிவு செய்தோம்.

பின்னால் இன்னொரு பெயரும் சேர்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை. சின்ன வயசில் இருந்தே திருச்செந்தூர் முருகன் என்றால் கூடுதல் பிரியம். முருகன் பெயர் ஏதேனும் வைக்கலாம் என்று தேடினேன். ‘பொன்னியின் செல்வ’னில் பிடித்த பல கேரக்டரில் சேந்தன் அமுதன் கேரக்டரும் ஒன்று. யதேச்சையாகசேந்தன் என்றால் முருகனின் பெயர் என்று தெரிந்தது. அதை சொன்னதும் சமர் அப்பாவுக்கு ஓ.கே.

இப்போ எதுக்கு இந்த கதைன்னு கேட்குறீங்களா? சமர் அப்பாவின் ஆபீஸ் நண்பரை பார்க் செல்லும்போது பார்த்தோம். நாங்கள் தமிழில் பெயர் வைத்ததை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி, அவர் அவரின் பெண் குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்டியிருப்பதாகச் சொன்னாங்க. கேட்க ரொம்ப சந்தோஷமாகஇருந்துச்சு.