லக்ஷ்மி



இயக்குநர் சர்ஜுன் கே.எம். இயக்கத்தில் லட்சுமி பிரியா, சந்திர மௌலி, நந்தன், லியோ நடித்திருக்கும் குறும்படம் தான் ‘லக்ஷ்மி’. இக்குறும்படத்தை ‘பிக் பிரின்ட் பிச்சர்ஸ்’ சார்பில் தயாரித்து இருக்கிறார் ஐ.பி.கார்த்திகேயன். அன்றாடம் நாம் கடந்து செல்லும் அல்லது நம்மை அப்படியே பிரதிபலிக்கும் பெண் தான் இந்த லக்ஷ்மி.

‘இதுக்குதான் சீக்கிரம் எழுந்திருக்கணும்’... இப்படிக் கணவனின் திட்டுதலில் ஆரம்பிக்கிறது லக்ஷ்மியின் அன்றைய நாள். மிடில் க்ளாஸ் வாழ்க்கை, நேரம் பார்க்காமல் செய்யும் வீட்டுவேலை, மேலும் அச்சு ஆபீஸில் வேலை, குழந்தை, கணவனுக்காக வாழும் ஓர் இயந்திர வாழ்க்கை.

தன் தேவை பூர்த்தியானவுடன் உறங்கச் செல்லும் கணவன், அவளிடம் அன்பாக பேசக் கூட தயாராக இல்லை. அக்கறையில்லை. இதைக்காட்டிலும் சிறிது நேரமே கிடைக்கும் அந்த  சந்தோஷமும் குழந்தை எழுந்து விடுவானோ என்ற பயத்திலேயே கழிகிறது. இப்படிச் செல்லும் லக்ஷ்மியின் வாழ்வில் இன்னொரு ஆண் சந்திப்பு தினமும் செல்லும் மின்சார ரயில் பயணத்தில் நிகழ்கிறது. அவனுடைய அன்பான பேச்சு, அக்கறை, அவளை அவன் வர்ணிக்கும் விதம் என சஞ்சலம் அடைகிறாள். அடுத்த நாள் கணவன் “நீ கிளம்பலை?” என்றவுடன், “கொஞ்ச நாளைக்கு பேருந்தில் செல்லலாம் என்றிருக்கேன்” என அவள் வேலைக்குச் செல்வதாக படம் முடிகிறது.

லக்ஷ்மி பாத்திரத்திற்கு நடிகை லட்சுமி பிரியா அத்தனை பொருத்தம். அன்புக்காக ஏங்குவதும், திடீரென கிடைத்த அன்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதும், இயந்திர வாழ்வின் சங்கடத்தை உடல் மொழியிலேயே காண்பிப்பதுமாக லக்ஷ்மி என்னும் பாத்திரமாகவே சில மணிநேரங்கள் வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். இந்தப் படத்தின் கருவையும், லக்ஷ்மியையும் எப்படிப் பார்க்கிறீர்கள். இந்தக் கேள்வியை லட்சுமி பிரியாவிடமே வைத்தோம்?

“நான் ஒரு முழுமையான தமிழ் நாடகத்துக்காக தயார் ஆகிட்டு இருந்தப்போதான் இயக்குநர் சர்ஜுன் என்னை சந்திச்சார். எனக்கு அந்தக் கதையில கொஞ்சம் நெருக்கமான காட்சிகள் இருக்குன்னு தெரிஞ்சப்ப முதல்ல கொஞ்சம் தயங்கினேன். ஆனால் எனக்கு இந்தக் கதை மேல அவ்வளவு நம்பிக்கை. நானும் நிறைய குறும்படங்கள் நடிக்க மாட்டேன். ரொம்ப தனித்தன்மைகளோட இருக்கும் படத்துக்கு மட்டும்தான் ஓகே சொல்வேன்.

இந்தப் படத்துக்கு கதை சொன்ன உடனே லட்சுமி இப்படித்தான் இருப்பான்னு நினைச்சு நானே என்னை லட்சுமியா மாத்திக்கிட்டேன். சர்ஜுனுக்கும் அதுதான் தேவையா இருந்தது.  ஒரு சிலர் ஏன் இதைத் தவறென காண்பித்தீர்கள் என கேட்டனர். என்னைப் பொறுத்தவரை இந்த உலகில் யார் செய்வதும் சரி தவறு என பிரிக்கவே முடியாது. அவரவருக்கு அவர்களுடைய நியாயம்தான் முக்கியம். 

இந்தப் பொண்ணு செய்தது தவறு, சரி இப்படியான தீர்ப்பே கொடுக்கலை. அவ கொஞ்ச நாளைக்கு பஸ்ல போகப் போறேன்னு சொல்லியிருக்கா. நாளைக்கு திரும்ப அவ ரயில்ல ஏறலாம், மீண்டும் சந்திக்கலாம், இல்லை கணவன் தான் பக்கம் இருக்க சில சின்னச் சின்ன தவறுகளை திருத்திக்கலாம். எதுவேணும்னாலும் நடக்கலாம். லக்ஷ்மி இப்போதைய மிடில் க்ளாஸ் பெண்களுடைய வாழ்க்கையை  அப்படியே பிரதிபலிக்கிறா.

அதுதான் நோக்கம்!” இதே கேள்வியை இயக்குநர் சர்ஜுனிடம் வைத்தோம். ”நான் இன்ஜினியர், மணிரத்னம் சார், ஏ.ஆர்.முருகதாஸ் சார் கிட்ட அஸிஸ்டென்டா வேலை செய்திருக்கேன். நிறைய குறும்படம் கான்செப்ட் தோணும். ஆனால் கொஞ்சம் தனித் தன்மையோடு ஒரு படம் பண்ண ஆசை.

அப்படித்தான் இந்த படம் உருவானது. ஒரு ஆங்கில நாவல்ல வர்ற ஒரு சின்ன காட்சி தான் இந்த குறும்படத்துக்குக் காரணம். அங்க பனிப் பொழிவு. இங்க மழைன்னு மேட்ச் செய்தேன். அதே மாதிரி நம்ம ஊருக்கான மாற்றங்கள். கதையப் பொறுத்தவரைக்கும் ஒரிஜினல் நாவலே அவ திரும்ப கணவன், குழந்தைன்னு வாழ்றதா முடிச்சிருப்பாங்க. அங்கேயே அப்படின்னா அப்போ நம்ம இந்திய கலாச்சாரம்.

எனக்குத் தெரிஞ்சு ஆணோ பெண்ணோ தப்பு சரி எல்லாமே அவங்க தனிப்பட்ட விஷயம். நான் யாருக்கும் கருத்து சொல்ல இந்தப் படம் எடுக்கலை. சமூகத்துல பாதிக்கப்பட்டுக்கிட்டு இருக்கும் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்க நினைச்சேன், செய்தேன்.  கருத்து சொல்ற ஐடியாவெல்லாம் இல்லை. பார்வையாளர்களின் மனதைப் பொருத்தது!” என முடித்தார் சர்ஜுன்.

இன்று ‘லக்ஷ்மி’ பல கேள்விகள், சந்தேகங்களைக் கடந்து பல சர்வதேச குறும்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறாள். எத்தனை தடைகளை கடந்து பெண்கள் சாதனைகள் படைத்தாலும் ‘வீட்டைப் பார்த்தியா எவ்வளவு குப்பையா வெச்சிருக்க, ஏன் இன்னைக்கு இவ்வளவு லேட், உனக்கு என்ன அவன் கூட பேச்சு, நீ இளிச்சிருப்ப. அதான் உன் பின்னாடியே வந்துட்டான், சத்தமா சிரிக்கக் கூடாதுன்னு எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன்’ என்னும் இப்படியான தடைப் பேச்சுகள் மட்டும் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இப்படத்தோடு நாம் உடன்படலாம். மாறுபடலாம். ஆனால் இப்படியான யதார்த்தத்தை பதிவு செய்திருக்கும் வகையில் ‘லஷ்மி’ முக்கியமான படம்தான்.

- ஷாலினி நியூட்டன்