பெண் புதிரானவளா?



- வரலட்சுமி மோகன்

‘‘ ‘எத்தனையோ மலர்ந்து அழகா பூத்து, மணம் வீசி யாரோட பார்வையிலும் படாமல் யாராலும் கவனிக்கப்படாமல் உதிர்ந்து போன மலர்கள் பல ஆயிரம் இருக்கு’னு ஆங்கிலக் கவிஞர் தாமஸ் க்ரே சொல்லியிருக்கார். அதுபோல தமிழ்நாட்டுல பொறந்து ஒரு சாதாரண பெண்ணாக இருந்திருக்க வேண்டிய என்னை தோழியில கட்டுரை எழுதக்கூடிய அளவு கொண்டு வந்த என் குடும்பத்திற்கு முதலில் நான் நன்றி சொல்லணும்னு விரும்புறேன்’’ என நெகிழும் வரலட்சுமி மோகன் யாரென சொன்னால் இன்னும் ஆச்சரியமாவீர்கள்.

நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் மோகன் ராஜாவின் அம்மா இவர். தென்னாற்காடு பக்கம் உள்ள சிதம்பரத்தில்தான் பிறந்து, வளர்ந்தவர். காரைக்குடி பக்கம் மனோரமா பிறந்த பள்ளத்தூரில் உள்ள கல்லூரியில் பி.ஏ. படித்தார். திருமணத்திற்கு பின்னர் எம்.ஏ. (தமிழ் இலக்கியம்) மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திலும், எம்.ஏ. (ஆங்கிலம்) திருப்பதி வெங்கடேஸ்வரா யுனிவர்சிட்டியிலும் பயின்றிருக்கிறார்.   ‘நான் ஹாலில் எம்.ஏ. எக்ஸாம் எழுதும் போது, வெளியே கைக்குழந்தையோடு என் கணவர் எனக்காக காத்துக்கொண்டிருப்பார். அப்படி படிச்சிருக்கேன்’ என புன்னகைக்கிறார் வரலட்சுமி மோகன்.

- மை.பாரதிராஜா

பெண் புதிர்தான் - புரிந்து கொள்ளப்படாதவரை. இயற்கை உபாதைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானதே. இன்றும் கழிப்பறை இல்லாத கிராமங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் திரைப்படம் பார்க்க அனுமதிக்கப்படாத கிராமங்கள் இன்றும் உள்ளன. தனது சுயத்தை வெளிப்படுத்த முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே முரண்பாடு தோன்றுகிறது.

இந்த முரண்பாடு பதின்பருவத்தில் மிகுதியாக வெளிப்படுகிறது. தான் விரும்பும் உடை, உணவு, படிப்பு போன்றவை மாறுபடும்போது விரக்தி நிலை ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படுகிறது. இந்த விரக்தி மறைய வேண்டும் என்றால் ஆக்கபூர்வமாக அவர்களது சிந்தனையைத் திருப்ப, தோளில் சாய்த்து அரவணைக்க, ஆதரவான அன்பான மனிதர்கள் தேவை.

நாமும் இந்த நிலையைக் கடந்து வந்தவர்கள்தாமே என்று பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடல் மாற்றத்தை, உள்ள உணர்வை, மாற்றுப்பாலின் கவர்ச்சியை அவர்களுக்கு விளக்கி அவர்களை நல்வழிப்படுத்த பெற்றோராலும் உற்றோராலும் மட்டுமே முடியும். பால பாடத்திலேயே அப்பா அலுவலகம் செல்கிறார், அம்மா சமைக்கிறாள் என்றுதான் கற்பிக்கின்றோம்.

தனக்கு ஒரு தம்பியோ, தங்கையோ பிறந்தால் முதலில் பிறந்த இவள் பலிகடா ஆக்கப்படுவாள். குடிகாரத் தந்தையிடம் இருந்து அம்மாக்களை மீட்டெடுப்பதும் இந்த அக்காக்கள்தான். பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீடு சென்றால் அங்கு கணவர் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும். ஆண் தனது தாய், தந்தையைக் காப்பது போல் பெண்ணிற்கும் தனது பெற்றோரைக் காக்க வேண்டும் என்ற உணர்வு இருக்குமல்லவா? திருமண வாழ்க்கைதான் குடும்ப வாழ்க்கையின் ஆரம்பம்.

ஆண் அவர்களுக்கு ஆதரவாய் இருந்தாலாவது பரவாயில்லை. பரஸ்பர ஆண், பெண் புரிதல் இல்லாமையே இன்று பெருகி வரும் முதியோர் இல்லங்களுக்கு மூலக்காரணம். ஆண் ஆதிக்கத்தையும், பெண் சுதந்திரத்தையும் துஷ்பிரயோகம் செய்யாமல் இருந்தால் ஆண், பெண் இடைவெளி குறைந்து அன்பு பெருகும். இன்று சிறுமியருக்கும் வன்கொடுமை நிகழ்கிறது. தொழில்நுட்பச் சமுதாயம் உருவாகி விட்டது.

இன்று அன்புப் பரிமாறல்களுக்கு மாற்றாக தகவல் தொடர்புகளாகவே வாழ்க்கை மாறி விட்டது. குடும்ப அமைப்புகள் மாறி வரும் இந்நாட்களில் ஆணும் பெண்ணும் தவறு செய்யாதிருக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை, தான் செய்த தவறு வெளி உலகிற்குத் தெரிந்து விடுமோ என்றுதான் பயப்படுகிறார்கள். இதனாலேயே கொலைகளும் தற்கொலைகளும், வன்புணர்வுகளும் தலைவிரித்தாடுகின்றன.

பெண் ஆணின் ஆதிக்கத்தைத்தான் எதிர்க்கிறாள். ஆளுமையை அல்ல. ‘‘Frailty thy name is woman’’ இந்த வாக்கியம் ஷேக்ஸ்பியரின் உலகப்புகழ் பெற்ற Hamlet என்னும் நாடகத்தில் இடம் பெறுகிறது. வீக்கர் செக்ஸ் என்று பெண்ணினத்தைக் கூறுவது உடல் பலத்திற்கு மட்டுமே. உள்ளத்தின் வலிமையை எடுத்துக் கொண்டால் பெண் மனதின் ஆழத்தை ஆண்களால் அறியவே முடியாது.

பெண் மென்மையானவள், பொறுமையானவள், அன்பிற்கு மட்டுமே அடிமையானவள் என்று எண்ணி அவளை சீண்டிப் பார்த்தால் அந்த அன்பே அழிவிற்கும் வழிவகுக்கும். தன்னை வஞ்சிக்க நினைத்த கணவனை வெஞ்சினம் தீர்க்கும் குண்டலகேசிகள் காப்பியத்தில் மட்டுமல்ல, இன்றைய காலத்திலும் இருக்கிறார்கள்.

காதலிக்கும்போது காணப்படாத பல குறைகள் திருமணத்திற்குப் பின் தென்படுகின்றன. புரிதலும், விட்டுக்கொடுத்தலும், சகிப்புத்தன்மையும் இல்லாமையே விவாகரத்து வரை இவர்களை இட்டுச் செல்கிறது. எனது தந்தைக்கு நாங்கள் இரண்டு பெண் குழந்தைகள். ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அவருக்கு என்றுமே இருந்ததில்லை. எங்களை சுதந்திரமாக வளர்த்தார். எந்த செயலை செய்வதாக இருந்தாலும் எங்களிடம் கலந்தாலோசித்த பின்பே செய்வார். தாயில்லா பிள்ளைகளாய் வளர்ந்த நாங்கள் அவருடைய வளர்ப்பில் தாய்ப்பாசத்தை பூரணமாய் உணர்ந்தோம்.

படிக்கும் காலத்தில் உடன் படிக்கும் மாணவர்களுடன் விளையாடினாலும், சிரித்துப் பேசினாலும் கேலி பேசும் வம்புப் பெண்கள். அன்பால் இணைந்து விளையாடிய ஆண்களையும், பெண்களையும் படிப்பால்கூட இணைக்க முடியவில்லை. நண்பர்கள் சேர்ந்து புதியன பழக வேண்டும் என்ற ஆர்வத்தில் சைக்கிள் ஓட்டத் துவங்கினோம். பயந்து கொண்டேதான் அதையும் தலைமை ஆசிரியரிடம் போட்டு கொடுத்து விட்டனர். விழுந்தது பிரம்படி மட்டுமல்ல, சைக்கிள் ஓட்டத்திற்கும் மரண அடி.

ெபற்ற தாய், தான் பெற்ற மகள் மற்றும் சகோதரியே ஆனாலும் ஓர் ஆண் அவர்களுடன் தனித்திருக்கலாகாது, ஏனெனில் புலன்களைக் கட்டுப்படுத்துவது அரிதானது என்கிறது பண்டைக்கால நீதி நூல்.  பிற்கால புதுமைப்பித்தனோ உணர்ச்சி தேவனையும் மிருகமாக்கி விடுகிறது. மனத்தூய்மைதான் கற்பு. சந்தர்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்? என்று அக்கினிக் கணை தொடுக்கிறார். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்துதான் சோரம் போகிறார்கள். விபச்சாரி என்ற பட்டம் பெண்ணுக்கு மட்டுமே.

விபச்சாரிக்கும் விதவைக்கும் மலடிக்கும் ஆண் பால் இல்லையா? அக்கினிப் பிரவேசம் பெண்களுக்கு மட்டும்தானா? ‘‘கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’’ என்று பாரதி ஆண் கற்பை வலியுறுத்தியது ஒரு பெண் கூட அல்ல, ஆண்தான். உடன்கட்டை ஏறும் கொடிய கலாச்சாரத்தை ஒழித்ததும் ஓர் ஆண்தான்.விதவைக்குப் பதில் கைம்பெண் என்று எழுதினால் இரண்டு பொட்டுகள் வைக்க முடியும் என்றார் கலைஞர் கருணாநிதி.

அரசாங்கமே தாயின் பெயரை முதல் எழுத்தாகப் போட்டுக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தாலும், எத்தனை பேர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இருப்போம்? திரைப்படங்கள் ஆண்-பெண் உறவுகளைத் தவறாக சித்தரிப்பது போல் ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல எல்லாத் துறைகளிலும் நன்மையும் தீமையும் விரவியே உள்ளது.
 
தான் அழிக்க நினைத்த சிசு தனக்கு உதவுதல் - ‘கருத்தம்மா’. பெண்ணுக்கு ஊக்கம் கொடுத்த - ‘புதுமைப்பெண்’. சாதி மதத்திற்கு சாவு மணி அடித்த - ‘இது நம்ம ஆளு’, ‘அலைகள் ஓய்வதில்லை’. நான்கு ஆண்களுடன் ஒரே வீட்டில் ஒரு பெண் தோழமையுடன் வாழ முடியும் என்பதற்கு - ‘புது வசந்தம்’ போன்ற நல்முத்துக்களை திரைக்கடலில் கண்டெடுக்கலாம்.

நான் சாதி மதம் விட்டுத் திருமணம் செய்து கொள்ள விரும்பியபோது எதிர்ப்பு தெரிவிக்காமல் நிபந்தனையற்ற அன்பால் சம்மதம் அளித்தார் (எழுபதுகளிலேயே) என் தந்தை.  இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்த எனக்கு இன்பமே குடும்பச் சூழலாய் அமைந்தது. தந்தையைப் பிரிந்து வந்திருக்கிறோம் என்ற துன்பச் சுவடே தெரியாமல் என்னை ஒரு தோழியாக - தாயாக அரவணைத்துக் கொண்டார் என் கணவர்.
 
எங்களுக்கிடையே நிலவும் புரிதலால், அன்பால், அன்னியோன்யத்தால் ‘‘பெண், ஆண் என்ற இரண்டுருளையால் நடக்கும் இன்ப வாழ்க்கை’’
வாழ்கிறோம். இன்னும் சாதியால், மதத்தால், பொருளால், பதவியால், தொழிலால், அந்தஸ்தால் காதல்கள் தகர்க்கப்படுகின்றன. திருமணத்தில் இணைந்த காதலும் ஈகோவால் நிலைத்து நிற்பதில்லை. புரிதலோடு கூடிய காதலே பெண்ணுக்குத் தேவை. அது கிடைக்கும்பட்சத்தில் பெண் எவருக்கும் புரியாத புதிராகத் தெரியமாட்டாள்.