நீராலானது இவ்வுலகு



குற்றவாளியாக்கப்படும் மழை

வடகிழக்கு பருவமழை துவங்கிய சில நாட்களிலேயே மழையை குற்றம் சொல்ல துவங்கி விட்டது நகர வாழ்வோடு ஒன்றி போன நமது நடுத்தர மனது. அப்படி என்ன குற்றம் செய்துவிட்டது மழை? அழையா விருந்தாளியாக நமது வீட்டிற்குள் நுழைகிறது! சில நேரங்களில் நம்முடைய சிறியளவிலான சேமிப்புகளை அடித்துச் செல்கிறது!! இவை போதுமே மழையை குற்றவாளியாக்க. சாமானிய மக்கள் மழையை குற்றவாளியாக பார்ப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அரசும் மழையை குற்றவாளியாக அறிவிப்பதை நாம் எப்படி புரிந்து கொள்வது?

கடந்த 2015 வெள்ள பாதிப்பின்போதும் சரி, தற்போதைய மழை பாதிப்பின்போதும் சரி, அரசு கூறும் ஒரே விளக்கம் இது எதிர்பாராத மழை என்பதே.  இந்த வாதம் சரியானது தானா என்பதை பின்பு விவாதிப்போம். இந்திய வானிலை ஆய்வு மையம், மழை குறித்த தகவல்களை முன்பாகவே வெளியிட்டது. மழை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக கூறப்பட்டது.

மழையும் வந்தது. மீண்டும் சென்னை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. நவம்பர் 1ம் தேதி, மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர், தமிழக அரசு “பெங்களூரையும், லண்டனையும், அமெரிக்காவையும் விட நல்ல வகையில்தான் சமாளிக்கிறது” என்று பெருமையுடன் கூறினார். அதே தினம், “ஒரு கவலையும் வேண்டாம், அரசாங்கம் தயார் நிலையில் இருக்கிறது, வெளிநாடுகளைப் போல நிலைமையைச் சமாளிக்கும் திறன் நமக்கு இருக்கிறது” என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதி கூறினார்.

மேற்படி அமைச்சர் பெருமக்கள் கூறியது போல அரசு மழை பாதிப்பை சமாளித்த கதை நாம் அறிந்ததே. எப்போதும் போல மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டனர். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு ரொட்டியும், சாம்பார் சாதமும் வினியோகம் செய்து மக்களுக்கான நிவாரண பணியை துவக்கி வைத்தார்.

அதற்கு பின்பாக மக்களுக்கு என்ன உதவி கொடுக்கப்பட்டது என்கிற தகவலை அரசு இதுநாள் வரை வெளியிடவில்லை. இவை உணர்த்துவது என்ன? அரசு அமைப்புகள் இயற்கை சீற்றங்களையும், மாற்றங்களையும் சந்திக்க இன்னும் தயாராகவில்லை. மக்களைக் காக்கவும் தயாராகவில்லை. எதிர்பாராத மழையா?

புவி வெப்பமயமாவதை தொடர்ந்து காலநிலையில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்து வருவதை நாம் யாவரும் அறிவோம். 90களில் இருந்தே காலநிலை மாற்றம் பற்றி உலக நாடுகள் விவாதித்து வருகின்றன. அதன் பாதிப்புகளை குறைக்க ஒரு ஒப்பந்தத்தையும் உருவாக்கின. இந்தியா அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ளது. மேலும், காலநிலை மாற்றம் தொடர்பாக நிகழ்ந்து வரும் கூட்டங்களிலும் தொடர்ச்சியாக இந்தியா பங்கேற்று வருகிறது.

காலநிலை மாற்றத்தால் உண்டாகும் பாதிப்புகளை குறைக்கவும், தகவமைத்துக் கொள்ளவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக தமிழகத்திற்கு நிகழக் கூடிய ஆபத்துகளை குறைக்க 2011ம் ஆண்டு தமிழக அரசு ஒரு திட்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. ஆக காலநிலை மாற்றம் என்பது அரசுகள் அறியாத புதிய செய்தி ஒன்றும் அல்ல.

காலநிலை மாற்றம் காரணமாக மழையின் அளவில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது என்று பல ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழகப் பகுதியில் மழையின் வரத்து அதிகரிக்கக் கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நீண்ட நாட்கள் பெய்யக் கூடிய மழை என்று இல்லாமல் குறைந்த நாட்களில் அதிக அளவிலான மழை பெய்யக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படியே தற்போது தமிழகத்தில் குறைந்த நாட்களில் அதிக அளவிலான மழை பொழிந்து வருகிறது.

அடுத்து மழையின் தன்மையிலும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பருவ மழை என்பது மிதமான அளவில் இல்லாமல் சூறாவளியோடு தோன்றுபவையாக மாறி வருகிறது. நாம் தொடர்ந்து சந்தித்து வரும் மழை அனைத்தும் இந்த ரகமே. இந்த மழை பயிர்களை வளர செய்யாமல், மூழ்கச் செய்கிறது. விவசாயிகளை பாதிக்கிறது. நம்மை மையல் கொள்ள செய்யும் இதமான சாரலாக பொழியும் மழை இனி காண கிடைப்பது அரிதாகலாம்.

சூறாவளியோடு வலம் வரும் ரெளத்திர மழையைத்தான் நாம் இனி காணப்போகிறோம் என்கின்றன பல ஆய்வுகள். அனைத்து வித தொழில்நுட்பங்களையும், விண்வெளி களங்களையும் பெற்றுள்ள அரசு அமைப்புகள் இன்னும் இது எதிர்பாராத மழை என்று பழைய பல்லவியையே பாடி வருவது வெட்கக்கேடானது. வெள்ளத்திற்கான காரணங்கள் கடந்த 2015ம் ஆண்டு நிகழ்ந்த வெள்ள பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையை 2016ம் ஆண்டு தாக்கல் செய்தது.

அதில் நீர்நிலைகளில் நிகழ்த்தப்பட்டுள்ள ஆக்கரமிப்புகள், திட்டமிடாத நகரமய கட்டுமானம், வடிகால் சீர்செய்யப்படாமல் இருப்பது போன்றவை வெள்ள பாதிப்பிற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளது. ஆக்கரமிப்புகள் என்னும்போது சாமானிய மக்களின் குடிசைகளே நம் கண் முன் தெரிகின்றன. ஆனால் நாடாளுமன்றக் குழு இவற்றை மட்டும் கூறவில்லை. நீர்நிலைகளை ஆக்கரமித்து இருக்கும் சில தனியார் நிறுவனங்களைப் பற்றியும் கூறுகிறது.

மாற்றுத் திட்டத்தோடு சாமானிய மக்களின் இடமாற்றம் நிகழ்த்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியம் இந்தப் பணியை செய்ய வேண்டும். புதிய வீடுகளை அமைக்க எந்த நிலத்தையும் கையகப்படுத்தும் அதிகாரம் படைத்த குடிசை மாற்று வாரியம் இது நாள் வரை குடிசை வாழ் மக்களுக்காக சென்னையின் மையப் பகுதியில் நிலத்தை கையகப்படுத்தியதாக வரலாறு இல்லை.

நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பற்றியும் கூறுகிறது அந்த அறிக்கை. அரசின் தேவைக்காக நீர்நிலைகள் ஆக்கரமிக்கப்படுவதை நாம் பார்க்கத்தான் செய்கிறோம். வளர்ச்சி என்னும் பெயரில் இவை நடைபெறுகின்றன. இவை சட்டரீதியான ஆக்கரமிப்புகள். இதனை தவிர்த்து நீர்நிலைகள் என்று கண்டறியப்பட்டு–்ள்ள இடங்களை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கரமிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் இங்கு அதிகம் உள்ளன.

நகரத்தை திட்டமிடுதல் 
காலநிலை மாற்றத்தை நம்மால் தடுத்துவிட முடியாது. அதனால்தான் காலநிலை மாற்றதிற்கான சர்வதேச அமைப்புகள் காலநிலை மாற்றத்தின் காரணமாக உண்டாகும் பாதிப்புகளை குறைக்கவும், காலநிலை மாற்றத்தை புரிந்துகொண்டு அதனோடு சேர்ந்து வாழவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. அதன்படி நாம் நமது புதிய சூழலை புரிந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் எதிர்காலம் எப்படி அமைய இருக்கிறது என்னும் அறிவியல்பூர்வமான கணிப்பை மேற்கொள்ள வேண்டும்.

அதன் அடிப்படையில் புதிய நகரக் கட்டுமானத் திட்டத்தை வடிவமைக்க வேண்டும். உதாரணமாக சென்னை என்பது சூறாவளி தாக்கக்கூடிய பகுதியாக உள்ளது. கடல்மட்டம் உயர்ந்து வருவதால் சென்னையின் கடலோரப் பகுதிகள் காணாமல் போகும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற தகவல்களை நிலைநிறுத்தி புதிய நகரத்திற்கான திட்டத்தை வடிவமைக்க வேண்டும். மழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை போன்ற நகரத்தைக் காக்க எதிர்காலச் சூழல் குறித்தான புரிதல் மிகவும் அவசியமானது. வரும் காலங்களில் மழையின் காரணமாக சென்னை பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

சூறாவளி தாக்கக்கூடிய பகுதியாக சென்னை கண்டறியப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு நிகழக்கூடிய பகுதியாகுவும் கண் டறியப்பட்டுள்ளது. அதேவேளையில் சென்னையின் நீர்நிலைகளின் அமைப்பு முறை இயற்கையின் அற்புதம் என்று தான் சொல்ல வேண்டும். மூன்று ஆறுகள், ஒரு நெடிய செயற்கை கால்வாய் என சென்னையின் வெள்ள வடிகால் அமைப்பு முறை விரிவானது.

அதனை பாதுகாத்தல் நம் இருப்பிற்கு முதன்மையானது. சென்னையின் புவியியல் அமைப்பையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சில பகுதிகளில் மட்டுமே நிலம் மட்டுமே நீரை உள்வாங்கும் திறன் படைத்ததாக உள்ளன. சில பகுதிகள் மட்டுமே தாழ்வான பகுதியாக உள்ளன. சில பகுதிகள் மட்டுமே நீரை சேமிக்கும் ஆற்றல் பெற்றதாக உள்ளன.

இந்தத் தன்மையை கண்டறிந்து நம்முடைய கட்டுமானத்தை வடிவமைக்க வேண்டும். இதனை விரைந்து செய்ய வேண்டும். வரும் 15 முதல் 25 ஆண்டுக்குள்ளாக நாம் மிகப் பெரியளவிலான காலநிலை மாற்றத்தை சந்திக்க இருக்கிறோம். அதற்கான முன்தயாரிப்போடு இருப்பது காலத்தின் தேவை. அரசை விழிக்கச் செய்வது நமது கடமையாகிறது.

படம்: வெற்றி