மேரிகோம் இந்தியாவின் அடையாளம்



வியட்நாமில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை 48 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் மேரி கோம். உலக சாம்பியன் பட்டம் வென்ற இவர் ஆசியப் போட்டிகளில் தொடர்ந்து 5வது முறையாக தங்கப்பதக்கத்தை வென்ற முதல் பெண் வீராங்கனை  என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மணிப்பூரில் உள்ள கங்தேயி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் மேரி கோம். விவசாயக் கூலிகளான அவரது பெற்றோருக்கு மேரி கோம்தான் மூத்த மகள். குடும்ப வறுமையின் காரணமாக சிறுவயதிலேயே பெற்றோருக்கு உதவியாக மேரி கோமும் வயலுக்கு செல்வதுண்டு. மேரி கோமின் அப்பாவான தோன்பா கோம், சிறுவயதில் மல்யுத்த வீரராக இருந்தவர் என்பதால், இயல்பாகவே குத்துச்சண்டை மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வப்போது அவருடைய தந்தை சிறு பயிற்சிகளையும் கொடுத்துள்ளார்.

1998-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வின் டிங்கோ சிங், குத்துச்சண்டையில் வெற்றி பெற்றதை அடுத்து இந்தத் துறையில் பயணிக்க முடிவு செய்துள்ளார். குத்துச்சண்டையின் அடிப்படைகளை பயிற்சிகள் மூலம் கற்றுக்கொண்டவர், 2000-ம் ஆண்டில் மணிப்பூரில் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில்  தங்கப் பதக்கம் வென்றார். இதன் பின் இவர் சந்தித்த சவால்கள் ஏராளம்.

“குத்துச்சண்டை போட்டியெல்லாம் பெண்களுக்கு சரிப்பட்டு வராது. இதனால் முகம் இறுக்கமாகிவிடும், காயங்கள் ஏற்படும். உன்னை யாரும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்றெல்லாம் எனது பெற்றோர்கள் கூற எனக்கு நெருக்கடி ஏற்பட்டது. இருந்தாலும் இந்தத் துறையிலேயே பயணிக்க விரும்பினேன்” என்பவர் பெற்றோரின் ஆதரவு கிடைக்காதது, ஒரு புறம் ஸ்பான்சர்கள் கிடைக்காதது மறுபுறம் வருத்தியது. இருப்பினும் மேரி கோம், தான் கலந்துகொண்ட போட்டிகளில் எல்லாம் அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார்.

2000 முதல் 2005-ம் ஆண்டுவரை அடுத்தடுத்து 5 முறை தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றார். உள்ளூர் போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டியவர், சர்வதேச அரங்கில் தன் முத்திரையைப் பதித்தது 2001-ம் ஆண்டில்தான். இந்த ஆண்டில் நடந்த உலக அமெச்சூர் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் சர்வதேச அளவில் தன் முதல் பதக்கத்தை அவர் கைப்பற்றினார்.

“நான் உயரம் குறைந்தவள் (5 அடி 2 அங்குலம்) என்பது என் பலவீனங்களில் ஒன்று. ஆனால் அந்த பலவீனத்தை போக்கும் வகையில் குத்துச்சண்டை களத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவேன். முதலில் சில நிமிடங்கள் எதிராளிகளை அதிகம் ஓட விடுவேன். இதனால் அவர்கள் தளர்ந்திருக்கும் நேரமாக பார்த்து சரமாரியாக குத்துகளை விட்டு அவர்களை கலங்கடிப்பேன்.

குத்துச்சண்டையில் வெல்ல உறுதியான உடலை விட உறுதியான இதயம் தேவை. அந்த இதயம்தான் என்னை வெற்றிபெறச் செய்கிறது. ” இந்தியாவுக்காக தொடர்ந்து பதக்கங்களை குவித்துக்கொண்டிருக்கிறது அவரது கரங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ராஜ்யசபாவிலும் நியமன எம்பியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பிஸியாக இருக்கும் மேரி கோமின் கனவு, அடுத்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத்தர வேண்டும் என்பதுதான்.

- ஜெ.சதீஷ்