#PADMAN CHALLENGE



தமிழ்நாட்டுக்காரரான ‘நாப்கின்’ முருகானந்தத்தின் வாழ்க்கை இந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்‌ஷய்குமார் நடிப்பில் ‘Padman’ எனும் திரைப்படமாகியிருக்கிறது. அதையொட்டி அறிவிக்கப்பட்ட சவால்தான் ‘Padman challenge’. இது அவ்வளவு ஒன்றும் பெரிய சவால் அல்ல. நாப்கினுடன் ஒரு புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்ற வேண்டும் அவ்வளவுதான். இதிலென்ன சவால் இருக்கப் போகிறது என்கிறீர்களா? மாதவிடாயைத் தீட்டாகக் கருதிய, நாப்கினை பேப்பரில் சுற்றி விற்பனை செய்கிற இச்சமூகத்தில் இது சவால்தான். அமீர்கான் தொடங்கி வைத்த இச்சவாலுக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்தித் திரைப் பிரபலங்கள் தொடங்கி பொதுமக்கள் வரை பலரும் இச்சவாலை ஏற்றுள்ளனர். #PadmanChallenge என்கிற ஹேஷ்டேக்கில் பலரும் நாப்கினுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் நிரம்பி வழிகின்றன. ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’, ‘காண்டம் சேலஞ்ச்’ போன்று உலக அளவில் பல சவால்கள் பரவலான கவனத்தைப் பெற்றிருந்தாலும் இந்த சவால் முற்றிலும் வேறானது. காலத்தின் அவசியத் தேவை என்று கூட இதனை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

நாப்கின் முருகானந்தம் குறித்து அறியாதவர்களுக்காக அவரைப் பற்றிய சிறு அறிமுகம். சமூகத்தின் தேவை சார்ந்து சிந்திக்கிற, செயலாற்றுகிற மனிதர்கள்தான் சமூக மேம்பாட்டினைச் சாத்தியப்படுத்துகிறார்கள். அப்படியான மனிதர்களில் ஒருவர்தான் முருகானந்தம். கோவையின் புறநகரான பாப்பநாயக்கன்புதூர்தான் இவரது சொந்த ஊர். நாப்கின் குறித்த பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்காத 1998ம் ஆண்டு இவரது மனைவியை நாப்கின் பயன்படுத்தும்படி கூறுகிறார். நாப்கின் வாங்கினால் குழந்தைக்கு பால் வாங்கப் பணம் இருக்காது என்று அவர் மறுத்து விடுகிறார். வாங்கும் திறன் அதிகம் கொண்டோருக்கான ஒன்றாக நாப்கின் இருந்தது.

அச்சூழலில் தானே ஏன் ஒரு நாப்கின் தயாரிக்கக் கூடாது என்று முருகானந்தத்துக்கு எழுந்த யோசனைதான் அவரை இந்த உச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. நாப்கினின் தொழில்நுட்பத்தை பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு கண்டறிகிறார். இதற்காக அவர் செலவழித்த காலமும், சந்தித்த இழப்புகளும் அதிகம். பல நெருக்கடிகள் இருந்தாலும் தன் முயற்சியை விடாமல் குறைந்த செலவில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கினார். ஏழை மக்களிடம் நாப்கினை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் குறைந்த விலையில் அதனை வழங்குவது மட்டுமே தீர்வு என்கிற முடிவோடுதான் அவர் இந்த ஆராய்ச்சியிலேயே இறங்கினார்.

அதன் வெற்றியாக ஒரு ரூபாய்க்கு நாப்கினை வழங்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். அவர் கண்டுபிடித்த இயந்திரத்தை இந்தியா முழுவதும் 2,680 கிராமங்களுக்கும் எடுத்துச் சென்றார். பெரிய நிறுவனங்களே நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது அதனை குடிசைத் தொழிலாக மாற்றியது இவரது கண்டுபிடிப்பு. பல்வேறு பிராண்டுகளில் இவர் கண்டறிந்த இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாப்கின்கள் விற்பனையாகின்றன. கோவையில் பிறந்த ஒரு சாமானியர் பெரிய வணிக நிறுவனங்களுக்கே சவால் விட்ட இந்தக் கதையைத்தான் ‘பேட்மேன்’ திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் முருகானந்தம் ‘Padman Challenge’க்கு அழைப்பு விடுத்தார்.

அக்‌ஷய்குமார், ராதிகா ஆப்தே, தீபிகா படுகோனே, சோனம் கபூர், காத்ரினா கைஃப், அலியா பட் என வரிசை கட்டி இந்தித் திரைப்பிரபலங்கள் இச்சவாலை ஏற்க இணையவாசிகளும் இச்சவாலில் இறங்கி உள்ளனர். இதன் மூலம் நாம் உணர வேண்டியது மனித உடலை அறிவியல் கண் கொண்டு பார்த்தோமென்றால் மாதவிடாயின் அவசியத்தை புரிந்து கொள்ள முடியும். மாதவிடாய் காலத்தில் பெண்ணின் சுகாதாரத்தைப் பேணிக்காப்பதுதான் அவசியமோ தவிர தீட்டு என ஒதுக்கி வைப்பது பிற்போக்குத்தனமானது. மாதவிடாயின்போது வெளியாகும் ரத்தத்தைக் குறிக்கும் ‘தூமை’ எனும் சொல் வசைச் சொல்லாகத்தான் பயன்படுத்தப்படுகிறது.

கர்ப்பப்பை தன்னைத்தானே மறுசுழற்சி செய்து கொள்வதன் வெளிப்பாடாகத்தான் அந்த ரத்தம் வெளியேறுகிறது என்பதை ஆழமாகப் புரிந்து கொள்ளும்போது அது கெட்ட வார்த்தையாக மாறாது. மாதவிடாய், நாப்கின் ஆகியவை பெண்களின் சமாச்சாரம் என்கிற அளவில் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அது குறித்து கணவராகவே இருந்தாலும் ஓர் ஆணுடன் கலந்து பேசுவதில் பலருக்கும் தயக்கம் இருக்கிறது. இந்தத் தயக்கம் களைந்தெறியப்பட வேண்டியது. பொத்திப் பாதுகாக்க வேண்டிய ரகசியம் ஏதும் இதில் இல்லை என்பதை பெண்கள் உணர வேண்டும். 

நாப்கின் பயன்படுத்துவது சுகாதாரமானது என்கிற பிரச்சாரத்துக்கான தேவை இன்றளவிலும் இருக்கிறது. நாப்கின் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் துணியையே பெரும்பாலும் பயன்படுத்தினர். அது ‘தீட்டுத் துணி’ என்றழைக்கப்பட்டது. மண், கல், சாம்பல் போன்றவையும் பயன்படுத்தப்பட்டன. இன்றைக்கும் பல பின்தங்கிய கிராமங்களில் இம்முறைகள்தான் பின்பற்றப்பட்டு வருகின்றன என்பது வேதனைக்குரிய ஒன்று. இதனால் நோய்த்தொற்று ஏற்பட்டு கர்ப்பப்பை பிரச்னைகளைச் சந்தித்தவர்களும் அதிகம்.

நாப்கின் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். நூறு சதவிகித நாப்கின் பயன்பாட்டைச் சாத்தியப்படுத்தாத இந்தியாவை ‘டிஜிட்டல் இந்தியா’ என்று சொல்வது வெட்கக்கேடுதான். நாப்கின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமென்றால் அது குறித்த சரியான புரிதல் ஏற்படுத்தப்பட வேண்டும். வெளிப்படையான உரையாடல்களே அப்புரிதலை ஏற்படுத்தும். மாதவிடாய் பற்றி நம் குழந்தைகளிடம் பேச வேண்டும். பல ஆண்களுக்கு மாதவிடாய் எதனால் ஏற்படுகிறது என்பது கூடத் தெரியாமல் இருக்கிறது.

அவர்களுக்கு அதனைத் தெரியப்படுத்த வேண்டும். சீருடையில் மாதவிடாய் ரத்தக்கறை படிந்ததன் காரணமாக வகுப்பாசிரியர் திட்டியதால் நெல்லையில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்தது. மாதவிடாய் இங்கு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதன் விளைவாக ஓர் உயிர் பறிபோய் இருக்கிறது. இனியும் நாம் விழிப்படையாமல் இருப்பது மன்னிக்க இயலாத குற்றம் ஆகிவிடும். ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை வெளிப்படையாக எடுத்துச் செல்வதைப் போல் நாப்கினையும் எடுத்துச் செல்லும் நிலையை நாம் எப்போது எட்டுகிறோமோ அன்றைக்குதான் இது மேம்பட்ட சமூகமாகும். அதை நோக்கிய நகர்வுக்கான குரலாக இந்த ‘பேட்மேன் சேலஞ்சை பார்க்கலாம்.

- கி.ச.திலீபன்