பென்சில் முனையில் சிற்பம்



இந்த நவீன யுகத்தில் தொழில்நுட்பக் கல்வியும், கலைத்தொழில் கல்வியும் பெற்று பல துறைகளிலும் தேர்ச்சி பெற்று வருகிறார்கள் இன்றைய பெண்கள். பல கலைகளில் சாதனை படைத்த பெண்கள் உலகமெங்கும் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ‘பென்சில் முனை சிற்பம்’ (Pencil Tip Sculpture) செதுக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவில் சாதனை படைத்திருக்கிறார், பொறியியல் பட்டதாரியான மதனா சுப்பையா என்ற சென்னையைச் சேர்ந்த இளம்பெண்.

பேராசிரியர் டாக்டர் சுப்பையா - கலாராணி தம்பதியின் மகளான மதனா சுப்பையா, கணினி பொறியாளராக வேலை செய்யும் தனது கணவர் பாலாஜி ராம்குமாருடன் அமெரிக்காவில் கனெக்டிகட்-ஸ்டாம்ஃபோர்டு என்ற இடத்தில் வசித்து வருகிறார். அமெரிக்காவிலேயே M.B.A. படிப்பையும் முடித்திருக்கிறார். பொழுதுபோக்கிற்காக ஓவியம், எம்ப்ராய்டரி, நடனம், சோப்பைக் குடைந்து சிற்பம் செதுக்குவது, வீட்டுக்கு உபயோகம் இல்லாத பொருட்களைக் கொண்டு கலை வேலைப்பாடு மிகுந்த பரிசுப் பொருட்களாக மாற்றுவது போன்ற கலைகளில் ஈடுபாடு கொண்டிருக்கும் மதனா, ‘அரஸ் ஓவிய-சிற்பப்பள்ளி’யில் சிற்பம் செதுக்குவதிலும் பயிற்சி பெற்றவர்.

‘‘அமெரிக்காவில் பென்சில் முனை சிற்பத்துக்காக பரிசு பெற்றது எப்படி?’’ என்று கேட்டபோது, உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் மதனா. ‘‘எனது கணவரும் ‘மினியேச்சர் கலெக்‌ஷன்’ல ஆர்வம் கொண்டவர். எனவே, கனெக்டிகட் நகரில் உள்ள மியூசியம் மற்றும் கண்காட்சிகளுக்கு அழைத்துச் செல்வார். ஒரு கண்காட்சியில் சென்று பார்த்த போது நிறைய பேர் தங்கள் பெயரையே Pencil Tip Sculpture-ல் செதுக்கியிருந்தார்கள். அது 2D வகையான சிற்பம். அதற்கே பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது நாம் இதை விட பறவை, மனித முகம்,
பூ என செதுக்கி இதே கண்காட்சியில் பெயர் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

அங்குள்ள `Stamford Art Association’, ஜனவரி முதல் வாரத்தில் `Faces and Figures’ என்ற தலைப்பில் பென்சில் சிற்பத்தில் போட்டி வைத்தார்கள். நான் மிகுந்த பொறுமையாகச் செதுக்கிய சிவலிங்கம், கழுகு, மண்டை ஓடு, ரோஜாப்பூ, கங்காரு, மிக்கி மவுஸ், தாய்-குழந்தை போன்ற பென்சில் சிற்பங்களை அங்கு காட்சிக்கு வைத்தேன். எனக்கே ஆனந்த அதிர்ச்சி... காட்சியில் பங்கெடுத்தால் போதும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு எதிர்பாராத விதமாக அங்கே ‘முதல் பரிசு’ கிடைத்தது.

எனது கலைப் படைப்புக்கு அன்னிய மண்ணில் கிடைத்த அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அமெரிக்காவில், என்ஜினியர்களுக்கும், டாக்டர்களுக்கும் மரியாதையும் மதிப்பும் இருப்பதைப் போலவே, ‘Fine Arts’ எனப்படும் கலைத்தொழில் நுட்பக் கலைஞர் களுக்கும் மிகுந்த மரியாதை கொடுக்கிறார்கள். அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் கலைப்பொருட்களை எவ்வளவு விலை கொடுத்தேனும் வாங்கிச் சேகரிக்கிறார்கள். இதை அறிந்த பிறகு தான், நானும் கண்காட்சி களில் எனது சிற்பத்தைக் காட்சிப் பொருளாக வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் Mattatak மியூசியம், Stamford Art Association-ல் உறுப்பினராகச் சேர்ந்தேன்’’ என்கிறார் மதனா.

‘‘கலைஞர்களுக்கு அங்கீகாரம் முக்கியம். நமது செய் நேர்த்திக்கு அமெரிக்காவில் பாராட்டு கிடைக்கிறது. சிறந்த, வித்தியாசமான, கிரியேட்டிவ் அம்சம் உள்ள கழுகு, மண்டை ஓடு, தாய்-குழந்தை சிற்பங்களுக்கு 500 டாலருக்கு மேல் விலை கொடுப்பார்கள்’’ என்கிறார் உற்சாகத்துடன். ‘‘இந்தக் கலை ஆர்வத்தின் ஆரம்பப் புள்ளி எது?’’ என்று கேட்டபோது, ‘‘எனது தாய் கலாராணிதான். வீட்டில் எப்போதும் தையல், எம்ப்ராய்டரி, கூடை பின்னுதல், ஓவியம் வரைதல் என செய்து கொண்டே இருப்பார். அந்த ஆர்வம்தான் என்னையும் தொற்றிக் கொண்டது. அடுத்ததாக எனது கணவர் எனக்கு அளித்த சுதந்திரம்.’’

‘‘அவ்வளவு விலை கொடுத்து  வாங்கும் அளவுக்கு பென்சில் சிற்பத்தின் சிறப்பு என்ன?’’‘‘எந்த வகை சிற்பம் செதுக்கினாலும் செய் நேர்த்தியும், கலை அழகும்தான் முக்கியம். அதுவும் ‘பென்சில் முனை சிற்பம்’ செதுக்க வேண்டும் என்றால், பூதக்கண்ணாடி (நுண்ணோக்கி லென்ஸ்) கொண்டுதான் பார்த்துப் பொறுமையாகச் செதுக்க வேண்டும். நான்கு ஐந்து மணி நேரம் செதுக்கிய பிறகு, சிறிது உடைந்தாலும் மீண்டும் முதலில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். செதுக்கி முடிந்தவுடன் லட்சியம் நிறைவேறுவது போல் உணர்வோம்.

நான் செதுக்கிய சிற்பம் முப்பரிமாணம் (3D) கொண்டது. எந்தப் பக்கம் திருப்பினாலும் முழு உருவ வடிவமைப்பு இருக்கும். எடுத்துக் கொண்ட பொருளுக்கு ஏற்ப பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். பென்சில் முனையின் அடர்த்தியும், அகலமும் (Density, Diameter) முக்கியம். நான் பொதுவாக 3D பென்சிலில் இருந்து 8D பென்சில் வரை தேர்ந்தெடுக்கிறேன். அதே போல பல வண்ணம் கொண்ட பென்சிலையும் சிற்பம் செதுக்க உபயோகிக்கிறேன். உதாரணத்துக்கு சிவப்பு முனை பென்சில் ரோஜாப் பூவுக்கும், வெள்ளை நிற பென்சில் மண்டை ஓட்டுக்கும், நீல நிற பென்சில் மயில் உருவத் துக்கும் பொருத்தமாக இருக்கும். எந்த உருவத்தைத் தேர்ந்தெடுத்தாலும் செய்நேர்த்திதான் முக்கியம்.

பென்சில் முனையில் உருவங்களைச் செதுக்குவது எவ்வளவு கஷ்டமோ, அவ்வளவு கஷ்டம் இந்த மென்மையான கலைப் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதும். கண்காட்சி நடக்கும் இடத்திற்கு பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும். கண்காட்சியில் கண்ணாடிக் குடுவையில் அமைந்திருக்கும் உருவங்களை லென்ஸ் வழியாகப் பார்க்கும் போதுதான் அதன் நுணுக்கமும், முழுமையான மதிப்பும், பெருமையும் கலையம்சமும் தெரியும்.

பரிசுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, நான் சிற்பத்தைச் செதுக்கும்போது அது பலமுறை உடைந்திருக்கிறது. தளராத மனதுடன் ஒரு சிலந்தியின் முயற்சியோடு மீண்டும் மீண்டும் பொறுமையாகச் செதுக்கி லட்சியத்தை அடைந்தேன். ‘கஷ்டப்பட்டு செதுக்கியிருக்கிறீர்கள்... பாராட்டுகிறோம்’ என்று கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்கள் சொல்லும்போது அவ்வளவு உற்சாகம் அடைந்தேன்.’’

‘‘எதிர்கால லட்சியம்?’’
‘‘தினமும் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும். எழுபது மைல் பயணம் செய்து வேலைக்கும் போக வேண்டும். இதற்கு இடையில் இந்தக் கலைத்தொழிலை ஆர்வமுடன் தொடர ஆசைப்படுகிறேன். தினமும் இதற்கென நேரம் ஒதுக்கி கடினமாக உழைக்கிறேன். இப்போது பல கண்காட்சி நிறுவனங்கள் காட்சிப்படுத்துவதற்காக எனது படைப்புகளைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன. முக்கியமாக ‘The Studio Door Art Gallery-San Diego’ நிறுவனம், இந்த வருடம் நடத்தும் ‘Fourth International Crow Show’-வுக்கு என்னைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இவர்கள் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி நடத்தி கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுக்கிறார்கள்.

காகம் உலகம் முழுவதும் இருக்கும் பறவை... புத்திக் கூர்மையான பறவை. அதனால், காகத்தின் இயல்பைக் காட்டும் பல்வேறு சிற்பங்கள் கொண்ட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆம், நானும் காக்கா செதுக்கப் போகிறேன்!’’ தமாஷ் காட்டும் மதனா, ‘‘இந்தியா வந்தாலும் இந்த சிற்பக் கலையைத் தொடர்வேன். மக்கள் மத்தியில் கொண்டு செல்வேன்’’ என்கிறார் ஆர்வமாக. அன்னிய மண்ணில் சாதனை செய்த மதனாவுக்கு வாழ்த்துகள்!
 

- ஸ்ரீதேவி மோகன்