எச்சரிக்கை



வாசகர் பகுதி

என் கணவருக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தன் விமானப் பயணத்திற்காக நாலு மணியளவில் வீட்டிலிருந்து விமானதளம் செல்ல தனியார் டாக்ஸி ஒன்று புக் செய்துள்ளார். அதிகாலை முதல் நாளிரவே புக் செய்தவருக்கு மறுநாள் காலை 3 மணி அளவில் தனியார் டாக்ஸி ஓட்டுநர் அவரை அழைத்து தான் இன்னும் 20 நிமிடத்தில் வந்து விடுவதாகவும், அவருடைய விலாசத்தை சரியாக தெரிந்து கொண்டு ‘‘நீங்கள் ரெடியாக இருக்கிறீர்களா?’’ என்று கேட்க, அவரும் ‘ஆமென்று’ சொல்ல, ‘‘இதோ வந்துடறேன் சார்’’ என்று ஓட்டுநர் பதிலளித்திருக்கிறார்.

சரியாக பதினைந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைத்த ஓட்டுநர், ‘‘சார்! உங்கள் தெருவுக்குள் நுழைந்து விட்டேன். வீடு எது, எங்கிருக்குன்னு கண்டுபிடிக்க முடியல, இது சரியான அட்ரஸ் தானா?’’ என்று கேட்க, நண்பரும், ‘‘அட்ரஸ் எல்லாம் சரிதான், இதோ நான் வீட்டிலிருந்து வெளியே வரேன், வெள்ளைச் சட்டை போட்டிருக்கேன். தெரியுதா?’’ என்று மொபைலில் பேசிக் கொண்டே, வீட்டிலிருந்து வெளியேறி தெருவைப் பார்த்தால், ஆள் அரவம் இல்லை.

‘‘ஹலோ! என்னப்பா, தெருவுல வண்டியே இல்லையே?’’ என கேட்ட நொடி, முகத்தில் கர்சீஃப் கட்டிய இருவர், தெருவின் ஓர் இருளான பகுதியில் இருந்து, இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து மொபைலை பிடுங்கிச் செல்ல, ஒரு நிமிடம் நிலைகுலைந்த நண்பர் அடுத்து அதிரக் கூட அவகாசம்
இல்லாமல் எதிர்புறத்தில் இருந்து மேலும் இருவர் இன்னொரு வண்டியில் வந்து ‘லேப்டாப் பேக்கை’ பிடுங்க, அதை இறுக்கிப் பிடிக்க போராடிய நண்பர் முடியாமல் பிடி தளர்ந்து, அப்படியே கீழே விழ நெற்றியில் காயத்துடன் நடு வீதியில் விழுந்து விட்டார்.

கண்ணிமைப்பதற்குள் நடந்து முடிந்த இந்த களேபரங்களையும், கணவரின் கூக்குரலையும் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த மனைவி வெளியே வர, அவர் விழுந்து கிடப்பதைப் பார்த்து, ‘‘ஏங்க மெதுவாக எழுந்து வீட்டுக்குள் வாங்க’’ என வாசலில் நின்று உடல் நடுங்க கதறியிருக்கிறார். நண்பரும் தட்டுத் தடுமாறி எழ எத்தனிக்கும் போது, இன்னொரு இரு சக்கர வாகனத்தின் என்ஜின் உறுமி, ஹெட் லைட் மெதுவாக உயிர் பெற்றிருக்கிறது.  மேலும் இருவர் இவர் எழுவதற்காக காத்திருக்கிறார்கள். இவர் எழுந்து வீட்டை நோக்கி ஓடத் தொடங்கியதும், இவர் பர்ஸை குறிவைத்து பின்னால் அவர்கள் விரட்டி வர, உடமைகள் பறி போனதை விட இப்பொழுது உயிர் பயம் நண்பரை ஆட் கொள்ள, எப்படியோ சுதாரித்து வீட்டினுள் நுழைந்து கதவை அடைத்து உயிர் தப்பியிருக்கிறார்.

இப்பொழுது இரு சக்கர வாகனத்தின் எஞ்சின் உறுமல் மிக அருகில் கேட்க, உடலெங்கும் பயம் பரவ ஜன்னலின் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். இவர் வீட்டு வாசலில் மூன்று வாகனங்களில் ஆறு பேர், ‘என்னடா தப்பிச்சுட்டாயா?’ என்பது போல் ஒரு எகத்தாள பார்வை பார்த்தபடி வண்டியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குள் அக்கம் பக்கத்து வீடுகளில் விளக்குகள் எரிய ஆரம்பிக்கவும், வேறு வழியில்லாமல் மூன்று வாகனங்களும் இருளில் கலந்து மறைந்திருக்கின்றன.

பயத்தில் இதயம் உறைந்து கை, கால் நடுங்க இதை கண்டிருந்தவரை, திடீரென ‘லேண்ட் லைனில்’ அழைப்பு மேலும் அதிர வைத்திருக்கிறது. ‘‘ஏன் சார் இத்தனை நேரமாக உங்கள் ‘மொபைலுக்கு போன் பண்ணி எடுக்காததால், நல்ல வேலை ‘லேண்ட் லைன்’ நம்பர்  கொடுத்திருந்ததால் உங்களை தொடர்பு கொள்ள முடிந்தது சார்! நான் டிரைவர், வீட்டு வாசலில்தான் நிற்கிறேன்.

வெளியே வாங்க’’ எனச் சொல்ல, ‘‘பயணமே வேண்டாமடா சாமி’’ எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்திருக்கிறார். இச்சம்பவம் காவல் நிலையத்தில் வழக்காக பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஓட்டுநர் ‘‘தனக்கு எதுவும் தெரியாது’’ எனச் சொல்லி விட்டார். திருடர்கள் இன்னும் பிடிபடவில்லை. ஆகவே, அதிகாலை பயணம் மேற்கொள்ளும் நண்பர்கள் இச்சம்பவத்தை கவனத்தில் கொண்டு வரப்போகும் ஓட்டுநரின் பெயர், முகவரி ஆகியவற்றைக் கேட்டுக் கொண்டு வந்தபின் அவரிடம் இந்த விவரத்தையெல்லாம் கேட்டு தெரிந்த பின் வெளியே வரவும்.

- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.