நீராலானது இவ்வுலகு



தண்ணீர் இல்லா தேசம்! கேப்டவுன் தரும் எச்சரிக்கை!!

உலகின் முதல் தண்ணீர் இல்லா இடமாக அறிவிக்கப்பட உள்ளது  தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன். தண்ணீர் பஞ்சம் இங்கு உச்சத்தில் உள்ளது. சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப்டவுனில் நீர் சேவை என்பது முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முக்கிய தேவை தவிர்த்து பிற பயன்பாட்டுக்கு நீர் மறுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் மக்களின் தேவைக்கு ஏற்ப அளவீடு செய்த பிறகே திறந்து விடப்படுகிறது. நாளுக்கு நாள் மக்கள் பயன்பாடுகளுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது கேப்டவுனில் 80 லிட்டர் தண்ணீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரியில் இது 50 லிட்டராக குறைக்கப்படும் என்ற அலாரத்தை கேப்டவுன் வாசிகளுக்கு அந்நகர நிர்வாகமே  தெரிவித்துள்ளது.

தொழிற்சாலை பயன்பாட்டுக்கான நீர் தேவை கூட தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஒரு புட்டி நீருக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். கைகளை நீரால் சுத்தம் செய்வது உள்ளிட்ட அன்றாட நீர் பயன்பாடு கூட முறைப்படுத்தப்பட்டுள்ளது. கார் மற்றும்  நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான கேப்டவுன் இத்தகைய நிலையை எப்படி அடைந்தது? காலநிலை மாற்றம் மட்டும் இதற்கு காரணமா? அல்லது அரசின் நிர்வாக சீர்கேடும் இதற்கு காரணமா? இதில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள போகிறோம் என பல கேள்விகள் நம் முன் உள்ளது.

என்ன நடக்கிறது கேப்டவுனில்?
கேப்டவுனின் நீர் தேவை சுமார் 6 நீர் அணைக்கட்டுகளில் இருந்து பெறப்படு கிறது. இந்த 6 அணைகளுமே தற்போது வறண்டு உள்ளதே கேப்டவுனின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணம். கடந்த மூன்று ஆண்டுகளாக மழை வரத்து இல்லை. இதன் காரணமாக பிற நீர்நிலைகளும் வற்றி விட்டன. காலநிலை மாற்றம் காரணமாக மழை வரத்து குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. கேப்டவுனுக்கு இத்தகைய நிலை வரும் என்பது யாரும் அறியாதது இல்லை. 1990கள் முதல் கேப்டவுனுக்கு நீர் வறட்சி ஆபத்து உள்ளது என்னும் எச்சரிக்கை தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் நீர் மேலாண்மை திட்டங்களும் கொண்டு வரப்பட்டது. இருந்த போதிலும் தற்போது வறட்சி நிலை உருவாகி உள்ளது. இதனை தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

1990களில் இருந்தே காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் நாம் அறிந்ததே. நீர் இருப்பிலும் இதன் தாக்கம் இருப்பதும் நமக்கு தெரியும். எனவே இதனை எதிர்கொள்ள சிறந்த மேலாண்மை திட்டங்களை அரசுகள் முன்னெடுத்திருக்க வேண்டும். அத்தகைய சில மேலாண்மை திட்டங்களை தென் ஆப்பிரிக்க அரசு முன்னெடுத்தும் இந்த வறட்சி ஏற்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனையானது. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் கூட இந்த வறட்சியில் இருந்து மக்களை மீட்டெடுக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கேப்டவுன் மட்டுமல்லாது உலகெங்கும் பல நாடுகள் இத்தகைய நீர் வறட்சிகளை கண்டு வருகின்றன. குறிப்பாக ஈரான், சோமாலியா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் கடும் குடிநீர்ப் பஞ்சத்தைச் சந்தித்துள்ளன. கடந்த ஆண்டு கோடையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொண்டது. இந்தோனேசிய தலைநகர் ஜகார்த் தாவிலும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இதில் கவலையளிக்கக்கூடிய செய்தி என்னவென்றால் போதிய மழை பொழிந்தாலும் மழை நீரை சேர்த்து வைக்க தவறுவதினால் மிகப்பெரிய வறட்சியை பல நாடுகள் சந்திக்கின்றன.

மேலும் எல்நினோ போன்று காலநிலை மாற்றத்தால் ஒரே நாளில் அடித்து தள்ளும் மழையாலும் மிகப் பெரிய பாதிப்புகளை நாடுகள்  சந்தித்து வருகின்றன. இதனை எதிர்கொள்ள புதிய மேலாண்மை திட்டங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இத்தகைய நீர் வறட்சி நாடுகளில் உள்நாட்டுக் கலவரங்களை உண்டாக்கலாம். இல்லை அரேபியாவில் நடந்தது போல ஆட்சி மாற்றத்தையே கொண்டு வரலாம்.

நமக்கான படிப்பினை
கேப்டவுனின் அனுபவத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம். நீர் வறட்சி என்பது எங்கும் எப்போதும் வரலாம் என்பதைதான் கேப்டவுன் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மனித மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இயற்கை வளம் குறைந்து வருகிறது. குறிப்பாக நீர் வளம் குறைந்து வருகிறது. குறைந்து வரும் நீர் வளத்தை பங்கிட்டுக் கொள்ள மனித சமூகத்திடம் முரண்பாடுகள் உண்டாகும் என்பது இயல்பு. இத்தகைய கலவர சூழலை நோக்கித்தான் நாம் பயணப்பட்டு கொண்டு இருக்கிறோம். மூன்றாம் உலகப் போர் என்பது தண்ணீருக்கானதாக இருக்கலாம் என்றார் ஓர் அறிஞர். இது உண்மையாகலாம். விழிப்போடு இருந்து புதிய கொள்கைகள் மூலம் இத்தகைய ஆபத்துகளை தடுக்கலாம்.

உடனடியாக நாம் செய்ய வேண்டிய வேலை திட்டங்கள் உள்ளன. முதல் படியாக அரசின் எல்லா கொள்கையிலும் காலநிலை மாற்றம் சார்ந்த ஆய்வு முடிவுகள் கணக்கில் கொண்டு வடிவமைக்க வேண்டும். அடுத்து அனைத்து திட்டங்களிலும் சூழலியல் பார்வை வேண்டும். நீர் மேலாண்மை என்பது மையப்பட்ட வகையில் இல்லாமல் அதிகாரம் பரவலாக்கப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது கிராமப் பஞ்சாயத்து, ஊராட்சி போன்ற அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டு நீர் மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

வீடுதோறும் மழை நீர் சேகரிப்பு  என்பது இன்று ஏட்டளவில் மட்டுமே உள்ளது. இதனை மீண்டும் செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். நீர் நிலை பாதுகாப்பு என்பது நீர்நிலைகளை மீட்பதிலும் உள்ளது. அதற்கு முக்கியமானது நீர் நிலைகளை  கண்டறிந்து அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது. இதனை செயல்படுத்த தமிழக அரசு ‘நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் சட்டத்தை’ 2007ம் ஆண்டு இயற்றியது. இச்சட்டப்படி ஒவ்வொரு நீர்நிலையின் எல்லையும் அளவிடப்பட வேண்டும். அப்படி அளவிடப்பட்ட எல்லைகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

இப்படியான அளவிடும் போது நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் அவை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இதுநாள் வரை தமிழக நீர்நிலைகள் முழுவதுமாக அளவிடப்படாமல் உள்ள காரணத்தால் ஆக்கிரமிப்புகள் தொடர் கதையாகி உள்ளது. 2011ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கடலோர ஒழுங்காற்று விதிகள் மூலமாகவும் கடலோர நீர்நிலைகள் கண்டறியப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் கூறுகிறது. இதன் மூலம் நீர்நிலைகள் மற்றும் பிற உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது. ஆனால் இதுநாள் வரை இச்சட்டப்படி தமிழக அரசு கடலோர நீர்நிலைகளை இன்னும் கண்டறியாமல் உள்ளது. இச்சட்டப்படி நீர்நிலைகளை பாதுகாக்க உருவாக்க வேண்டிய பாதுகாப்பு திட்டத்தையும் வடிவமைக்காமல் உள்ளது தமிழக அரசு. சட்டங்கள் இருந்தே இந்த நிலை. 

இப்படி நீர்நிலை பாதுகாப்பு என்பது கனவாகவே உள்ளது தமிழகத்தில். இதில் எதிர்கால நீர் வறட்சியை கருத்தில்  கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்படும் என்று எண்ணுவது பெரும் கனவாகவே முடியும். சூழலியல் பார்வையை மறுத்து வெறும் வர்த்தக நோக்கிலான திட்டங்களை முன்னெடுத்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு எதிர்கால நீர் தேவையை கருத்தில் கொண்டு எவ்வித திட்டத்தையும் வகுக்கவில்லை.

தமிழக அரசிற்கோ நீர் கொள்கை என்று எதுவும் கிடையாது. தற்போதைய நிலையில் ‘அம்மா குடிநீர் திட்டம்' என்பதே ஆட்சியின் மிகப் பெரிய சாதனையாக கூறப்படுகிறது. தண்ணீரை விற்பனைப் பண்டமாக மாற்றி அதனை சாதனையாக கூறும் அவலம் இங்கு மட்டுமே நிகழக்கூடும். மாறி வரும் சூழல், பெருக்கெடுத்து வரும் மக்கள்தொகை, குறைந்து வரும் நீர் வளம், இதன் காரணமாக உண்டாக இருக்கும் முரண்கள் இவற்றை கணக்கில் கொண்டு எதிர்கால திட்டங்களை வகுப்பதே ஒரு நல்லரசு செய்யும் வேலையாக இருக்க முடியும். நம் அரசுகள் நல்லரசா இல்லையா என்பதை காலம் கூறும்.

(நீரோடு செல்வோம்!)