செகண்ட் இன்னிங்ஸ்



ராணி முகர்ஜி
இந்திப் படவுலகில் இப்போது முன்னாள் நடிகைகளின் மறுபிரவேசம் நடக்கிறது. சில முன்னாள் பிரபலங்கள் தொலைக்காட்சியிலும் நுழைகிறார்கள். இந்த வகையில் இரண்டு நடிகைகள் குறிப்பிடத்தக்கவர்கள். ஒருவர் ராணி முகர்ஜி. 39 வயதாகும் ராணி முகர்ஜி முதன் முதலாக ஒரு வங்காள படத்தில் நடித்தார். இதனை இயக்கியது இவருடைய தந்தை ராம் முகர்ஜி. 7 முறை ஃபிலிம்ஃபேர் விருது பெற்றவர். முதல் தடவை ஃபிலிம்ஃபேர் விருது பெற்ற படம் ‘குச்குச் ஹோதா ஹைய்’. ராணி முகர்ஜி முதல் ரவுண்டில் சினிமா, டெலிவிஷன், டாக்குமென்டரி, மியூசிக் வீடியோக்கள் பலவற்றில் பிரபலமாய் இருந்தார். 9 முறை ஸ்கிரீன் இதழில் பரிசு பெற்றவர்.

தற்போது ஹிச்கி (Hichki) என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி-23ல் ரிலீஸாகிறது. ஹிச்கி என்றால் சவால் என்று பொருள். வாழ்க்கையில் சவாலை எதிர் கொண்டு சாதித்த நிஜ ஹீரோக்களை சந்தித்து அளவளாவி அதனை வெளிப்படுத்த உள்ளார். அதே சமயம் தன்னுடைய புதிய படத்தையும் மக்களிடம் விளம்பரப்படுத்துகிறார். இதற்காக நகரங்களை சுற்றுகிறார்.
 
ரீனா ராய்
இவர் 1972ம் ஆண்டிலிருந்து 1985ம் ஆண்டு வரை இந்திப் படவுலகில் கொடி கட்டி பறந்தவர். அந்த காலகட்டத்தில் கதாநாயகியாக மிக அதிக சம்பளம் வாங்கிய வரும் இவர்தான். சத்ருகன் சின்காவுடன் இணைந்து பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்டவர். ஃபிலிம்ஃபேர் விருது பெற்றவர். மேலும் 1998ல் ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. இவருடைய தந்தை இஸ்லாமியர். தாய் இந்து. 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர், தன்னுடைய 61-வது வயதில் 16 வருட ஓய்வுக்குப் பிறகு ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்க உள்ளார். இதனை விகாஸ் குப்தா என்பவர் தயாரித்து வருகிறார். ‘‘வீட்டு பொறுப்புகளும் மற்றும் என் மகளும், இவ்வளவு நாள் என்னை பிசியாக வைத்திருந்தனர். தற்போது நான் ஃப்ரீ! அதனால் அடுத்த ரவுண்ட் துவக்கியுள்ளேன்'' என்கிறார் ரீனா ராய்!

- வைஷ்ணவி, பெங்களூர்.