மாத்தி யோசிங்க பாஸ்...



நடுத்தரக் குடும்பம். வேலைக்குப் போகும் தந்தை. வீட்டு வேலை செய்யும் அம்மா. பள்ளிக்கூடம் போகும் தங்கை. எதுக்குமே போகாமல் நண்பர்களுடன் பகலில் டீக்கடையிலும், இரவில் டாஸ்மாக்கிலும் பொழுதைக் கழிக்கும் ஹீரோ. வீட்டுக்குள் வந்தால் தண்டச்சோறு என்று திட்டும் அப்பாவுடன் முறைப்பு.

தங்கையுடன் செல்லச் சண்டை. அடுப்பங்கரையில் அம்மாவுடன் பாசப் பரிமாற்றம். ஒரு நாள் திடீரென்று கிராஸ் பண்ணிப்போவார் வெள்ளை வெளேர் ஹீரோயின். கூந்தல் பறக்க, தோழிகளுடன் வலம் வருவார். நாய்க்குட்டியைக் காப்பாற்றுவார்.

கண் தெரியாதவர்களை ரோடு கடந்து விடுவார். பள்ளிக் குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுப்பார். இப்படி எந்த பழக்கமும் இல்லாத ஹீரோவுக்கு அவர் மீது காதல் வரும். அவரும் இவருக்கு நேர்ந்துவிட்டது போலவே காதலிக்க ஆரம்பிப்பார். அவர் நிச்சயம் பெரிய இடத்து பெண்ணாகவே இருப்பார்.

காதலுக்கு எதிர்ப்பு வரும். அதனால் வில்லன்கள் எந்த வம்பு தும்புக்கும் போகாத ஹீரோவின் வீட்டை சூறையாடுவார்கள். ஹீரோவின் காதலுக்காக அவரது குடும்பம் நிம்மதி இழந்து கண்ணீரும் கம்பலையுமாக அலையும். கடைசியில் ஹீரோ தன் பராக்கிரமங்களை காட்டி காதலியை கைபிடிப்பார். ஹீரோயின் அப்பாவோ, அம்மாவோ, தங்கையோ இவரது காதலுக்காக பலியாகி இருப்பார்கள்.

இப்போது வெளிவரும் 50 சதவிகித கதைகள் இப்படித்தான் இருக்கும். ப்ளீஸ், மாத்தி யோசிங்க பாஸ்... மர்மம் நிறைந்த அந்த பங்களாவுக்குள் நான்கு பேர் மாட்டிக் கொள்வார்கள். ஒரு அமானுஷ்ய சக்தி அவர்களைத் துரத்தும். ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவார்கள். கடைசி யில் ஹீரோவும் ஹீரோயினும் மட்டும் தப்பிப்பார்கள்.

அவர்களைத் துரத்தியது பேயா, சைக்கோவா, கண்ணுக்கு புலப்படாத ஒண்ணா, அல்லது வில்லன்களின் மொக்க ஐடியாவா என்பது சம்பந்தப்பட்ட இயக்குரின் சிந்தனா சக்தியைப் பொருத்தது. குறைந்த பட்ஜெட்டில் 30 நாளைக்குள் படம் எடுக்க இதுதான் சரியான கதை. கொஞ்சம் பட்ஜெட் பெருசா இருந்தா இதே சப்ஜெக்டை அடர்ந்த காட்டுக்குள் எடுத்து வந்து விடலாம்.

வருகிற படங்களில் 20 சதவிதம் இந்த கதைகள்தான். ப்ளீஸ், மாத்தி யோசிங்க பாஸ்... அம்மா தப்பானவளாக இருப்பாள். அல்லது சின்ன வயதில் அறியாமல் செய்த ஒரு தவறுக்கு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஹீரோ படித்திருப்பார். பருவ வயதில் விடுதலையாகும்போது சைக்கோவாகவோ, லோக்கல் தாதாவாகவோ இருப்பார்.

 திருட்டு, போதை, அடி உதைதான் வாழ்க்கை. இப்படிப்பட்டவனையும் தேடி வந்து விரட்டி விரட்டி காதலிப்பார் ஒயிட் ஹீரோயின். ஒரு கட்டத்தில் நாயகனும் காதலிக்க ஆரம்பித்து நல்லவனாக மாற முயற்சிப்பான். ஆனால், சமூகம் விடாது. அவன் காதலியை பலி வாங்கும். ஆத்திரத்தில் அத்தனை பேரையும் போட்டுத் தள்ளிவிட்டு தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருப்பான்.

இது ஒரு தனி வகையான சைக்கோ கதை. ப்ளீஸ், மாத்தி யோசிங்க பாஸ்... ஊருக்குள் நக்கலும் நய்யாண்டியுமாக திரிவார் வில்லேஜ் ஹீரோ. தனக்கு பொருத்தமாக அத்தை மகள்கள் இருக்கும்போது வெள்ளைத்தோலும் வட்ட முகமுமாக இருக்கிற ஊர் பண்ணை வீட்டு பொண்ணை காதலிப்பார். அந்தப் பெண்ணும் இவரிடம் என்ன இருக்கிறது என்று தெரியாமல் காதலிக்கும். பெட்டி படுக்கையுடன் ஒருநாள் நாயகனின் குடிசைக்கு வந்து சேரும்.

பெரிய பண்ணை குடும்பம் ஆள் உயர அருவாளோடு இவர்களைத் தேடித் திரியும். விதவை அம்மா குடியிருக்கும் ஒற்றை குடிசை வீட்டை எரித்து சாம்பலாக்கும். கோபம் பொங்கும் வில்லேஜ் ஹீரோ, அவரைவிட அரை அடி உசர அரிவாளை சுமந்து கொண்டு அனைவரையும் வெட்டிச் சாய்ப்பார்.

மாமனார் - மாமியாரை மட்டும் விட்டு வைப்பார். ‘நானும் உங்க மகளும் எவ்ளோ சந்தோஷமா வாழ்றோம்னு நீங்க பாக்கணும்' என்று பன்ச் பேசுவார். பாவம் கூலிக்கு மாரடித்தவர்கள் வழிநெடுக செத்துக் கிடப்பார்கள். இதுதான் மண்வாசனை கதை. ப்ளீஸ், மாத்தி யோசிங்க பாஸ்...

- மீரான்