தமிழ் புரூஸ்லீ



முளையூர் ஏ.சோணை இயக்கியுள்ள படம் ‘புதிய புரூஸ்லீ'. இது ஆங்கிலப் படத்தின் டப்பிங் அல்ல. நேரடி தமிழ்ப் படம். நாயகன் சென்னையைச் சேர்ந்த புரூஸ். நாயகி ரசியா. இவர்களோடு தென்னவன், சக்திவேல், திலக், ஐஸ்வர்யா, சங்கர், சுரேஷ் நரங் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இசை சௌந்தர்யன். கிராமத்திலிருந்து பட்டணத்திற்கு வரும் நாயகன் மாமா வீட்டில் ஏற்படும் பிரச்னையை அடிதடி மூலம் தீர்த்து வைப்பதுதான் கதை. படத்தின் நாயகன் புரூஸ், கராத்தேயில் டபுள் பிளாக் பெல்ட் வாங்கியவர் என்பதால் சண்டைக் காட்சியில் டூப் இல்லாமல் தைரியமாக நடித்தாராம்.

ஆனால், காதல் காட்சிகளில் நடிக்கும்போது மட்டும் நெர்வர்ஸாகிவிட்டாராம். புரூஸ்லீ படங்களில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகளுக்கு இணையாக இப்படத்திலும் ஆக்ஷன் காட்சிகளை பரபரப்பாக இயக்கிக் கொடுத்தாராம் சண்டை இயக்குநர் திரில் சேகர். புரூஸ்லீ யின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி உருவாக்கி இருக்கும் இந்தப் படம் ஆக்ஷன் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்குமாம்.

- எஸ்