மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானேன்...



கே.பாலசந்தரின் அழைப்பை ஏற்று சென்னைக்கு வந்த அனுபவத்தைக் குறித்து சென்ற இதழில் விளக்கிய நடிகை பூர்ணிமா பாக்யராஜ், இந்த இதழில், தான் கதாநாயகியாக அறிமுகமானதைக் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.

‘‘ஒரு நாள் எதிர்பார்க்காத வகையில் எல்.வி.பிரசாத் ஆபீஸிலிருந்து அழைப்பு வந்தது. மிகப் பெரிய நிறுவனம் என்பதால் எந்தக் கேள்வியும் கேட்காமல் என்னுடைய போட்டோ ஆல்பத்தை எடுத்துக் கொண்டு ஓடினேன். அங்கிருந்த தயாரிப்பாளர் ரமேஷ் பிரசாத் என்னுடைய போட்டோ ஆல்பத்தை பார்த்த பின், ‘ஒரு மலையாளப் படத்தில் நடிக்கத்தான் உங்களை அழைத்தோம்' என்றார்.

‘மலையாளப் படமா?' என்று அதிர்ந்தாலும் வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் தொடர்ந்து என்ன சொல்லப் போகிறார்கள் என்று காத்திருந்தேன். என்னைப் பொறுத்தவரை மலையாளப் படங்கள் என்றால் ஏதோ ஒரு தவறான இமேஜ் இருந்தது. காரணம், நாங்கள் இருந்த பகுதியில் பி கிரேட் மலையாளப் படங்கள்தான் ரிலீஸாகும். நல்ல படங்களை பார்த்ததே இல்லை. எனவே, ‘மலையாளப் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை.

 இந்தப் படவாய்ப்பு எனக்கு வேண்டாம்' என்று திட்டவட்டமாக  சொல்லிவிட்டு புறப்பட ஆயத்தமானேன். அதற்கு ரமேஷ் பிரசாத், ‘நீங்கள் பயப்படுகிற மாதிரியான படம் இது இல்லை. படத்தை தயாரிக்கும் கம்பெனி ரொம்ப நல்ல கம்பெனி. இதற்கு முன் நல்ல படங்களை எடுத்திருக்கிறார்கள். அந்த கம்பெனியைப் பொறுத்தவரை என்னால் கியாரண்டி தர முடியும்' என்றார்.

கொஞ்சம் நம்பிக்கை வந்தது. தயாரிப்பாளர் அப்பச்சன் சார் சார்பில் அவருடைய மகன் மும்பை வந்திருந்தார். ‘மலையாளம் தெரியுமா?' என்றார். தெரியாது என்றேன். ‘பரவாயில்லை... டயலாக் டெஸ்டுக்காக தற்காலிமாக இங்கிலீஷில் எழுதி வைத்துக் கொண்டு டயலாக் பேசுங்கள். பிறகு நாங்கள் உங்களுக்கு மலையாளம் பேச பயிற்சி கொடுத்து நடிக்கவைக்கிறோம்' என்றார். நானும் எந்தவித ஆர்வமும் இல்லாமல், ஏதோ சொல்கிறார்கள், பேசித்தான் பார்ப்போமே என்று டயலாக்கை பேசிவிட்டு கிளம்பினேன்.

சில வாரங்கள் கழித்து மீண்டும் எல்.வி.பிரசாத் அலுவலகத்திலிருந்து போன் வந்தது. ‘நீங்கள் மலையாளப் படத்தில் நடிக்க செலக்ட் ஆகிவிட்டீர்கள்' என்றார்கள். முதல் ஷெட்யூல் கொடைக்கானலில் என்ற தகவலையும் சொன்னார்கள்.

 ஒரு பக்கம் மலையாளப் படத்தில் நடிக்க அதிகாரபூர்வமாக அழைப்பு வந்தபோதிலும் என்னால் முடிவு எடுக்க முடியவில்லை. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கே.பாலசந்தர் சார் நமக்குத் தெரிந்தவராக இருக்கிறார். ஆனால், மலையாளக் கம்பெனி பற்றியும் மலையாள சினிமாவைப்பற்றியும் நமக்கு எதுவும் தெரியாது. கே.பி. சார் படமும் ஆரம்பிக்காமல் இருக்கிறார்களே என்கிற குழப்பம் இருந்தது.

நீண்ட யோசனைக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். என்றாலும் எப்படி எடுப்பார்கள் என்கிற அச்சம் கொடைக்கானல் போய்ச் சேரும்வரை இருந்தது. முதலில் சென்னையில் உள்ள பாம்குரோவ் ஹோட்டலில் தங்க வைத்தார்கள். அறைக்குள் நுழைந்ததும் ஹேங்கரில் விதவிதமான ஆடைகள் தொங்கிக் கொண்டிருந்தன.

அந்த ஆடைகளைப் பார்த்ததும் என்னுடைய மனம் குதுகலத்தில் துள்ளிக் குதித்தது. ஹா... ஹா... இந்த உடைகளை அணிந்துதான் நடிக்கப் போகிறோமா என்று எனக்கு நானே கேள்வி எழுப்பிக் கொண்டேன். உடைகள் நாகரீகமாகவும், இந்தி நடிகைகள் உடுத்துவது போல் பிரம்மாண்டமாகவும் இருந்தன.

அடுத்து மேக்கப் மேன் வந்து மேக்கப் டெஸ்ட் எடுத்தார். அதன்பிறகு ஹேர் டிரஸ்ஸர் வந்து விக் வைத்துப் பார்த்தார். அடுத்து காஸ்டியூமர் அங்கிருந்த அனைத்து உடைகளையும் காண்பித்தார். தயாரிப்பு நிறுவனத்தின் இந்த நடை முறைகள் எனக்கு புதுமையாக இருந்தது. காரணம், நான் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட்டாக நடிக்கும்போது நான்தான் மேக்கப் மேன், ஹேர் டிரஸ்ஸர் என ஒவ்வொருவரையும்  தேடிப் போக வேண்டும்.

சில நாட்களுக்குப் பிறகு கொடைக்கானலை நோக்கி பயணம் தொடர்ந்தது. அங்கு போய்ச் சேர்ந்தவுடன் அப்பச்சன் சார் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார். அவருடைய தோற்றமும், பேச்சும் என்னுடைய அப்பாவை நினைவுக்குக் கொண்டுவந்ததால் அவருடன் சகஜமாகப் பேச முடிந்தது.

சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு அந்தப் படத்தின் இயக்குநர் பாசில் கதை சொல்ல வந்தார். இன்று பிரபலமாக இருக்கும் பாசிலுக்கு அதுதான் முதல் படம். படத்தின் பெயர் ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்'. படத்தின் ஹீரோ ஷங்கர். இது தவிர படத்தில் இன்னொரு கேரக்டர் உண்டு. அந்த கேரக்டரில் மோகன்லால் என்கிற புதுமுகம் நடிக்கிறார் என்று படத்தில் நடிப்பவர்களின் விபரங்களைச் சொன்னார்.

கதை சொல்லும் போது ஒரு கட்டத்தில் பாசில் சார் நடித்துக் காண்பிக்க ஆரம்பித்துவிட்டார். என்னுடைய கேரக்டரைச் சொன்னதும் எனக்கு பரம திருப்தி. முழுக் கதையையும் சொன்ன பிறகு நாளைக்கு 6 மணிக்கு தயாராக இருக்க வேண்டும் என்றார். 6 மணிக்கு ஷூட்டிங் என்றதும் எனக்கு இந்தி சினிமாதான் நினைவுக்கு வந்துபோனது.

ஏனெனில் அங்கு 6 மணிக்கு ஷூட்டிங் என்று சொல்லி 12 மணிக்கு ஆரம்பிப்பார்கள். ஆனால், தென்னிந்திய சினிமாக்காரர்கள் சொன்னபடி நடந்து கொள்வார்கள் என்று மறுநாள்தான் தெரிந்து கொண்டேன்.

காலை 5 மணிக்கெயல்லாம் தயாரிப்பாளர் அப்பச்சன் ஒவ்வொரு ரூம் கதவையும் தட்டி அனைவரையும் எழுப்பிவிட்டார். 6 மணிக்கு சொல்லி வைத்தது போல் மேக்கப் மேன், ஹேர் டிரஸ்ஸர் வந்து மேக்கப், ஹேர் டிரஸ் பண்ணிவிட்டார்கள். நானும் என்னை பெரிய ஹீரோயின் போல் மனதுக்குள் எண்ணிக் கொண்டு படப்பிடிப்பு தளத்துக்கு போனேன்.

முதலில் நான் நடந்து வருவதுபோல் சில காட்சிகள் எடுத்தார்கள். நான் டான்ஸர் என்பதால் என்னால் எக்ஸ்பிரஷன் சரியாகக் கொடுக்க முடியும். எனவே எப்படி நடிக்கப் போகிறோம் என்கிற பயம் எனக்கு இல்லை. மொழிதான் பிரச்னையாக இருக்குமோ என்று பயந்தேன். ஆரம்பத்தில் சின்னச் சின்ன டயலாக் பகுதிகள் கொடுத்தார்கள். அது எனக்கு கான்பிடன்ஸ் கொடுத்தது.

இதில் கொடுமை என்னவெனில் ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் இயக்குநர் உட்பட அனைவரும் மலையாளத்தில் பேசிக்கொண்டிருப்பார்கள். எனவே ஷாட் எப்படி வந்துள்ளது என்று தெரிந்துகொள்ள கஷ்டப்பட்டேன். அந்த டீமைப் பொறுத்தவரை எனக்கு ஒரே சப்போர்ட்டாக இருந்தவர் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமார்தான்.

 அவர் இந்திக்காரர் என்பதால் நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. எனவே, ‘சார்... அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை அடுத்த வாரம் சொல்கிறேன்...'' என்று புன்னகைத்தார் பூர்ணிமா பாக்யராஜ்.

-சுரேஷ் ராஜா