கேரள நடிகைகளின் அலப்பறைகள்



சென்னையில் குறிப்பிட்ட நட்சத்திர ஹோட்டலில்தான் ரூம் வேண்டும் என்று கேட்டு அடம்பிடிக்கிறாராம், ‘ட்ராயிங்' நடிகை. ஆரம்பகாலத் தில் வாயில்லாப்பூச்சி மாதிரி இருந்தவரா இப்படி மாறிவிட்டார் என்று, புரொடக்ஷன் புண்ணியகோடிகள் பலர் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்படுகின்றனர்.

ஆனால், நடிகைக்கு இப்போது ஓரளவு வரவேற்பு இருக்கிறது. அதனால்தான் இப்படி ஆட்டம் போடுகிறார் என்று சொல்லும் ஒரு இயக்குநர், ஆடம்பர விஷயங்களை மட்டும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட அவர், ‘நடிப்பு' விஷயத்தில் தன்னை டெவலப் செய்துகொண்டால் நன்றாக இருந்திருக்கும் என்ற கமெண்ட்டையும் உதிர்க்கிறார்.

‘சமந்த' நடிகையின் பெயரைக் கேட்டாலே ‘ஹன்ஸ்' நடிகை டென்ஷனாகி விடுவதாக சொல்கிறார்கள். காரணம், ஹன்சுக்கு போக வேண்டிய வாய்ப்புகளை எல்லாம் சமந்தம் குறுக்குவழியில் லபக்கி விடுகிறாராம்.

 இதனால், ஹன்சுக்கு புதுப்படம் கிடைப்பது நழுவிக்கொண்டே இருக்கிறதாம். இந்த சதிச் செயலுக்கு யார் காரணம் என்று தெரியாமல் புலம்பிய ‘ஹன்ஸ்', தெலுங்கில் ஒரு குறிப்பிட்ட படத்தை தன்னிடம் இருந்து லபக்கிக் கொண்ட விஷயத்தை அறிந்ததும், ‘சமந்த' நடிகையின் செயலுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று காத்திருக்கிறாராம்.

‘ஸ்ருதி' நடிகைக்கு சோதனை மேல் சோதனை வந்து அலைக்கழிக்கிறதாம். மும்பையிலுள்ள வீட்டில் ஒரு மர்ம நபர் புகுந்து களேபரம் செய்தது அடங்கிய நேரமாகப் பார்த்து, ஐதராபாத் ஷூட்டிங்கில் திடீரென்று உடல்நிலை பாதித்து ஆபரேஷன் வரை சென்றது, தனக்கு ஏற்பட்ட கெட்ட காலம் என்று நினைக்கிறாராம்.

எனவே, கோயில் கோயிலாக செல்ல முடிவு செய்துள்ளாராம். மேலும், மும்பையில் குடியேறியுள்ள வீட்டை ராசி கருதி மாற்றலாமா என்றும் யோசித்துள்ளாராம். ‘கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி மட்டும் படக்கூடாது' என்று முன்னோர்கள் சொன்ன அனுபவ மொழியை நம்பும் நடிகை, திருஷ்டி கழிப்பதற்கான விசேஷ பூஜையை நடத்த தேதி பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

ஜோடியாக நடிக்கும் ஹீரோவுக்கும், தனக்கும் காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி எப்படி ஒர்க்-அவுட் ஆகிறது என்று கேள்வி கேட்டால், எரித்து விடுவதைப் போல் பார்க்கிறாராம், ‘நம்பீச' நடிகை. மலையாள இளம் ஹீரோவுடன் ரகசியமாக ஊர் சுற்றுகிறார்,

அவரைத்தான் காதலிக்கிறார், திருமணம் செய்தால் அவரைத்தான் செய்வார் என்று அம்மணி பற்றி மல்லுவுட், டோலிவுட், கோலிவுட், சான்டல்வுட் ஏரியாக்களில் வதந்தி பரவி வரும் வேளையில், ஏதோ படத்தில் நெருங்கி நடிக்கும் ஹீரோவுடன் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், பயாலஜி மாதிரி ஏதோ ஒன்று ஒர்க்-அவுட் ஆனதா என்று கேட்பது, தன்னை எரிச்சலடைய வைக்கிறது என்று வெளிப்படையாகப் பேசும் நடிகை, இதுபோன்ற அர்த்தமில்லாத கேள்விகளை ஒதுக்கி வைக்கும்படி மீடியாவிடம் கெஞ்சுகிறாராம்.

‘பிரியபெல்' நடிகைக்கு ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுவது என்றால், எட்டிக்காயாய் கசக்கிறதாம். ‘மெட்ராஸ் விரைவு வண்டி' இந்தியில் உருவானபோது, ‘கான்' நடிகர் ஹீரோவாக நடித்தார் என்ற ஒரே காரணத்துக்காக குத்துப்பாட்டுக்கு ஒப்புக்கொண்டு ஆடினாராம். இந்த அறிமுகமாவது நிறைய இந்திப் பட வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று நம்பினாராம். படம் ரிலீசாகி இவ்வளவு நாட்களாகியும், ஒரு வாய்ப்பு கூட அவர் வீட்டுக் கதவைத் தட்டவில்லையாம்.

இதையடுத்து நொந்து நூடுல்ஸ் ஆன நடிகை, இனி எந்த மொழிப் படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடக்கூடாது என்று உறுதியாக முடிவு செய்துள்ளாராம். சமீபத்தில் தமிழில் ஒரு பாட்டுக்கு ஆட கூப்பிட்டபோது, ‘எனக்கு வயசாயிடுச்சா என்ன? ஏன் சூர்யா, அஜீத், விஜய் கூட நடிக்க என்னை கூப்பிட மாட்டேங்கிறாங்க?' என்று கேள்வி கேட்டு குடைந்தாராம்.

மலையாளத்தில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகும் பல இளம் நடிகைகள், காதல் தோல்வி புகழ் ‘தாரா' மற்றும் ‘பால்', ‘ல.மேனன்' போன்ற நடிகைகளுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கிறார்களோ அத்தனை வசதிகளையும் தங்களுக்கும் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போடுகிறார்களாம்.

 மலையாளப் படத்தில் நடிக்கும்போது கிடைக்காத வசதிகளும், சம்பளமும் தமிழ்ப் படத்தில் நடிக்கும்போது கிடைக்கிறது என்பதை கண்கூடாக உணர்ந்த அவர்கள், கொஞ்சமாவது ‘பந்தா' செய்தால் தான் முன்னணி ஹீரோயின்கள் வரிசையில் இடம்பிடிக்க முடியும் என்று நம்புகிறார்களாம்.

‘சாட்டை' படத்தில் நடித்த பிறகு கூட யாரும் தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோயினாக அங்கீகரிக்கவில்லையே என்று, கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து கவலைப்படுகிறாராம், மலையாள வரவு ‘மகி' நடிகை. எல்லோரும் அவரை ரொம்ப சின்னப் பெண்ணாக இருக்கிறார் என்று சொல்லி நிராகரித்து விடுகிறார்களாம்.

‘பார்க்கும் எல்லோரும் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால், நான் எப்போது ஹீரோயினாக நடிப்பது?' என்று குமுறும் நடிகை, ‘மெச்சூரிட்டியான கேரக்டரில் நானா நடிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறேன்? என்னை நம்பி வாய்ப்பு கொடுத்தால்தானே நிரூபித்துக் காட்ட முடியும்?' என்று புலம்பித் தீர்க்கிறார்.

இதையடுத்து இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, அதில் ஒரு படத்தில் ரொம்ப போல்டான கேரக்டர் அமைந்துள்ளதால், ‘கண்டிப்பாக அடுத்த ரவுண்டு வருவேன்' என்று, தலையில் அடித்து சத்தியம் செய்கிறாராம்.

ஒரு புதிய படத்தில் நடித்தபோது, அந்த புது இயக்குநருடன் காதல், பிறகு நிச்சயதார்த்தம், அதற்குப் பிறகு திருமணம் நடக்க இருந்த நேரத்தில் ஏற்பட்ட திடீர் குழப்பம், உடனே தற்கொலை முயற்சி, அதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரி சிகிச்சை என, பரபரப்புச் செய்தியாக வலம் வந்து காணாமல் போன ‘பாலாசுஜி' நடிகைக்கு தமிழில் புதுப்படம் கிடைப்பது கானல் நீராகி விட்டதாம். எனவே, ‘பிராமிஸ்கிங்' நடிகரின் ‘போராட்டம்' படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தார்.

ஆனால், படத்தின் டிரைலரில் அவரது காட்சியைக் காட்டவில்லையாம். இதனால் வருத்தப்பட்ட நடிகை, அந்த சோகத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தாராம். ஆனால், படத்தின் பிரஸ் மீட்டில் அதைக் குறிப்பிட்டு மீடியா நபர் ஒருவர் கேட்டபோது, சிரித்தபடி எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த நடிகை, முதலில் உடல் எடையைக் குறைத்து, மீண்டும் பழைய வேகத்தில் நிறைய படங்களில் நடிக்க ஆயத்தமாவதாக சொன்னாராம்.

‘கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், மது அருந்திய மனிதர்களுக்கு நடுவில் கிளப் டான்ஸ் ஆட மாட்டேன்' என்று சொல்லும் ‘நி.மேனன்' நடிகை, கவர்ச்சி காட்டும் விஷயத்தில் படுகஞ்சமாம். ‘என் நடிப்புத் திறமையை பார்க்கத்தான் ரசிகர்கள் விரும்புவார்களே தவிர, உடல் கவர்ச்சியைப் பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள்.

எனவே, அதற்கான கதையுடன் என்னை அணுகுங்கள்' என்று வெளிப்படையாகப் பேசும் அவர், நடிக்க ஒப்பந்தமாகும்போதே கண்டிஷன்களை விவரமாக சொல்லி விடுவாராம். அதில் ஒரு கண்டிஷனுக்கு உட்படவில்லை என்றாலும், அப்படத்தில் நடிக்க மாட்டாராம். மேலும், சம்பள விஷயத்திலும் அம்மணி கறாராக இருப்பாராம்.

தமிழில் ஏற்கனவே நடித்த படத்தைத் தவிர, ‘பூர்ண' நடிகைக்கு புதுப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்த நடிகை, வாய்ப்பு கொண்டு வரும் மேனேஜர்கள் செய்யும் அரசியல்தான் என்பதை தாமதமாகக் கண்டுபிடித்தாராம். எனவே, இனி யாராக இருந்தாலும் தன் செல்போனில் தொடர்புகொள்ளலாம் என்று ஸ்டேட்மென்ட் விட்டுள்ள நடிகை, எந்த மேனேஜர் நல்ல வாய்ப்பு கொண்டு வருகிறாரோ, அவருக்கு தனது மொத்த சம்பளத்தில், பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை கமிஷனாகத் தருவதாக சொல்லியிருக்கிறாராம்.

மேலும், தனக்கு நெருக்கமான சில தோழி நடிகைகளுக்கு போன் செய்து, ‘உங்களால் நடிக்க முடியாத படங்கள் என்றால், எனக்கு சிபாரிசு செய்யுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம்.

(படத்தில் இருக்கும் நடிகைகள் அக்ஷரா கௌடா,  சாக்ஷி சௌத்ரி ஆகியோருக்கும் இந்தச் செய்திகளுக்கும் தொடர்பில்லை)

- மாயன்