லட்சுமி மேனனிடம் கேளுங்கள்



முத்தக்காட்சியில் நடிப்பீர்களா?

‘கள்ளச்சிரிப்பழகி' என்ற பட்டத்தைக் கொடுத்தால், ஏற்றுக்கொள்வீர்களா லட்சுமி?
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை.
ரசிகர்களாகிய நீங்கள் அன்புடன் கொடுக்கும் எந்தப் பட்டமாக இருந்தாலும், அதை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்.

நான் உங்கள் தீவிர ரசிகன். உங்கள் கையெழுத்து போட்ட போட்டோ வேண்டும். அனுப்புவீர்களா?
- அ.ஜனார்த்தனம், நாமக்கல்.
சென்னையிலோ அல்லது உங்கள் ஊர் பகுதியிலோ நான் ஷூட்டிங்கில் இருப்பதை தெரிந்துகொண்டு நேரில் வந்தால், என்னுடன் சேர்ந்து போட்டோவே எடுத்துக்கொள்ளலாம்.

கதைக்கு தேவைப்பட்டால், முத்தக்காட்சியில் நடிக்க தயாராக இருக்கிறீர்களா?
- சி.எஸ்.சஞ்சனா, வந்தவாசி.
வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன். ‘நான் சிகப்பு மனிதன்' படத்தைப் பார்த்தால், உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்.

திறமை இருந்தாலும், அதிர்ஷ்டம் இல்லை என்றால் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்பது உண்மையா?
- சூர்யா ஸ்ரீதர், காஞ்சிபுரம்.
நீங்கள் சொல்வது சரிதான். எத்தனையோ பேர் திறமை இருந்தும், சினிமாவில் ஜெயிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததால்தான் தமிழிலும், மலையாளத்திலும் வெற்றிகரமான ஹீரோயினாக புகழ்பெற்றுள்ளேன்.

படத்தின் வெற்றி, தோல்வி பற்றி கவலைப்பட்டது உண்டா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.
கடவுளின் கிருபையால், தமிழில் நான் நடித்து வெளியான ‘சுந்தரபாண்டியன்', ‘கும்கி', ‘குட்டிப்புலி', ‘பாண்டிய நாடு' ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. எனவே, இதுவரை தோல்வியை நான் சந்திக்கவில்லை. என்றாலும், இப்போது கிடைத்துள்ள வெற்றியை கடைசிவரை எப்படி தக்கவைத்துக்கொள்வது என்று படபடப்பாக இருக்கிறது.

ஸ்ருதிஹாசன், அமலா பால், அனுஷ்கா, தமன்னா, நஸ்ரியா நாசிம், காஜல் அகர்வால், டாப்சி, ஹன்சிகா ஆகிய நடிகைகளுடன் ஒப்பிடும்போது, நீங்கள் ஒன்றும் பெரிய அழகி மாதிரி தெரியவில்லையே?
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை.
அழகு என்பது, அவரவர் பார்க்கும் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. நான் அழகா? அழகு குறைவா என்று நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? முதலில் ஒரு நல்ல டாக்டரைப் பார்த்து, உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
திடீரென்று ஆணாக மாறிவிட்டால், சந்தோஷப்படுவீர்களா? அல்லது வருத்தப்படுவீர்களா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ரொம்ப வருத்தப்படுவேன். காரணம், நான் யார் மாதிரியும் இருக்கக்கூடாது என்று நினைப்பவள். கடைசிவரையில், நான் நானாக இருப்பதற்குத்தான் ஆசைப்படுவேன்.
புத்தகம் படிப்பது, டி.வி பார்ப்பது, ரேடியோ கேட்பது - எதில் மகிழ்ச்சி அதிகம்?
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.
புத்தகம் படிப்பதில்தான் அதிக மகிழ்ச்சி கிடைக்கும். நாம் படிக்கும்போது, நம் மனதில் அந்த காட்சிகள் கற்பனையாக விரியும். அப்போது மூளை நன்றாக செயல்படும். பொதுவாக நான் ரியல் ஸ்டோரி யுடன் உருவான புத்தகங்களை மட்டுமே அதிகமாகப் படிப்பேன்.
அரசியலில் குதிக்கும் எண்ணம் உண்டா?
- அ.முரளிதரன், மதுரை.
இன்னும் எனக்கு தேர்தலில் ஓட்டு போடும் வயதே வரவில்லை. அதனால், அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. தெரியாத துறையில் ஈடுபடுவதில் எனக்கு விருப்பம் இல்லை.
உங்களுக்கு ரசிகர் மன்றம் தொடங்க ஆசை. அனுமதி கொடுப்பீர்களா?               - டி.உதயகுமார், தாராபுரம், திருப்பூர்.
ரசிகர் மன்றங்களில் எனக்கு விருப்பம் இல்லை. எனவே, எனக்கு ரசிகர் மன்றம் தொடங்க வேண்டாம். தியேட்டருக்கு சென்று, நான் நடித்த படத்தைப் பார்த்து, கடைசிவரை என் ரசிகராக இருந்தால் அதுவே போதும்.

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
லட்சுமி மேனனிடம் கேளுங்கள்
வண்ணத்திரை, 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-600004


(இன்னும் சொல்வேன்)
தொகுப்பு: தேவராஜ்