படிப்பதும் நடிப்பதும் பொறியியல்!



“எஞ்சினியரிங் மாணவர்கள் கலைக்கல்லூரி மாணவர்களைப்போல ஜாலியாக சுற்றமுடியாது. காலை ஐந்தரை மணிக்கு பேருந்தில் ஏற்றி, மாலை ஐந்தரை மணிக்கு வீட்டுக்குப் பக்கத்தில் இறக்கிவிடுவார்கள். அப்படியொரு எஞ்சினியரிங் மாணவர், கலைக்கல்லூரி வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறார். பேருந்துப் பயணத்தின்போது நட்பு கிடைக்கிறது. கதாபாத்திரம் முருகனும் அவரது ஐந்து நண்பர்களும்தான் ‘முருகாற்றுப்படை’யின் தளபதிகள்’’ என்கிறார் இயக்குனர் கே.முருகானந்தம்.

இவர் பாலா உள்ளிட்ட பெரிய இயக்குனர்களின் 44 படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக இருந்து சினிமாவைக்கற்றவர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊர் நாகனேந்தலில் இருக்கும்போதே நாடகம், கரகாட்டம் என பயிற்சி பெற்றவர். இவரது கதையை நம்பி கைகொடுத்தவர் ஆர்.சரவணன். அவர்தான் நாயகன் மற்றும் தயாரிப்பாளர். படத்தில் எஞ்சினியரிங் மாணவராக நடிக்கும் சரவணன் ஜெயா குரூப் ஆஃப் எஞ்சினியரிங் காலேஜில் இரண்டாமாண்டு மாணவர்.

குழந்தை நட்சத்திரம் நேவிகா இந்தப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். கணேஷ் ராகவேந்திரா இசையில் ஐந்து பாடல்களை மோகன்ராஜ் எழுதியுள்ளார். ரத்னவேலுவின் உதவியாளர் ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘‘குடும்பத்துடன் வந்து பார்க்கும் படமாக இருக்கும்’’ என்று நம்பிக்கையோடு பேசுகிறார் இயக்குனர்

கே.முருகானந்தம்.