இதுதான் டப்பா ?



சினிமா என்பது படைப்புக் கலை, மக்களின் சமூக ஊடகம் என்பதைத் தாண்டி எப்போது சினிமாவும் ஒரு தொழில். வியாபாரம் என்று மாறியதோ அப்போதே வியாபாரத்தில் தவறாமல் இடம் பிடிக்கும் உட்டாலங்கடி வேலைகள் சினிமாவிலும் தொடங்கிவிட்டது. எல்லா தகிடுதத்தங்களையும் எழுத ஆரம்பித்தால் தனியாக புத்தகம் போட வேண்டியது இருக்கும் சாம்பிளுக்கு ஒன்றை மட்டும் பார்க்கலாம்.

தெலுங்கில் வெளிவரும் பக்கா ஆக்ஷன் படங்களுக்கு தமிழ்நாட்டு பி அண்ட் சி சென்டர்களில் ஒரு வரவேற்பு இருக்கும். இந்த படங்களின் டப்பிங் உரிமையை சில லட்சங்களுக்கு வாங்கி மேலும் சில லட்சங்கள் செலவு செய்து டப் செய்து வெளியிட்டால் போட்ட முதலுக்கு பழுதில்லாமல் சில லட்சங்கள் கைவந்து சேரும். இது டப்பிங் தொழில் வகை. எந்த மாதிரி படம் பி அண்ட் சி ஆடியன்சுக்கு பிடிக்கும் என்று கணிப்பதுதான் இதில் உள்ள ஒரே வியாபாரத் தந்திரம்.

இந்த பிசினசிலும் ஒரு டப்பு விளையாட்டு இருக்கிறது. அது என்னவென்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு பிடிக்கும் என்று கருதுகிற ஒரு தெலுங்கு அல்லது கன்னட படத்தை வாங்குவார்கள். படத்தில் எங்கெங்கு தெலுங்கு, கன்னட எழுத்துக்கள் தெரிகிறதோ அந்தக் காட்சியை நீக்குவார்கள், அல்லது மார்பிங் செய்து அழித்து விடுவார்கள். படத்தின் இடையிடையே சென்னை அண்ணா சாலை, சென்ட்ரல் ரெயில் நிலையம், மெரீனா பீச், தமிழ் பேப்பர்கள், திருவல்லிக்கேணி கோவில், டீக் கடையில் தொங்கும் போஸ்டர்கள், தமிழ் சினிமா பட போஸ்டர்கள் இவற்றைக் காட்டி அதனை ஒரிஜினல் தமிழ்ப் படம் போன்று மாற்றுவார்கள்.

படம் நன்றாகப் போகும் என்று தெரிந்தால் இங்குள்ள எடுபிடி காமெடி நடிகர்களை வைத்து தனியாக ஒரு காமெடி போர்ஷனை ஷூட் பண்ணி அப்படியே சொருகி நேரடி படமாக மாற்றிக் கொள்வார்கள். தமிழிலும் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் நடித்திருந்தால் இந்த வேலை இன்னும் சுலபமாக முடியும். எதையாவது செய்து நேரடி படமாக மாற்றி விட்டு அதற்கு பாடல் வெளியீட்டு விழா நடத்துவார்கள் அதுதான் உச்சகட்ட பிசினஸ் எத்திக்ஸ்.

 இதுபோன்ற படங்களின் பாடல் வெளியீட்டு விழாவிற்கென்றே ஆஸ்தான சிறப்பு விருந்தினர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் வந்து அது டப்பிங் படம் என்று தெரிந்தாலும் அதை நேரடி படமாகவே கருதி வாயார வாழ்த்திவிட்டு பொன்னாடை பெற்று திரும்புவார்கள். அப்புறம் போஸ்டர் விளம்பரம் என்று புரமோஷன்கள் கலக்கும். சரி, தணிக்கைக் குழு கண்டுபிடித்து விடுமே என்று நினைக்கலாம். தணிக்கைக் குழு சினிமாவை ஒரு படைப்பாகப் பார்த்த காலமெல்லாம் மலையேறி விட்டது. அரசின் விதிமுறைக்குள் படம் இருக்கிறதா என்று மட்டும்தான் பார்ப்பார்கள். விதியை அது கெட்டியாகப் பிடித்துக் கொள்வதால் இங்கு விதிமீறல் சுலபமாகிறது.

ஒரு படத்தை டப் செய்து வெளியிடாமல் நேரடி படமாக மாற்றி வெளியிடுவதில் என்ன லாபம் இருக்கிறது என்ற கேள்வி எழலாம். எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும் டப்பிங் படங்களுக்கு தமிழ்நாட்டில் மவுசு குறைவுதான். ‘அருந்ததி‘ மாதிரி அரிதான படங்கள்தான் ஜெயித்திருக்கிறது. டப்பிங் படங்கள் பார்ப்பதில்லை என்று குலசாமி கோவிலில் சத்தியம் செய்து விட்டு வந்திருப்பவர்கள் நிறையப் பேர் உண்டு. நல்ல படமோ சுமாரான படமோ நேரடி படங்கள்தான் பார்ப்பார்கள். டப்பிங் படங்களை விநியோகஸ்தர்கள் குறைந்த விலைக்குத்தான் கேட்பார்கள். நேரடி படம் என்றால் அதிக விலைக்கு விற்கலாம்.

கொஞ்சம் அசந்தால் அரசு மானியத்துக்குக்கூட விண்ணப்பிக்கலாம். படத்தை டப் செய்து வெளியிட்டால் வெறும் விநியோகஸ்தராகத்தான் இருக்க முடியும். நேரடி படமாக மாற்றி வெளியிட்டால் நானும் தயாரிப்பாளர், நானும் தயாரிப்பாளர் என்று வடிவேலு மாதிரி வண்டியேறலாம்.

மீரான்