MALE நட்பே மேல்



புதுமுகம் புஷ்கின் ராஜ்குமார் நடித்துள்ள  ‘மேல்’ படத்துல காதல் பாடல்கள் இல்லை என்றாலும் மற்ற அனைத்தும் பரபரப்பை கிளப்பி இருக்கின்றன. ‘ஷூட்டிங்னா எப்படி இருக்கும்னு முதன் முதலா இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்’ என்கிறார் புஷ்கின் ராஜ்குமார். ‘‘சினிமாவை தியேட்டரில் போய் பார்க்கும் சாதாரண ரசிகனாகிய நான் நடிகனாவேன் என்று கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. சினிமாவில் நடிக்கணும்னா கம்பெனி கம்பெனியாக  ஏறி இறங்கணும்னு கேள்விப்பட்டுள்ளேன்.

வாய்ப்பு அவ்வளவு சீக்கிரமாக கிடைக்காது என்றும் தெரியும். நண்பர் மூலமாக என்னுடைய போட்டோவைப் பார்த்த இயக்குநர் அருள், கதைக்கு நான் பொருத்தமாக இருந்ததால் எந்தவித ஆடிஷனும் இல்லாமல் ஓ.கே.பண்ணினார். சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு இந்தத் துறை மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் தானாக ஏற்பட்டது. காரணம், ஒரு படத்தை விமர்சிப்பது எளிது. ஆனால் ஒரு காட்சியை படமாக்க எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது என்பதை இங்கு வந்த பிறகு தான் தெரிந்துகொண்டேன்.

இதில் எனக்கு பாய் நெக்ஸ்ட் டோர்னு சொல்லக்கூடிய காலேஜ் ஸ்டூடன்ட் ரோல். ரியல் லைஃப் கேரக்டரையே ரீல் லைஃபில் பண்ணவேண்டும் என்பதால் கஷ்டம் இல்லாமல் நடிக்க முடிந்தது. தேசிய விருது வாங்கிய அப்புக்குட்டியுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. நடிப்பைக் குறித்து அவரிடம் சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. சின்ன வயசுல இருந்து டான்ஸ் தெரியும் என்பதால் ஸாங் எடுக்கும் போதும் கஷ்டம் தெரியவில்லை. நாயகியாக நேகா வர்றார். எங்கள் இருவருடைய காம்பினேஷன் காட்சிகள் டச்சிங்காக இருக்கும்” என்கிறார் புஷ்கின் ராஜ்குமார்.

இயக்குநர் அருளிடம் பேசினால், “சினிமாவில் 23 வருஷமா இருக்கிறேன். டைரக்ஷன் பண்ணுவதற்கு நிறைய வாய்ப்பு வந்தது. ஆனால் கதையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற பேச்சு வந்ததால் வந்த வாய்ப்புகளை நிராகரித்துவிட்டேன். எனக்கு எப்படியாவது டைரக்ட் பண்ண வேண்டும் என்கிற ஆசையெல்லாம் கிடையாது. குவாலிட்டியான சினிமா பண்ண வேண்டும் என்பதுதான் நோக்கம். இயக்குநர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, பரதன் இயக்கிய படங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. இந்தப் படத்தின் சாயல் அவர்கள் இயக்கிய படங்கள் போல இருந்தாலும் முழுக்க முழுக்க இப்போதுள்ள டிரெண்டுக்கு ஏற்ப இருக்கும்.

இது ஃப்ரெண்ட்ஷிப்பை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையாக இருந்தாலும் முற்றிலும் புதிய கோணத்தில் இருக்கும். நட்பு ஆண்களுக்கு மட்டுமே என்பதுதான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. திருமணத்துக்குப் பிறகு பெண்களின் நட்பு வட்டாரம் மிகவும் குறுகிவிடுகிறது. ஆனால் ஆண்களின் நட்பு அப்படி இல்லை. காலம் காலமாகத் தொடர்கிறது. அதையே இதில் அழுத்தமாக சொல்லியுள்ளேன். அதே சமயம் பெண்களின் ஆதங்கத்தையும் பதிவுசெய்துள்ளேன்.

இசையமைப்பாளர் உதயன், கேமராமேன் மூவேந்தர், எடிட்டர் ராஜா முகமது என அனைத்து டெக்னீஷியன்களின் ஒர்க்கும் பேசப்படும் விதத்தில் இருக்கும். ஃப்ரெண்ட்ஷிப்பை மையமாகக் கொண்ட கதை என்பதால் லவ் சீன் சுத்தமா இல்லை. ஃப்ரெண்ட்ஷிப்பில் ஆரம்பிக்கும் கதை ஃப்ரெண்ட்ஷிப்பில்தான் முடியும்’ என்கிறார் அருள்.

எஸ்