மனதோடு பேசிய மலையாளக்குரல்!



பத்துப்பேர் கொண்ட மொத்தக்குடும்பமும் இசைஞானம் மிகுந்தவர்கள் என்பது சொர்ணலதாவுக்குக் கிடைத்த பெருமை. கேரளாவில் பாலக்காடு சித்தூர்தான் அவருக்குச் சொந்த பூமி. அப்பா கே.சி.செருகுட்டி சிறந்த ஆர்மோனியக் கலைஞராகவும் பாடகராகவும் அறியப்பட்டவர். சொர்ணலதாவுக்கு மிகப்பெரிய ஊக்கக்கருவியாக இருந்தது அம்மா கல்யாணி. அக்கா சரோஜா மற்றும் ராமச்சந்திரன் மாஸ்டரிடம் முறையான சங்கீதம் கற்றார் சொர்ணலதா.

குடும்பம் சென்னைக்குக் குடியேறியது. அம்மா-அப்பாவுடன் சென்று எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்புக் கேட்டார், ‘ஏதாவது பாடிக்காட்டு’ என்ற எம்.எஸ்.வியின் முன், ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பி.சுசீலா பாடிய ‘பால் போலவே வான் மீதிலே…’ பாடலைப் பாடிக்காட்டினார் சொர்ணலதா.

பாராட்டிய எம்.எஸ்.வி ‘வாய்ப்பு வரும்போது அழைக்கிறேன்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். சில நாட்களிலேயே அழைப்பு வந்தது. கலைஞரின் ‘நீதிக்கு தண்டனை’ படத்தில் எம்.எஸ்.வி இசையில், பாரதியார் இயற்றிய ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…’ பாடலைப் பாடி, தனது பாட்டுச்சாலைப் பணத்தைத் தொடங்கினார் சொர்ணலதா.

அந்த இசைத்தட்டை எடுத்துக்கொண்டு இளையராஜாவைச் சந்தித்தார். அவர், ரஜினியின் ‘குரு சிஷ்யன்’ படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். வாலி எழுதிய ‘உத்தம புத்திரி நானு…’ என்ற பாடலைப் பாடினார்.‘காதலன்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், மனோ ஆகியோருடன் இணைந்து சொர்ணலதா பாடிய ‘முக்காலா முக்காபுலா…’ பாடல், மெல்லிசையில் மட்டுமல்ல, துள்ளல் பாடலிலும் அசத்துவார் என்பதை பாட்டுலகத்துக்கு பறைசாற்றியது. இந்திப்படத்திலும் அந்தப்பாடலை அவரே பாடியிருந்தார்.

கமல் நடித்த ‘இந்தியன்’ படத்தில், வாலியின் வரிகளில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய ‘அக்கடானு நாங்க உடை போட்டா…’ மற்றும் ‘மாயா மச்சீந்திரா…’
பாடல்களும், ரஜினியின் ‘தளபதி’ படத்தில் இளையராஜா இசையில் பாடி, பி.பி.சியின் டாப் டென் தரவரிசையில்  இடம்பெற்ற ‘ராக்கம்மா கையைத் தட்டு…’ பாடலும் சொர்ணலதாவின் துள்ளல் வெற்றிப் பாடல்களுக்கு எடுத்துக்காட்டுகள். ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் பாடிய ‘ஆட்டமா தேரோட்டமா…’ அவருக்கு மட்டுமல்லாமல், ஆடிய ரம்யா கிருஷ்ணனுக்கும் பெயர் வாங்கிக் கொடுத்த துள்ளல் பாடல்.

ஜோதிகா பாடுவதாக ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் வித்யாசாகர் இசையில், வைரமுத்துவின் வரிகளில் அவர் பாடிய ‘திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே…’ பாடல், திருமண நெருக்கத்தில் இருக்கும் இளம்பெண்களின் கனவுப் பாடலாக அமைந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து வரிகளில் ‘கருத்தம்மா’ படத்துக்காக ‘போறாளே பொன்னுத்தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு…’ பாடல் ஒலிப்பதிவானபோது, அதைப் பாடிய சொர்ணலதா உணர்ச்சிவசப்பட்டு அழுதிருக்கிறார். ‘இந்தப் பாடல் டெல்லிவரை போகும், உனக்கு தேசிய விருது கிடைக்கும்’ என்று சொல்லியிருக்கிறார் வைரமுத்து.

 கவி வாக்கு பலித்தது; சொர்ணலதாவுக்கு தேசிய விருது கிடைத்தது. தமிழக அரசின் விருதும் கூடுதல் புகழ் சேர்த்தது.மணிரத்னத்தின் ‘அலை பாயுதே’ படத்தில் பாடிய ‘எவனோ ஒருவன்…’ பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பின்னணிப்பாடகி விருது பெற்றார். ‘சின்னத்தம்பி’யில் பாடிய ‘போவோமா ஊர்கோலம்…’ பாடலுக்காகவும் தமிழக அரசின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருது கிடைத்தது. அதே பாடலின் மெட்டில் அமைந்த ‘நீ எங்கே என் அன்பே…’ பாடலும் ‘சின்னத்தம்பி’க்கு சிறப்புச் சேர்த்தது.

இளையராஜா இசையில், ‘தர்மதுரை’ படத்தில், ‘மாசி மாசம் ஆளான பொண்ணு…’, ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ‘குயில் பாட்டு வந்ததென்ன…’, ‘மன்னன்’ படத்தில் ‘ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்…’, ‘வீரா’ படத்தில் ‘மலைக்கோவில் வாசலிலே கார்த்திகை தீபம் மின்னுதே…’, ‘சத்ரியன்’ படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’ ஆகிய பாடல்கள் சொர்ணலதாவின் சொக்கத்தங்கக் குரலுக்கு சாட்சியம் சொல்பவை.

‘மொஹலே ஆஸம்’ இந்திப்படம் தமிழ் பேசியபோது, லதா மங்கேஷ்கர், சம்ஷத் பேகம் பாடிய பாடல்களைப் பாடினார். இசைவெளியீட்டு விழாவின்போது, இசைமேதை நெளஷத் அலி, சொர்ணலதாவைப் பாராட்டிப் புகழ்ந்தார்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘காதலர் தினம்’ படத்தில், ‘காதலெனும் தேர்வெழுதி…’, ‘பம்பாய்’ படத்தில், ‘குச்சி குச்சி ராக்கம்மா…’,

‘ஹம்மா ஹம்மா…’, ‘உயிரே’ படத்தில், ‘பூங்காற்றிலே உன் சுவாசத்தை…’, ‘ஜென்டில்மேன்’ படத்தில் ‘உசிலம்பட்டி பெண்குட்டி…’, ‘மே மாதம்’ படத்தில் ‘மெட்ராச சுத்திப் பாக்கப் போறேன்…’, ‘முதல்வன்’ படத்தில், ‘உளுந்து வெதைக்கையிலே…’ உள்ளிட்ட பாடல்கள் சொர்ணலதாவின் குரல்வளத்தால் பாட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தவை.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மற்றும் படகா மொழிகளில் 5000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் சொர்ணலதா. அவர் பாடிய ‘நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம்…’ என்கிற கிறிஸ்தவ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஒன்று. கஜல் கச்சேரி நடத்தவேண்டும் என்பது அவரது நிறைவேறாத லட்சியமாகப் போய்விட்டது.இன்னிசையால் இதயங்களைக் கட்டிப்போட்ட சொர்ணலதா, நுரையீரல் கோளாறு காரணமாக 37ஆம் வயதில் மரணமடைந்தார்.

நெல்லைபாரதி

அடுத்த இதழில்
கவியரசு கண்ணதாசன்