ஜனரஞ்சகம் + ஜனநாயகம் = சினிமா! -கமல்



கோடம்பாக்கத்து இளம் ஹீரோக்களுக்கு ‘டஃப்’ கொடுக்குமளவுக்கு ஃபுல் ஸ்பீடில் இருக்கிறார் கமல்ஹாசன். ‘உத்தமவில்லன்’ படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் ‘பாபநாசம்’. இது மலையாளத்தில் ஹிட்டடித்த ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக் என்பதால் இந்தப் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு. வழக்கம்போல் படத்தின் முன்னோட்டத்தில் மிரட்டியிருந்தார் கமல். சரி. படத்தைப் பற்றி கமல் என்ன சொல்கிறார்?

‘‘நான் எப்போதும் சொல்வது போல் இப்போதும் சொல்கிறேன். சினிமா என்பது கூட்டு முயற்சி. சினிமா ஜனரஞ்சகமானது மட்டுமல்ல, அதில் ஜனநாயகமும் இருக்கவேண்டும். படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தவர்கள் என்னைப் பற்றியே பேசுகிறார்கள். ஆனால் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது என்றால் ஆர்ட்டிஸ்ட், தொழில் நுட்பக்கலைஞர்கள் அனைவரின் ஒத்துழைப்பால்தான்.

அந்த வகையில் இதில் நடித்திருக்கிற அனைத்துக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இது எனக்கு பெருமையே தவிர பொறாமை இல்லை. இந்தப்படம் ஏற்கெனவே மூன்று மொழிகளில் வெளியாகி வெற்றி அடைந்துள்ளது. அதைத்தான் இப்போது எங்கள் கையில் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்த பிறகு, எடுத்த வரை திரையிட்டுப் பார்த்தபோது ஒரு நல்ல நடிகையை வீட்டுக்குள் முடக்கி வைத்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. அவ்வளவு சிறப்பாக கெளதமியின் நடிப்பு  இருந்தது. இது தனிப்பட்ட நலனுக்காக சொல்லவில்லை. உண்மையில் கவுதமி திறமையான நடிகை.

தமிழ்நாட்டில் பாபநாசம் என்ற பெயரில் நிறைய ஊர்கள் இருக்கின்றன. இது திருநெல்வேலியை பின்புலமாகக் கொண்ட கதை. இந்தப் படத்தில் நெல்லைத்தமிழ் பேசி நடித்திருக்கிறேன். நெல்லைத்தமிழ் பேசுவது அவ்வளவு சுலபம் இல்லை. எனக்கு அது பரிச்சயம் இல்லாததால் எழுத்தாளர்கள் ஜெயமோகன், சுகா ஆகிய இருவரும் சொல்லிக் கொடுத்தார்கள். இது நல்ல படம். ஆதரவு கொடுங்கள் என்று கேட்கமாட்டேன். ஏன்னா, நல்ல படத்தை ரசிகர்கள் நேர்மையாக ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு’’ என்கிறார் கமல்ஹாசன்.

ஒரிஜினல் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். ஜார்ஜ் பயஸ், ராஜ்குமார், ப்ரியா ராஜ்குமார், சுரேஷ் பாலாஜி ஆகியோர் தயாரித்திருக்கும் இந்தப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார்.

-எஸ்