கடன் வாங்கி தர்மம் செய்த கலைஞன்!



பாடகர், நடனக்காரர், நடிகர், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட சந்திரபாபுவைப் பற்றி நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா எழுதியிருக்கும் ‘கலையில் எரிந்த கலைஞன்’ புத்தகத்திலிருந்து ஒரு ட்ரெய்லர்...

சிவாஜி, சந்திரபாபுவின் உடலைப் பார்த்தவுடன் கண்ணீர் விட்டு அழுதார். தன் கையில் கொண்டு வந்திருந்த சேனல் 4 வாசனைத் திரவியத்தை தன் கையால் சந்திரபாபுவின் உடல் மீது தெளித்தார்.

தன் மனைவியை இன்னொருவனின் காதலி என்று அறிந்தபின் அவனோடு சேர்த்து வைப்பதில்லை. நமது பண்பாடு அதற்கு உடன்படாது. ஆனால், சந்திரபாபு தைரியமாக அதைச் செய்தார். ஷீலாவை அவர் விருப்பப்படி அவர் மனதிற்குப் பிடித்தவரோடு செல்ல, எல்லா உதவி களையும் செய்தார்.சந்திரபாபு எம்.ஜி.ஆரை எப்பொழுதும் ‘மிஸ்டர் எம்.ஜி.ஆர்!’ என்றுதான் அழைப்பார். எம்.ஜி.ஆரும் சந்திரபாபுவை ‘சார்!’ என்றுதான் அழைப்பார். திரையுலகில் எம்.ஜி.ஆர். ‘சார்!’ என்று அழைத்த ஒரே சக நடிகர் சந்திரபாபு மட்டும்தான்.

சந்திரபாபு என்றால் மனதில் தோன்றும் பிம்பம் இதுவாகத்தான் இருந்தது. வெள்ளை முழுக்கால் சட்டை, வெள்ளை அரைக்கை சட்டை, அவ்வப்போது கழன்று கழன்று, இடது கை மணிக்கட்டில் வந்து விழும் கைக்கடியாரம். வலது கை விரல் இடுக்கில் எப்போதும் அவர் புகைக்கும் 555 சிகரெட் எனப்படும் வெண்சுருட்டுப் பெட்டி, அதன் மீது ஓர் அழகிய லைட்டர்.

சந்திரபாபு படம் இயக்க முடிவு செய்தபின், எம்.ஜி.ஆருக்கு முன்பணம் கொடுக்க சாவித்திரியிடம் இருந்துதான் இருபத்தைந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தார். சாவித்திரி தமிழகத் திரையுலகம், ஏன், தென் இந்தியத் திரையுலகம் தவம் இருந்து பெற்று எடுத்த கலைத் தேவதை. சக கலைஞர்களின் இன்ப துன்ப நிகழ்வுகளில் உரிமையோடு கலந்து கொள்ளும் வெள்ளை மனம் கொண்டவர்.

நூறு ரூபாய் இன்றி கஷ்டப்பட்டு, சாப்பாட்டுக்கு வழியே இல்லாமல் நின்றிந்தபோது கூட, தனது நண்பன் தேங்காய் சீனிவாசன் கொடுத்த 200 ரூபாயை படிக்க பணம் கட்ட வழியில்லாத குழந்தைக்குக் கொடுத்துவிட்டு பசியோடு வெறுங்கையாய் வீட்டுக்குப் போனவர் சந்திரபாபு.சந்திரபாபுவுக்கு 555 சிகரெட் மீது ரொம்ப மோகம். கடைசி வரை அதை அவர் விடவில்லை. கையில் காசில்லாத அந்த நேரங்களில் சிகரெட் வாங்க சிவாஜி வீட்டுக்குப் போவார் சந்திரபாபு.

அழுத கண்களோடு சந்திரபாபு தூங்கிப் போனார். மறுநாள் அந்த அதிசயம் நடந்தேறியது. சந்திரபாபு உடல்நிலை தேறுகிறது என்று மருத்துவர்கள் கண்டனர். மனிதர்களால் கூடாதது தேவனால் கூடும் என்ற கிறித்துவ மறைநூல் வாசகம் சந்திரபாபுவின் மனதில் பசுமரத்து ஆணி போல பதிந்து, தனது உயிரைக் காத்த மேரியன்னையை நெஞ்சுக்குள் வைத்துப் போற்றி மகிழ்ந்தார்.

அதனால், எந்தச் சூழலிலும் ஜெபம் செய்வதை அவர் கைவிடவில்லை.ஆசிரியர் - நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, விலை - ரூ. 159, பக்கம் - 176, தோழமை வெளியீடு: 19/665, 48ஆவது தெரு, 9ஆவது செக்டார், கே.கே.நகர், சென்னை-78.