இந்தியாவின் மோஸ்ட் வான்டட் அம்மா!



‘நீ தானே என் பொன் வசந்தம்?’ படத்தில் ஜீவாவின் இளமையான அம்மாவாக நடித்திருந்தவரை நினைவிருக்கிறதா?யெஸ். அவர்தான் அனுபமா குமார்.நாற்பத்திரண்டு வயதாகும் அனுபமாவுக்கு மாடல், பத்திரிகையாளர், டிவி தொகுப்பாளர் என்றெல்லாம் ஏராளமான முகங்கள் உண்டு.

கோயமுத்தூரில் பிறந்த இந்த பச்சைத் தமிழச்சி, சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானது 2004ல் ‘க்யூன்! ஹோ கயா நா’ என்கிற இந்திப் படத்தில். கடந்த 12 ஆண்டுகளில் இந்தி, தெலுங்கு, தமிழ் என்று இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். ‘அழகான அம்மா வேண்டுமா? கூப்பிடு அனுபமா குமாரை’ என்கிற அளவுக்கு தென்னிந்தியாவின் மோஸ்ட் வான்டட் அம்மாவாக உருவெடுத்திருக்கிறார்.

‘பொக்கிஷம்’, ‘வம்சம்’, ‘முகமூடி’, ‘துப்பாக்கி’, ‘நீர்ப்பறவை’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘மூடர் கூடம்’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்திருப்பவர், அடுத்து இந்தியில் ஒரு விவகாரமான சப்ஜெக்ட் கொண்ட படத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்பே ‘My son is gay’. டைட்டிலை சொல்லும் அம்மா வேடம்தான் அனுபமாவுக்கு. கதை என்னவென்று டைட்டிலே சொல்லிவிட்டது இல்லையா?

- யுகி