உலகநாயகனின் பேர் சொல்லும் பிள்ளை!



ஹீரோயினிஸம்

அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையில் நீடித்து தேசிய விருதுகளையும், சர்வதேச அங்கீகாரங்களையும் பெற்றவர் அப்பா, உலகநாயகன் கமல்ஹாசன். அம்மா சரிகாவும் அந்தக் காலத்து பாலிவுட் நடிகை.

அக்கா ஸ்ருதி, இன்றைய தேதியில் தென்னிந்தியாவின் டாப் மோஸ்ட் நடிகை. பெரியப்பா சாருஹாசனும் தேசிய விருது பெற்ற நடிகர். இன்னொரு பெரியப்பா சந்திரஹாசன் தயாரிப்பாளர். பெரியப்பா மகளான சுஹாசினியும் புகழ்பெற்ற நடிகை மற்றும் இயக்குநர்.

இன்னொரு பெரியப்பா மகள் அனு ஹாச னும் பிரபலமான நடிகைதான். மாமா மணிரத்னம், இந்தியாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர். இவ்வளவு பலம் வாய்ந்த சினிமா குடும்பப் பின்னணி இதுவரை யாருக்கும் வாய்த்ததில்லை. அப்படியிருந்தும் நடிப்பையும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய புகழ், பணத்தையும் தள்ளிவைத்து பார்க்கக்கூடிய துறவு மனப்பான்மைதான் அக்‌ஷராவை நிஜமான ஹீரோயினாக்குகிறது.

ஆணழகனான கமல் + பேரழகி சரிகாவின் காம்பினேஷனில் பிறந்தவரல்லவா? அக்‌ஷராவின் அழகுக்கு சொல்லவும் வேண்டுமா? அபாரமாக நடனம் ஆடுவார். அற்புதமாகப் பாடுவார். மிகச் சிறப்பாக நடிப்பார். அத்தனையும் பிறவித் திறமையாகக் கிடைத்தும், முறைப்படி பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை சினிமாவுக்கு முற்றிலுமாகத் தகுதியானவராக பதினெட்டு வயதிலேயே உயர்த்திக் கொண்டார்.

ஸ்ருதியைத் தொடர்ந்து அக்‌ஷராவையும் ஹீரோயினாக்க இந்தியாவின் பெரிய இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ஹீரோக்களும் போட்டி போட்டார்கள். அப்போதே களத்தில் குதித்திருந்தால் பாலிவுட், கோலிவுட், சாண்டல்வுட், டோலிவுட் என்று... ஏன் ஹாலிவுட் வாய்ப்புகூட கிடைத்திருக்கலாம்... இந்த 24 வயதிற்குள்ளாகவே 50 படங்களை முடித்திருக்கலாம். ஃபிலிம்பேர் மற்றும் தேசிய விருதுகளைக் குவித்திருக்கலாம்.

ஆனால் அக்‌ஷரா, ஒரு உதவி இயக்குநராக ஸ்க்ரிப்ளிங் பேடை கையில் எடுத்துக் கொண்டு காடு, மலைகளில் வெயிலிலும், மழையிலும் அலைந்துகொண் டிருக்கிறார். “என்னோட பொண்ணு முதன்முதலா பத்தாயிரம் சம்பளம் வாங்கியிருக்கா...” என்று அவர் உதவி இயக்குநராகப் பெற்ற முதல் சம்பளம் பற்றி தன்னுடைய நண்பர் ஒருவரிடம் கமல் பெருமையாகச் சொன்னாராம். ஒவ்வொரு படத்துக்கும் கோடி கோடியாக சம்பாதிக்கக்கூடிய கமலுக்கு தன் மகள் உதவி இயக்குநராகப் பெற்ற முதல் சம்பளம்தான் சந்தோஷத்தையும், பெருமிதத்தையும் கொடுத்திருக்கிறது.

கடந்த ஆண்டு ‘ஷமிதாப்’ படத்தில் நடிகையாக அறிமுகமானார் அக்‌ஷரா. அவரது நடிப்பைப் பாராட்டாத விமர்சகர்களே இல்லை. ஒருவழியாக உலகநாயகனின் மகள் நடிக்க வந்துவிட்டார் என்று, பெரிய நடிகர்கள் அத்தனை பேருமே தங்கள் அடுத்த பட வாய்ப்பை அவருக்காக ரிசர்வ் செய்து வைத்திருந்தார்கள். அக்‌ஷராவோ, அத்தனையையும் மறுத்துவிட்டு தன்னுடைய அப்பா இயக்கும் படத்துக்கு உதவி செய்ய அவரிடமே உதவி இயக்குநராக ‘சபாஷ் நாயுடு’ படத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.

ஒரு சம்பவத்தைச் சொல்லி சினிமாத்துறையினர் சிலாகிக்கிறார்கள். ‘சபாஷ் நாயுடு’ படத்தின் தொடக்கவிழா, நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்ட ஆரம்பிப்பதற்கு முன்னர் அந்த மைதானத்தில் நடந்தது. பந்தல் கட்டும் தொழிலாளி ஒருவர் உயரம் போதாமல் எக்கி எக்கி தவித்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட அக்‌ஷரா, உடனே ஒரு நாற்காலியை எடுத்துக்கொண்டு ஓடிப்போய், “நீங்க ஏறி நின்னு கட்டுங்கண்ணா..

நான் பத்திரமா பிடிச்சிக்கிறேன்” என்று நாற்காலியை கெட்டியாக பிடித்துக் கொண்டாராம். பந்தல் தொழிலாளி இதை தன்னுடைய சகாக்களிடம் யதார்த்தமாகச் சொல்ல, செய்தி அப்படியே பரவி கமலின் காதுவரைக்கும் சென்றிருக்கிறது. நெகிழ்ந்து போயிருக்கிறார் கமல். எழுபதுகளில் தான் சினிமாத்துறையில் முன்னேறுவதற்காக எப்படிப்பட்ட கஷ்டமான வேலைகளை செய்தோமோ, அதே சிரமத்தை ஏற்க தயாராக இருக்கும் தன் மகளை நினைத்து கண்கலங்கி பெருமைப்பட்டாராம்.

நடிகை என்றால் கேமராக்களின் ஃப்ளாஷ் ஒளி மின்ன, உயர் ரக சொகுசுக் காரில், ரசிகர்கள் கூட்டம் மொய்க்க ஒய்யாரமாக நடந்து வரவேண்டும் என்பது வழக்கம். இதற்கான வாய்ப்புகள் அத்தனையும் இருந்தாலும், கோடம்பாக்கத்தின் உதவி இயக்குநர் ஒருவர் எப்படியிருப்பாரோ அப்படியே தன்னை தகவமைத்துக் கொண்டு தனித்து நின்று ஒளிர்கிறார் அக்‌ஷரா.

- மீரான்