நாயகி



உல்லாசத்துக்கு தடை போடும் பேய்!

வாரத்துக்கு ஒரு பேய்ப்படம் என்கிற தமிழ் சினிமாவின் கோட்டா சிஸ்டத்தின்படி வெளியாகியிருக்கும் படம். உலகிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட பேய்ப்படத்தில் தொடங்கி, லேட்டஸ்ட் படம் வரையில் இருக்கும் அத்தனை சமாச்சாரங்களும் இந்தப் படத்திலும் இருக்கிறது.ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய பங்களா.

இங்கே வார இறுதியில் தன் காதலி சுஷ்மாவுடன் உல்லாசத்துக்காக வருகிறார் சத்யம் ராஜேஷ். ‘அதற்காக’ சுஷ்மாவை நெருங்குபோதெல்லாம், பேயாக வந்து த்ரிஷா ‘மூட் அவுட்’ செய்கிறார். த்ரிஷா யார், ஏன் பேயாக அலைகிறார், உல்லாசப் பறவைகள் ஜாலியாக இருக்க முடிந்ததா என்கிற கேள்விக்கெல்லாம் பரபர கிளைமேக்ஸ் விடையளிக்கிறது.

படத்தின் திரைக்கதையை செதுக்குவதை விட்டுவிட்டு த்ரிஷாவை எவ்வளவு அழகாக ரசிகர்களுக்கு காட்டலாம் என்பதில் கூடுதல் உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர். சத்யம் ராஜேஷ், சுஷ்மா, மனோபாலா, கோவைசரளா, பிரம்மானந்தம் ஆகியோர் அவரவர் வேலையை சரியாகவே செய்திருக்கிறார்கள்.

பேய்ப்படங்களுக்கே உரிய மிரட்டல் இசையைத் தர தவறிவிட்டார் இசையமைப்பாளர் ரகு. ஒளிப்பதிவு ஓக்கே. த்ரிஷாவை இளமையாகக் காட்டிய விதத்தில் கவனிக்க வைக்கிறார் இயக்குநர் கோவி.